Last Updated : 03 Apr, 2016 12:58 PM

 

Published : 03 Apr 2016 12:58 PM
Last Updated : 03 Apr 2016 12:58 PM

வானவில் பெண்கள்: நெகிழ வைத்த சென்னை மக்கள்!

சென்னையைக் கலங்கடித்த பெருவெள்ளத்தை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியாது. நகரமே வெள்ளத்தில் மூழ்கியிருக்க, அந்தத் துயரத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்த தன்னார்வலர்களையும் மீட்புக்குழுவினரின் பங்களிப்பையும் புறந்தள்ளிவிட்டுச் சென்னை வெள்ளம் குறித்த சித்திரம் முழுமையடையாது. வெள்ளத்தில் நீந்தியும் படகுகள் மூலமும் மக்களை மீட்ட தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினரின் சேவை மகத்தானது. அந்தப் படையைத் தலைமையேற்று வழிநடத்தியவர் ரேகா நம்பியார்.

அரக்கோணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் நான்காவது பட்டாலியன் படைப் பிரிவின் கமாண்டண்ட் இவர். இந்தப் படைப் பிரிவில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் இவர்! இயற்கைச் சீற்றங்களால் தென்னிந்தியாவில் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இவர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். போதிய படை இல்லையென்றால் மற்ற மையங்களில் இருந்தும் வீரர்களை வரவழைப்பார்கள். தன் உயிரைப் பொருட்படுத்தாது பிற உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சவாலும் நிறைந்த இந்தப் பணி தனக்கு நிறைவு தருவதாகச் சொல்கிறார் ரேகா.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பள்ளிப்படிப்பைச் சென்னையிலும் கல்லூரிப் படிப்பை டெல்லியிலும் முடித்தார். ரேகாவின் தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இந்திய ஆட்சிப் பணித் துறையில் பணியாற்றிய தந்தையைப் பார்த்து வளர்ந்தவர், தானும் அதுபோன்றதொரு துறையில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியக் கனவாக வகுத்துக்கொண்டார். அதற்காகவே நிறைய படித்துத் தன் கனவை மெய்ப்படுத்திக்கொண்டார்!

“நான் இந்தத் துறையில இருக்கறதை பெரும் பாக்கியமா நினைக்கிறேன். அடுத்தவங்களுக்கு உதவி செய்ய கிடைச்ச ஒரு வாய்ப்பாதான் இதை நான் பார்க்கிறேன். அதனால ஒவ்வொரு நொடியும் சந்தோஷத்துடன் வேலை செய்யறேன” என்கிற ரேகாவின் வார்த்தைகளில் அதிகாரிக்கு உரிய கம்பீரமும் சேவை மனதின் கருணையும் ஒருங்கே வெளிப்படுகின்றன.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இவர் தலைமையில் 36 குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் அரக்கோணத்திலிருந்து வந்தனர்.

“இங்க வந்ததும்தான் நிலைமை ரொம்ப மோசமா இருந்தது தெரிஞ்சது. இன்னும் கொஞ்ச வீரர்களை அனுப்புமாறு என் மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தேன். எங்கள் குழுவைச் சேர்ந்த வீரர்கள் 194 படகுகள் மூலம் கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கு மேற்பட்டோரை மீட்டோம். தண்ணீரில் தத்தளித்த மனிதர்களை மட்டுமல்ல, செல்லப் பிராணிகளையும் காப்பாற்றினோம்! ஆறறிவு இல்லையென்றாலும் அவையும் உயிருள்ளவைதானே” என்று கேட்கும் ரேகா நம்பியார், தங்கள் குழுவினர் 50-க்கும் மேற்பட்ட நாய்களை மீட்டதாகச் சொல்கிறார்.

“அரசு அலுவலர்களான நாம், நம் கடமையை ஒழுங்காகச் செய்யணும். மக்களுக்குச் சேவையாற்றும் பதவியில் இருக்கும் நமக்கு நிறைய பொறுப்புகள் இருக்குன்னு அப்பா அடிக்கடி சொல்வார். அப்பா சொன்ன வார்த்தைகள்தான் என்னை வழிநடத்திட்டு இருக்கு” என்கிற ரேகா நம்பியார், இந்தத் துறைக்கு வந்து பதினேழு ஆண்டுகளாகின்றன. அஸ்ஸாம், ஒடிஷா, ஜம்மு காஷ்மீர், நேபாளம் என்று இதுவரை பல மாநிலங்களில் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்ட இவருக்குச் சென்னை வெள்ள மீட்பு, 14-வது அனுபவம்.

“சென்னையில் பணியாற்றியதை மறக்கவே முடியாது. நிவாரணப் பணிகளின் போது உணவுப் பொட்டலங்கள் வழங்கினோம். அப்போ, ‘எங்களுக்குப் போதும். பசியோட இருக்குறவங்களுக்கு கொடுங்க’ன்னு சிலர் சொன்னாங்க. துயரத்திலும் அடுத்தவர்களுக்கு உதவ நினைத்த அந்த அன்பு எங்களை வியக்கவைத்தது” என்று நெகிழ்கிறார் ரேகா. இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் அவர்கள் பல தடைகளையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.

“ஆனால் பெண்களால் இவை அனைத்தையும் கடந்து சாதிக்க முடியும். தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம். பெண்களின் அனுமதியில்லாமல் யாரும் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது” என்று முத்தாய்ப்பு வைக்கிறார் ரேகா நம்பியார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x