

பெண்ணுரிமையும் பெண் சுந்தந்திரமும் இங்கே செழித்தோங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறதே தவிர உண்மையில் நம் நாட்டில் நடப்பது என்ன? ‘இரண்டாம் பாலினம்’ (The Second Sex) என்ற புத்தகத்தை எழுதிய பிரெஞ்சு அறிஞர் சீமோன் தி பூவா, “ஒரு பெண் பெண்ணாகப் பிறப்பதில்லை. மாறாக அவள் பெண்ணாக உருவாக்கப்படுகிறாள்” என்று சொல்லியிருக்கிறார். நம் இந்திய மண்ணில் இன்றுவரை இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பெண் குழந்தையை அவரவர் சாதிக்கு ஏற்றாற்போல, குடுபத்துக்கு ஏற்றாற்போல, பண்பாட்டுக்கு ஏற்றாற்போல என உருவாக்குகின்றோம்.
காதலுக்கு இடமில்லை
பெரிய விருட்சத்தைச் சின்னச் சட்டியில் வளர்க்கும் போன்சாய்போலப் பெண்களின் வேர்களை வெட்டி, கிளைகளை நறுக்கி, உருவத்தையே குறுக்கி வளர்க்கிறோம். எல்லாவற்றிலும் எப்போதும் அவர்கள் ஆண்களைச் சார்ந்தே வாழும்படி பார்த்துக்கொள்கிறோம். இங்கு ஒரு பெண் தன் கல்வி, வேலை, உடை, பொது வாழ்க்கை என எதையும் தனிச்சையாகத் தேர்வு செய்துவிட முடியாது. திருமணம் என்னும் மிகப் பெரிய முடிவுகளை எடுப்பது ஆண்களே. அங்கே பெண்ணுக்கும் அவளுடைய தாய்க்கும் உரிமை இல்லை. ஏனெனில் திருமணம் என்பது இங்கே ஒரு குடும்பத்தின், சாதி கவுரவத்தின் அடையாளம். இங்கு காதலுக்கு இடமில்லை. சாதி மீறிய காதல் சாத்தியமில்லாததது. அதுவும் ஒரு உயர் சாதிப் பெண், சாதிய அடுக்கில் தன்னைவிடக் கீழே இருக்கும் ஆணைத் தேர்வு செய்வது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. அப்படியே மீறி நடந்தாலும் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் நிலைதான். எல்லா சாதி மறுப்புத் திருமணங்களும் கொலையில் முடிவதில்லை என்றாலும் தண்டிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல், புறக்கணிப்பு ஆகியவை தொடரத்தான் செய்கின்றன.
கணவன் கொலையுண்ட பின்...
பிறந்த வீட்டைப் புறக்கணித்து, போராடி, ஏறக்குறைய எல்லாவற்றையும் இழந்து இந்தப் பெண் யாருக்காக வந்தாளோ அவனே கொலைசெய்யப்பட்ட பின்பு இந்தப் பெண் வேரறுந்த மரம் போல ஆகிறாள். தன் கணவன் கொல்லப்பட்டதற்குத் தானே காரணமாகிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஒருபுறம், கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற கோபம் மறுபுறம். ஆனால் காலப் போக்கில் இந்தக் கோபம் வடிந்து, இயலாமை ஏற்பட்டுவிடும். காவல் நிலையத்துக்கு உடன் வரக்கூட ஆள் இல்லாமல் தள்ளாடும் நிலைக்கே பெரும்பாலான பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
மகனே போன பிறகு அவனுடைய கொலைக்குக் காரணமான காதலையோ காதலியையோ ஆண் வீட்டில் கொண்டாடுவதற்கான வாய்ப்பு குறைவு. அப்படியே ஏற்றுக்கொண்டாலும் தங்கள் மகனுக்கு நேர்ந்த கதி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சமே அவர்களை ஆட்டிப்படைக்கும். அதனாலேயே பல நேரங்களில் வேறு வழியின்றிப் பிறந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் பெண்கள். அங்கே பாதுகாப்புக்குப் பதில் சித்ரவதையையே அனுபவிக்க நேருகிறது. பெற்றோராகப் பார்த்து ஒருவனைத் தேர்ந்தெடுத்தால் அது திருமணம், பெண்ணே தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அது பாலுணர்வு வேட்கை எனப் பெற்றோர் கருதும் நிலை இருக்கிறது. அந்தப் பெண்ணைத் தகாத வார்த்தைகளால் கொன்றுவிடுவார்கள். சில பெண்கள் இந்தக் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுவிடுவதும் நடக்கத்தான் செய்கிறது.
ஜனநாயகக் கடமை
சாதி ஆணவக் கொலையால் இறந்துபோகிறவருக்கு நீதி கிடைப்பது எத்தனை அவசியமோ அதே அளவுக்கு உயிரோடு இருக்கும் பெண்ணின் வாழ்வுக்காகப் போராடுவதும் அவசியம். சாதி ஆணவக் கொலையால் கணவனைப் பறிகொடுத்த பெண்களுக்கு இழப்பீடு தருவதோடு அவர்களின் கல்வி தொடர்வதற்கும் வழிவகை செய்துதர வேண்டும். சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டால்தான் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகள் குறையும். சாதி மறுப்புத் திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டும். இதுபோன்ற திருமணங்களும் சாதி ஒழிய ஒரு காரணம் என்பதால், அவர்களின் வாழ்வாதாராம் உறுதிசெய்யப்பட வேண்டும். அரசு வேலை, சலுகைகள், ஊக்கத் தொகைகள் என சாதியற்ற சமூக உருவாக்கத்துக்கு அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தேர்தல் நேரம். கட்சிகள், சாதி ரீதியாகச் செயல்படாமல் சாதியற்ற சமூகத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்படுவதே அரசியல் நாகரிகத்தின் அடையாளமாக இருக்கும். வாக்களிக்குமாறு கோரி நம்மிடம் வரும் கட்சிகளிடமும் வேட்பாளர்களிடமும் சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்குமாறு நாம் கோர வேண்டும். சாதியற்ற சமூகத்தை உருவாக்கும் முனைப்பில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுப்பது நம் ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்வதற்கான வழியாக இருக்கும்.