பெண்களைச் சுற்றி.. -மாற்றம்: பெண்ணுக்கும் சமமான கல்வி

பெண்களைச் சுற்றி.. -மாற்றம்: பெண்ணுக்கும் சமமான கல்வி
Updated on
1 min read

அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் போன்ற துறைகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று இந்தக் காலத்திலும் பெரும்பாலானோர் நினைத்திருக்கிறார்கள். அதைத் தங்கள் குடும்பங்களிலும் செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியப் பெண்களில் 14 சதவீத்தினர் மட்டுமே STEM (Science, Technology, Engineering, Mathள) துறைகளில் பங்களிப்பதாக ஐ.நா. சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. குடும்பங்களில் நிகழும் பாலினப் பாகுபாடே இதற்குக் காரணம். இந்தப் பாகுபாட்டைக் களைந்து, பெண்களையும் அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை Olay நிறுவனம் அறிவித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நான்கு துறையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவிகளுக்கு நிதிநல்கை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த விருக்கிறது. LEAD நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்மூலம் இந்தியா முழுவதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள் சர்வதேசத் தரத்திலான கல்வியைப் பெற முடியும் என Olay நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்விதத்தில் #STEMTheGap என்கிற காணொலியையும் (https://bit.ly/3tNbFro) அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நம் இந்தியக் குடும்பங்களின் மனநிலை கச்சிதமாகக் காட்சிப்படுத்தப்படுள்ளது. எங்கெல்லாம் நாம் பெண் குழந்தைகளைக் குறைத்து மதிப்பிட்டுப் புறக்கணிக்கிறோம் என்பதைச் சிறு சிறு காட்சி அமைப்புகள் மூலம் உணர்த்தியுள்ளனர். பெண்களுக்கு நாம் வழங்குகிற கல்விதான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று சொல்லும் ‘ஓலே’ நிறுவனம், 2021 வரை ஆறு மாநிலங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியருக்குக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தியதோடு, அவர்களின் இணையவழிக் கல்விக்கு உதவும் வகையில் டேப்லெட், இணைய வசதி போன்றவற்றையும் செய்துகொடுத்துள்ளது. தற்போது பாலினச் சமத்துவம் நிறைந்த கல்வியை வலியுறுத்தும் இந்தக் காணொலியைப் பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டு, ‘சமன்பாடைச் சரிசெய்வோம்’ என்று மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in