

சமகாலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே சதிர் நடனக் கலைஞரான 85 வயது விராலிமலை முத்துக் கண்ணம்மாளுக்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது அக்கலைக்கான ஒரு கௌரவம் என்றாலும் காலம் கடந்த இந்தக் கௌரவம் இவ்வளவு வருடங்களாக அக்கலை எதிர்கொண்டுவரும் புறக்கணிப்புகளையே நினைவுபடுத்துகிறது தன்னுடைய ஏழாவது வயதில் விராலிமலை சுப்பிரமணியசாமி கோயிலில் முருகக் கடவுளுக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்டவர் அப்பாரம்பரியத்தைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள்.
முந்தைய காலத்தில் பொட்டுக்கட்டி கோயில்களில் கடவுளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட இவர்கள், கோயில்களில் கடவுள் வழிபாடு செய்தபடி சதிர் என்னும் தனித்துவமான நடனத்தை ஆடுவர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தவர் இன்று தேவரடி யார் மரபின் கடைசி நபராக இருக்கிறார். காலை மாலை இரு வேளையும் 200 படிகள் ஏறி சுப்ரமணிய சாமியை வணங்கி, பாடல் பாடி சதிர் நடனம் ஆடுவதே தன் இறைப்பணியாகக் கருதி வாழ்ந்துவந்தவர் முத்துக் கண்ணம்மாள்.
சதிர் கலைக்கு அங்கீகாரம்
பெண்களைக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் தேவதாசி முறை 1947-ல் ஒழிக்கப்பட்ட பிறகு இது அரங்குகளில் ஆடக்கூடிய கலையாக வடிவாக்கம் பெற்றது. இன்றைய பரதநாட்டியக் கலைஞர்களில் பலரும் கோயில்கள் நிறைந்த விராலிமலை, பந்தநல்லூர் போன்ற ஊர்களின் பாரம்பரிய நட்டுவாங்கம் மற்றும் சதிர் நடன வடிவத்தில் பயிற்சி பெற்றவர்கள்தாம். பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியமும் முத்துக் கண்ணம்மாளின் தந்தையான ராமச்சந்திரனிடம் விராலிமலை குறவஞ்சியைக் கற்றுக்கொண்டு சென்றவர்தான். “சதிர் நடனத்தை நாங்கள் பாடிக்கொண்டே ஆட வேண்டும். ஆனால், நட்டுவனார் பாடினால்தான் பரத நாட்டியம் ஆட முடியும்” என்கிறார் முத்துக் கண்ணம்மாள். இவ்வாறு பரதக் கலைக்கு முன்னோடியான சதிர் நடனக் கலை இன்று அழியும் நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த பத்ம விருது நம்முடைய பாரம்பரிய ஆடல் கலைக்கு அளிக்கப்பட்ட ஒரு கவுரவமாகும்.
புறக்கணிக்கப்பட்ட கலை
இக்கலை வரும் தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்று முத்துக் கண்ணம்மாள் தன்னுடைய முதுமைக் காலத்திலும் பல ஊர்களுக்கும் பயணம் செய்து இக்கலையின் நுட்பங்கள் குறித்தும், விரிவான தன்மைகள் குறித்தும் உரையாடிவருகிறார். சில வருடங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த நாடகக் கலைஞர் தரணீதரன் ஏற்பாடு செய்திருந்த ஒரு நடனப் பயிற்சிப் பட்டறைக்கு ஒரு பார்வையாளனாக நானும் சென்றிருந்தேன். அந்த வயதிலும் அவர் இளம் பரதநாட்டியக் கலைஞர்களுக்குச் சதிர் நடனத்தின் சில அடவுகளைச் செய்து காட்டி விளக்கம் அளித்ததைப் பார்த்தேன். மாலையில் அவரது நடன நிகழ்ச்சியும் இருந்தது. சதிர் நடனக்கலை மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடும், புரிதலும், உழைப்பும் அந்த அரங்கில் சிறப்பாக வெளிப்பட்டன.
இன்று நாம் பெருமை கொள்ளும் கலைச் செல்வங்களைப் பேணிப் பாதுகாத்துத் தந்தவர்கள் தேவதாசி மரபில் வந்தவர்களே. தஞ்சையை ஆண்ட மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்த தஞ்சை நால்வர்தான் ஆலயத்தில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக வடிவமைத்துக் கொடுத்தவர்கள். நட்டுவாங்கக் கலைஞர்களையும், வாத்தியக் கலைஞர்களையும் இணைத்து அவர்கள் உருவாக்கிய இசை நடனத் தொகுப்பைப் பின்பற்றியே பிற்காலங்களில் பல கலைஞர்கள் உருவாகினர். பல்வேறு சமூகக் காரணிகளால் தேவதாசி பாரம்பரியத்தின் மீது பிற்காலங்களில் உருவாக்கப்பட்ட சமூக இழிவுப் பார்வையின் காரணமாகப் பல கலைஞர்களுடைய கலை மேதமை இங்கு சரியாக உணரப்படவில்லை. விராலிமலை முத்துக் கண்ணம்மாளும் இத்தகைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டு பயணித்தவர்தான்.
