Last Updated : 10 Apr, 2016 01:42 PM

 

Published : 10 Apr 2016 01:42 PM
Last Updated : 10 Apr 2016 01:42 PM

எழுத்தை ஆயுதமாக்கியவர்

அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் அனுபவிக்கும் துயரங்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தாலும், அதைப் பற்றி அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கறுப்பின அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு வழிகோலிய உள்நாட்டுப் போருக்கு முறைமுகத் தொடக்கமாகவும் அமைந்தது ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் அம்மையார் எழுதிய ‘அங்கிள் டாம்ஸ் காபின்’ என்ற நாவல்.

அதே போன்றதொரு ஒப்புமையைத் தமிழகத்திலும் பார்க்க முடியும். அந்த நூல் ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’, எழுதியவர் திராவிட இயக்கப் பெண் முன்னோடி மூவலூர் ராமாமிர்தம், வெளியான ஆண்டு 1936. தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டக் கருவியாக அந்த நாவல் பயன்படும் என்று நம்பியே ராமாமிர்தம் அந்த நாவலை எழுதினார். ஒரு படைப்பைப் போராட்டக் கருவியாக நினைத்த முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர் அவராகவே இருக்க முடியும்.

தன் வரலாறு

இந்த நாவலைப் பற்றிய ராமாமிர்தம் அம்மையாரே குறிப்பிடுவது என்னவென்றால், “புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல். இளைஞர்கள் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது மட்டுமல்லாமல், மனைவி மக்களையும் திண்டாடச் செய்வதைத் தடுக்க வேண்டும்” என்பதுதான்.

இந்த நாவலை அவர் எழுதியதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. ‘பொட்டுக் கட்டுதல்’ எனும் கொடுமையை நீண்டகாலமாக அனுபவித்துவந்த சமூகத்தில் பிறந்தவர் மூவலூர் ராமாமிர்தம். வெகுமக்கள் இலக்கிய வகையைச் சேர்ந்த இந்தப் படைப்பு, ஒரு தன் வரலாற்று நாவல்.

விவாதத்துக்குப் பின்

1920-களின் பிற்பகுதியில் இருந்து தேவதாசி முறை ஒழிப்பு குறித்த போராட்டங்களும் மதராஸ் மாகாணச் சட்டப்பேரவையில் விவாதங்களும் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் போராட்டத்தை விரைவுபடுத்தும் வகையில்தான் ராமாமிர்தம் நாவலை எழுதினார்.

நீண்ட காலம் விவாதத்தில் இருந்துவந்து, கடைசியில் ஒரு வழியாக நாடு விடுதலை பெற்ற பிறகு சென்னை மாகாணச் சட்டப்பேரவையில் ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ 1947-ல் நிறைவேறியது. இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அதை அறிமுகப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

ஆனாலும் அந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் இருந்தவர்கள் தந்தை பெரியார், காந்தி, திரு.வி.க., மூவலூர் ராமாமிர்தம் போன்றோர். ராமாமிர்தத்தின் நீண்ட களப் போராட்டத்துக்கும் அவருடைய நாவலுக்கும் பெரும் பங்கிருந்தது. ஆனால், தேவதாசி முறை ஒழிப்பு தொடர்பான போராட்டத்தில் மூவலூர் ராமாமிர்தத்தின் பங்கு போதிய அளவு பிரபலப்படுத்தப்படவில்லை.

மாறாத நிஜம்

‘தாசிகளுக்குப் புத்திசாலித்தனமான ஆராய்ச்சி கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா?’ என்று நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார் ராமாமிர்தம்.

இன்றைக்குத் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்னவோ உண்மை. ஆனால், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ள பெண்களின் நிலை நாவல் எழுதப்பட்டு 80 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரிதும் மாறாமல் நிதர்சனத்தின் மாறாத அடையாளமாக இருந்துகொண்டிருக்கிறது.

நன்றி: மூவலூர் ராமாமிர்தம் பற்றி எழுத்தாளர்
பா. ஜீவசுந்தரி எழுதிய குறிப்புகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x