

ராஷ்ட்ரபதிபவனின் பிரம்மாண்டமான முன்கூடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பதவி ஏற்றவர்களில் ஒருவர் நிர்மலா சீதாரமன். இவர் தாயாரின் தாய்வழி குடும்பத்தார், தமிழ்நாட்டில் திருவங்காட்டைச் சேர்ந்தவர்கள். இவர் தாயாருடைய தந்தையின் குடும்பத்தினர், சேலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய தாய்வழித் தாத்தா காவிரி ஆற்றின் கரையை ஒட்டிய முசிறியைச் சேர்ந்தவர் என்றாலும் மதுரையில் தங்கிவிட்டவர்.
நிர்மலாவின் தந்தை ரயில்வேயில் பணியாற்றி வந்ததால், பல இடங்களுக்கும் அடிக்கடி மாற்றலாகிப்போகும்படி நேரிட்டது. எனவே, இவருடைய ஐந்தாம் வகுப்புப் படிப்பு முடிந்த கையுடன், சகோதரியுடன் சென்னையிலுள்ள பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மூன்றாண்டுகள் தங்கிப் படித்த காலகட்டத்தில்தான் சென்னை மாநகரைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது என்கிறார் நிர்மலா. திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பின் 1980-ல் தலைநகர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தில் சீனியர் மேனேஜ ராகப் பணியாற்றிய பின்னர் பி.பி.சி உலக சேவையிலும் சில காலம் பணிபுரிந்தார். 2003-லிருந்து 2005 - ம் ஆண்டுவரை தேசிய மகளிர் கமிஷனின் உறுப்பினராக இருந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்திருக்கிறார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான ஆறு பிரதிநிதிகளைக் கொண்ட செய்தித் தொடர்பாளர் குழுவில் பணியாற்றினார்.
“தமிழ்நாட்டில் அரசியல் வாதிகள், கவிஞர்களைப் போல மேடையில் உரையாற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பல கவிஞர்கள் அரசியல்வாதிகளாய் மாறியுள்ளனர்” என்று கூறும் நிர்மலா, தனது மேடைப்பேச்சால் மக்களை ஈர்க்க முடியும் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறார். எம்.ஏ. பட்டப் படிப்புக்குப் பின் இந்திய - ஐரோப்பிய ஜவுளி வணிகம் குறித்து, பி.எச்டி பட்டம் பெற ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த டாக்டர் பரகலா பிரபாகரை இவர் மணந்துகொண்டார். டாக்டர் பிரபாகர், ஒரு அரசியல்வாதி; அரசியல் விமர்சகர். ஈ டீவி எனும் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராக இருந்தவர். தற்போது, ரைட் ஃபோலியோ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
அரசியல் பிரவேசம்
தேசிய மகளிர் கமிஷனின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜுடன் சேர்ந்து பணிபுரிந்தி ருக்கிறார். காங்கிரஸ் பின்னணி கொண்ட குடும்பத்தாருடன் மணமுடித்திட்ட நிலையில், பா.ஜ.க. சார்பிலான தேசிய மகளிர் ஆணையத்தில் பணியாற்றியதை இவர் பெரிதும் விரும்பினார்.
இதற்கு முன் எம்.பி.யாகவோ ஒரு எம்.எல்.ஏ.வாகவோ இருந்திடாத நிர்மலா, இப்போது மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றுள்ளதை ஒரு சாதனை என்று சொல்லலாம்.
“பா.ஜ.க., தேசிய நலன்களின் மீது ஈடுபாடும் அக்கறையும் கொண்ட கட்சி. பெண்களுக்காக 33 சதவிகிதம் ஒதுக்கீட்டை அறிவித்த முதல் கட்சியும்கூட. அந்த ஒரு காரணத்துக்காகவே நான் கட்சியில் சேர்ந்தேன்” என்கிறார் நிர்மலா.
2008-ல் கட்சியில் சேர்ந்த இவர், கட்சியின் கோட்பாடு களையும், கொள்கைகளையும் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துக் கூறும் பிரதிநிதியாக விரைவிலேயே உருவெடுத்தார். அரசியல் பிரவேசமே தனது மறக்க முடியாத நிகழ்ச்சி என்று கூறும் இவர், முன்பே திட்டமிட்டு அரசியலில் குதிக்கவில்லை என்கிறார். பா.ஜ.க. அரசில் இணையமைச்சராக இருக்கும் இவர், தான் பள்ளிச் சிறுமியாக இருந்தபோது நடந்த இந்திய - வங்கதேச போரில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வெளிப்படுத்திய அரசியல் மதிக்கூர்மையும் அஞ்சா நெஞ்சமும் வெகுவாகக் கவர்ந்தன என்கிறார்.