சுமத்தப்பட்ட அவப்பெயர்
அந்தச் சந்தர்ப்பத்தில் தேவதாசி மரபில் வந்த நடனக் கலைஞர் பால சரஸ்வதிக்கும், பரத நாட்டியக் கலைஞர் ருக்மினிதேவி அருண்டேலுக்கும் பரதநாட்டி யத்தைத் தூய்மைப்படுத்துவது குறித்தும், சதிர் நடனத்தில் வெளிப்படும் சிருங்காரம் குறித்தும் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றன. ருக்மினிதேவி அருண்டேல் சிருங்கார பதங்களை மட்டுப்படுத்திப் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். பாலசரஸ்வதி சிருங்காரத்தை இழந்த கலை வறட்டுத்தனமானது என்றார். அதை நீக்குவது என்பது பாரம்பரிய இசை நாட்டியக் குடும்பங்களை இக்கலையிலிருந்து வெளியேற்றுவது என்றார். இன்று பரத நாட்டியம் என்பது மேல்தட்டு வர்க்கத்தின் அந்தஸ்து அடையாளமாக, ஒரு அலங்காரப் பொருளாக மெல்ல மாறிக்கொண்டிருக்கும் நிலையில் தேவதாசிகள் உருவாக்கிய நாட்டிய மரபுகள் பாதுகாக்கப்படுவதே அக்கலை உயிர்ப்புடன் இயங்க வழிவகுக்கும். தான் கற்ற இசையை, நாட்டியத்தை, ஓவியத்தை, பிற நுண்கலைகளைச் சமூகத்துக்கு அர்ப்பணித்துத் தம் வாழ்நாளைக் கழித்தவர்கள் இன்று அவற்றுக்கு உரிமை இல்லாத நிலையில் வெறும் அவப்பெயரைச் சுமக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேல்தட்டு இருட்டடிப்பு
அவைதிக இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணி மேகலை போன்றவற்றில் ஆடற்கணிகையர் குறித்த அனுதாபம் உள்ளது. அவர்களுடைய கலைத்திறமை போற்றப்படுகிறது. மாதவி, மணிமேகலை, அம்ரபாலி போன்றவர்கள் பிக்குணிகளாக ஏற்றுக்கொள்ளப்படு கிறார்கள். நம்முடைய பாணர் மரபிலும் வைதிகம் சாராத ஆடல், பாடல் சார்ந்த இயற்கைநெறி மரபு இருந்தது. நம்முடைய வழிபாட்டு முறையின் ஓர் அங்கமாக இசையும், நடனமும் பல காலமாக இருந்துவருகின்றன. நடனப் பெண் என்பது கோயில் கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக உள்ளது. ஆகம வழிப்பட்ட கோயில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5-6-ம் நூற்றாண்டிலேயே இம்மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக் காலத்திலேயே கோயில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்கிற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என்று தேவாரம் கூறுகிறது. கம்பர் தன்னுடைய ராமாயண அரங்கேற்றத்துக்கு அஞ்சனாட்சி என்கிற தேவதாசி யிடம் சாற்றுக்கவி பெற்றார். சோழர் களுக்குப் பிறகு கோயில் வழிபாட்டுச் சூழல் சிதைவடைந்தபோது தேவதாசிகளின் வாழ்க்கையும் நசிந்து துன்பங்களுக்குள்ளானது. தேவதாசி முறை மற்றும் அதன் வீழ்ச்சியின் பின்விளைவு களாகவே தேவதாசி குறித்த பெண் இழிவுக் கருத்துக்கள் சமூகத்தில் வேரூன்ற ஆரம்பித்தன.
புதிர்களும், அவலங்களும், அழகுகளும் நிறைந்து சமூகத்தின் அவமதிப்புக்கு உள்ளான தேவதாசி மரபின் சிக்கலான இழைகள் சமூகத்தின் மேலான புரிதலுக்கும், பரிசீலனைக்கும் உரியவை. இம்மரபில் தோன்றி இக்கலையை ஆழ்ந்து பற்றிக் கொண்டு இடையறாது இக்கலையுடன் பயணித்துவரும் முத்துக் கண்ணம்மாள் என்கிற இக்கலைஞருக்கு இவ்விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், இந்தத் தாமதமும், தொடர்ந்த ஊடக மற்றும் மேல்தட்டு இருட்டடிப்புகளும் நம் கலாச்சார சூழல் குறித்த பல பரிசீலனைகளை முன்வைக்கின்றன. நம்முடைய கிராமிய நாட்டுப்புறக் கலைகளும் இது போன்றதொரு நிலையையே சந்தித்துவருகின்றன.
கட்டுரையாளர், எழுத்தாளர்., நாடகவியலாளர்
தொடர்புக்கு: velirangarajan2003@yahoo.co.in