Last Updated : 16 Jan, 2022 08:46 AM

 

Published : 16 Jan 2022 08:46 AM
Last Updated : 16 Jan 2022 08:46 AM

மனத்துடன் உறவாடும் ‘விடியாதா?’

கடந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் தீவிரமடைந்த கரோனா இரண்டாம் அலை மிக மோசமான தாக்கத்தையும் குறிப்பாகப் பலருக்கும் நெருக்கமானவர்களின் உயிரிழப் பையும் ஏற்படுத்திச் சென்றது. நெடுங்காலமாக நிதர்சன உலகிலிருந்து விலகியிருந்த தமிழ்த் திரையுலகம் சமீப ஆண்டுகளாக நடப்பு உலகத் தைப் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் 2020 அக்டோபரில் வெளியான ‘புத்தம் புதுக் காலை’ குறும்படத்தொகுப்பு பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பொங்கலையொட்டி வெளியாகி யுள்ள ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ என்கிற குறும்படத்தொகுப்பு முந்தைய தொகுப்பிலிருந்து மாறுபட்டுள்ளது. பெண் இயக்குநர்களான மதுமிதா இயக்கியுள்ள ‘மௌனமே பார்வையாய்’, ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘லோனர்ஸ்’ (தனிமையில் இருப்பவர்கள்) ஆகிய இரண்டு குறும்படங்களும் கரோனா காலத் துயரங்களையும் அதிலிருந்து மீண்டுவருவதற்கான நம்பிக்கையையும் சேர்த்தே கொடுக்கின்றன.

வலுப்படும் பிணைப்பு

இரண்டு படங்களுமே மனிதர்களின் மனங் களைக் குறித்துப் பேசுகின்றன. ஏற்கெனவே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சில ஆண்டுகளாகப் பேசுவதை நிறுத்தியிருக்கிறார்கள் நடுத்தர வயதைக் கடந்த தம்பதிகளான முரளியும் யசோதாவும். செருமுதல், கரும்பலகையில் எழுதுதல் என்கிற வகைகளிலேயே அவர்கள் இடையே தகவல்தொடர்பு நிகழ்கிறது. மகள் வெளிநாட்டில் படிக்கிறாள். அறிகுறிகள் தோன்றும் நிலையில் யசோதாவுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்குப் பிறகும்கூட இருவரும் பேசிக்கொள்வதில்லை. ஆனால், கரோனா அச்சம் காரணமாக இருவரிடையே எழும் தவிப்பு வசனமே இல்லாமல் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் வாழும் இருவரிடையே எழுந்து நிற்கும் மனச்சுவரைத் தாண்டி, பிணைப்பு மீண்டும் வேர்விடுவது சாத்தியமா என இப்படம் சொல்கிறது.

பொதுவாகவே மனநலம் என்பது நம் சமூகத்தில் கடைசி வரிசையில்கூடக் கவனத்தைப் பெறுவதில்லை. கரோனா காலத்தில் வேலையிழப்பு, உறவில் விரிசல், உறவுகளை இழப்பது எனப் பல்வேறு வகைகளில் பலருடைய மனநலம் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கரோனாவுக்கான சிகிச்சை முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு, கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மனநலனில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய கவனம் கொடுக்கப்படவில்லை.

நல்லதங்காளின் கதை

பொதுவாகப் பிரபலத் தமிழ், இந்தித் திரைப் படங்கள் மனநலப் பிரச்சினைகளை தவறாகவும், மிகைப்படுத்தியுமே காட்டிவந்துள்ளன. இந்தப் பின்னணியில் ‘லோனர்ஸ்’ மூலம் ஹலிதா ஷமீம் சித்தரித்துள்ள உலகம் மாறுபட்டு, நிதர்சனத்தைப் பிரதிபலிக்கிறது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தாலும் காதல் முறிவு, வேலையிழப்பு ஆகியவற்றால் வாழ்க்கைக்கான அர்த்தங்களைத் தற்காலிகமாகத் தொலைத்திருக்கிறார் நல்லா என்கிற நல்லதங்காள். கரோனாவுக்குத் தன் நண்பனைப் பறிகொடுத்த தீரன், நண்பன் விட்டுச்சென்ற நாயுடன் இருக்கிறார். இருவருமே தனிமையில், துயரம்-மனம் சார்ந்த குழப்பங்களில் சிக்கிக் கிடக்கிறார்கள். நேரடி அறிமுகம் இல்லாத இருவரும் இணையவழிக் கூட்டம் மூலம் அறிமுகம் ஆகிறார்கள். தங்கள் மன அவசங்களிலிருந்து அவர்கள் விடுபட்டார்களா என்கிற கேள்வியை நோக்கி நகர்கிறது இந்தப் படம். தமிழ் சினிமாவின் வழக்கமான வார்ப்பான காதலுக்குள் இந்தக் கதையை எளிதாக நகர்த்தியிருக்கலாம். அதற்கான சமிக்ஞைகள் இருந்தாலும் அதைத் தெளிவாகத் தவிர்த்து, இயல்பான ஒன்றை இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பெரும்பாலான படங்களில் மலையாள நடிகர்களே முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அவர்களுடைய நடிப்பு, படங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதே நேரம் பல படங்கள் காட்டும் மனிதர்களும் வாழ்க்கையும் மேல்நடுத்தர வர்க்க வாழ்க்கையாக இருப்பது சற்று அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது.

‘விடியாதா’ குறும்படத்தொகுப்பின் மேற்கண்ட இரண்டு குறும்படங்களும் தொகுப்பின் மற்ற படங்களிலிருந்து மாறுபட்டு உணர்வுபூர்வமாகவும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய வகையிலும் இருப்பதற்கு, இந்தப் படங்கள் சித்தரித்துள்ள வலுவான பெண் கதாபாத்திரங்களும், இந்தக் குறும்படங்களை இயக்கிய பெண் இயக்குநர்களுமே முக்கியக் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x