Published : 09 Jan 2022 07:46 AM
Last Updated : 09 Jan 2022 07:46 AM

அங்கீகாரம்: வாழ்க்கைக் கதைகள்

தமிழின் மூத்த எழுத்தாளர் அம்பை 2021ஆம் ஆண்டுக் கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ராஜம் கிருஷ்ணன் (1973), லக்ஷ்மி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து தமிழில் சாகித்ய விருதுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார் அம்பை. பெண் ஒருவர் விருதுக்குத் தேர்ந் தெடுக்கப்பட குறைந்தது பத்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை ஆகிறது என்பதே பெண் படைப்பாளிகளின் நிலையைச் சொல்லிவிடும்.

வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் வசிக்கிறபோது தமிழில் எழுதுவது தனக்கு நெருக்கமான உணர்வைத் தருவதாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அம்பை. அம்பையின் இயற்பெயர் சி.எஸ். லக்ஷ்மி. தமிழைத் தானாகவே படித்துத் தேர்ந்த கோயம்புத்தூர் பாட்டியிடமிருந்தும், பிரபல பத்திரிகைகளை விடாமல் படித்து, தமிழ்ப் பாடல்களை அனுபவித்துப் பாடிய அம்மாவிடமிருந்தும் தமிழ் மீது ஆசை வந்ததாகத் தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார் அம்பை. 1960களில் எழுதவந்த நவீனத் தமிழ் இலக்கியத்தின் பெண் முன்னோடி என்றும் இவரைச் சொல்லலாம்.

இலக்கியப் பயணம்

பள்ளி இறுதி ஆண்டுகளிலேயே சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர், சென்னைக்குக் குடியேறியபின் எழுதிய கதையான ‘சிறகுகள் முறியும்’ கணையாழியில் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகள் வெளியாகிக் கவனம் பெற்றன. ‘பிரக்ஞை’ இலக்கியப் பத்திரிகையில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. தான் அதீத உற்சாகத்துடனும் துடிப்புடனும் இயங்கிய ஆண்டுகள் அவை என அம்பை குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் நுண்ணுணர்வை, உடல் அரசியலை நுட்பமாகப் பதிவுசெய்தவர் அம்பை. சமூகம் பெண் மீது சுமத்தியிருக்கும் கற்பிதங்களைப் போகிற போக்கில் சுட்டிக்காட்டி ஆணாதிக்க மனங்களுக்குக் குட்டுவைத்தவர். இவரது சிறுகதைகளின் தடையற்ற நீரோடை போன்ற தெள்ளிய நடையும் சிடுக்கில்லாத விவரிப்பும் வாசக மனங்களை மாற்றத்தை நோக்கி இழுப்பவை.

அம்பை எழுதிய பெரும்பாலான சிறுகதைகள் பெண்ணின் ஆழ் மன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டவை. இவர் எழுதிய, ‘காட்டில் ஒரு மான்’, ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ ஆகிய இரண்டு சிறுகதைகளும் இருவேறு பருவங்களில் இருக்கும் பெண்களின் மனமுறிவை அகத் தேடலைச் சொன்னவை. இவரது ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கிறது. சமையலறைச் சங்கிலிகள் எப்படிக் காலங்காலமாகப் பெண்களைப் பிணைத்து வைத்திருக்கின்றன என்பதைத் துல்லியச் சித்திரமாக வடித்திருப்பார் அம்பை.

அருணாவின் கனவு

‘தனிமையெனும் இருட்டு’ பெண்ணின் எல்லையில்லாத கற்பனை வெளியைப் பேசியது. அருணா ரங்கநாதனாக மாறும் முன் அருணாவுக்கு எல்லாவற்றையும் கற்பனை செய்து பார்ப்பது பிடிக்கும். பெங்களூரில் அவள் வீட்டுப் பின்புறம் விசாலமாக நீளும். படிக்கட்டில் கன்னத்தைக் கையிலேந்தி அமர்ந்தவாறே நட்சத்திரத் துகள்களைப் பார்த்துக்கொண்டு, பல நட்சத்திரங்களை அவளே ஒன்று சேர்த்து, பூத்தேராகவும் முல்லைச் சரமாகவும் மலர் ஊஞ்சலாகவும் கற்பனை செய்துகொண்டு இருப்பாள். ரங்கநாதனைப் பற்றியும் கற்பனை அவளுக்கு. திருமணத்துக்குப் பிறகு அருணாவால் கற்பனை மட்டுமே செய்ய முடிந்தது. அவளும் அவனும் ஸ்கூட்டரில் போனார்கள். அவள் மறுத்தும் அவ்வளவு ஆடம்பரமான இடத்துக்கு அவளை வற்புறுத்தி அழைத்துப்போவான். ரங்கு என்று செல்லமாக அவனை அழைப்பாள். அவனும் இவளை அருண் எனக் கொஞ்சுவான். எல்லாமே கற்பனைதான். அந்தக் கற்பனையிலேயே தூக்க மாத்திரையை நாடி, தலையணையை அணைத்துக்கொள்கிறாள்.

அருணாவைப் போலவே பல பெண்களின் வாழ்க்கையைக் கதைகளாகத் தொடுத்திருந்தாலும் பெரும்பாலான கதைகள் நடுத்தர அல்லது மேல் நடுத்தர வர்க்கத்துப் பெண்களைப் பற்றியதாகவே இருக்கின்றன என்கிற விமர்சனமும் உண்டு. பொருளாதாரத்தில் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால்தான் என்ன? பெண் என்பதே ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் நிறைந்த இனம்தானே. அதைச் சொன்னவிதத்தால் மாற்றத்துக்கான விதையைத் தூவியவர் அம்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x