Published : 09 Jan 2022 07:59 am

Updated : 09 Jan 2022 07:59 am

 

Published : 09 Jan 2022 07:59 AM
Last Updated : 09 Jan 2022 07:59 AM

வேலைக்கு ஆட்கள் தேவை

staff-wanted-for-job

ஈராண்டு அனுபவத்தில் ஓரளவுக்குப் பழகிவிட்டோம் என்கிறபோதும் நம் தலைமுறை அறியாதது கரோனா என்னும் இந்த உலகப் பெருந்தொற்று. உறவினர் களையும் நண்பர்களையும் பறிகொடுத்து, தொழில் முடங்கி, வேலை பறிபோய், சம்பள வெட்டு என ஒவ்வொன்றையும் தட்டுத் தடுமாறித்தான் கடந்துவந்து கொண்டிருக்கிறோம். கரோனா பெருந்தொற்றின் தொடக்கக் கால முழு ஊரடங்கின்போது வேலை பறிபோன செய்திகளையே கேள்விப்பட்ட காதுகளில் தேனை வார்த்தார் எலிசபெத். ஊரடங்குக் காலத்திலும் பலருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

சென்னையைச் சேர்ந்த எலிசபெத் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தார். குடும்பத்தின் வறுமையைப் போக்க ஏதாவதொரு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். பலரிடம் வேலைக்குச் சொல்லிவைத்ததில் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. நிர்வாக வேலை என்பதால் அதற்கு இவரது கல்வித் தகுதியே போதும் என்று சொல்லப்பட, வேலையைச் செய்துகொண்டே பகுதி நேரமாகப் படித்துப் பட்டம் பெற்றார்.

அனுபவம் தந்த துணிச்சல்

முறைசாராப் பணியாளர்களைத் தகுந்த இடங்களுக்கு வேலைக்கு அனுப்பும் பிரிவில்தான் எலிசபெத் பணியாற்றினார். அப்போதைய நிலையில் அந்தப் பிரிவை வேலை வாய்ப்பு நிறுவனத்தால் நிர்வகிக்க முடியாத நிலை. அந்த அலுவலகத்தை மூடிவிடலாம் என்று நிறுவனம் முடிவெடுத்தபோது, தான் அதைத் தொடர்ந்து நடத்துவதாக எலிசபெத் சொன்னார். ஏற்கெனவே வேலை செய்த அனுபவம் தந்த தைரியத்தால்தான் அப்படியொரு முடிவை அவர் எடுத்தார். தவிர, படித்தவர்களுக்கு எங்கே வேண்டுமானாலும் வேலை கிடைத்துவிடும்; ஆனால், முறைசாராப் பணிகளை மட்டுமே நம்பியிருக்கிற படிப்பறிவற்றவர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும் என்று நினைத்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை, பத்தாயிரம் பேருக்கும் மேல் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்ததன் மூலம் நிரூபித்துள்ளார் எலிசபெத் (https://universalemploymentservices.com/). முறைசாராப் பணியாளர்களுக்குத் தங்களுக்கு வேலை தேடித் தர இப்படியொரு நிறுவனம் இருப்பது எப்படித் தெரியும்? அதுதான் எலிசபெத் எதிர்கொண்ட முதல் சவால். கிராமங்களுக்குச் சென்று அங்கிருந்தே தன் நிறுவனம் குறித்த அறிமுகத்தைத் தொடங்க முடிவெடுத்தார். முதலில் சென்னையை ஒட்டியுள்ள கிராமங்களுக்குச் சென்றார். இவரது பேச்சில் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், வேலை வாய்ப்பு குறித்துப் பொறுமையாக எடுத்துக்கூறினார். முதல் கட்டப் பணியாளர்கள் வேலைக்குச் சேர்ந்த பிறகு எலிசபெத்தின் வேலை எளிதாகிவிட்டது. பலனடைந்தவர்கள் பிறருக்குச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இவரைத் தேடி மக்கள் வரத் தொடங்கினர்.

கட்டணம் ஏதும் இல்லை

“2002இல் கிராமங்களுக்குப் போய் ஆள் தேடின அனுபவத்தையெல்லாம் மறக்க முடியாது” என்று புன்னகைக்கிறார் எலிசபெத். “வீட்டு வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, தோட்ட வேலை, ஹவுஸ் கீப்பிங் என்று முறைசாராப் பணிகளுக்குத்தான் ஆள் எடுத்துத் தருகிறோம். ஆண்களுக்கும் வேலை பெற்றுத்தருகிறோம் என்றாலும், இங்கே பெண்களுக்குத்தான் முன்னுரிமை. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே வேலைக்கு அனுப்புகிறோம். எந்த வேலையோ அதற்கேற்ப இங்கே சில நாட்கள் பயிற்சி அளிப்போம்” என்று சொல்லும் எலிசபெத், இந்தியா முழுவதும் பலரை வேலைக்கு அனுப்பியுள்ளார். தமிழ்நாடோ, வெளி மாநிலங்களோ எதுவாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று சொல்லும் எலிசபெத், வேலைக்கு ஆள் தேடுகிறவர்களைப் பற்றித் தீவிரமாக விசாரித்த பிறகே அவர்களுக்கு ஆட்களை அனுப்புவதாகச் சொல்கிறார்.

“எந்த ஊரில் வேலைக்குச் சேர்ந்தாலும் பெண்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்புகொள்ளும் நிலையில் இருப்பேன். வார விடுப்பு, ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்று எல்லாமே சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். சில நேரம் இருதரப்பில் இருந்தும் புகார்கள் வரும். அவற்றை விசாரித்து அதற்கேற்ப முடிவெடுப்பேன்” என்று சொல்லும் எலிசபெத், கரோனா ஊரடங்குக் காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கத்தான் நிறைய பேர் தேவைப்பட்டார்கள் என்கிறார்.

“நோய் தொற்றிக்கொள்ளுமோ என வீட்டில் இருக்கிறவர்களே பயந்த நிலையில் ஓரளவுக்குப் படித்த, அடிப்படை மருத்துவ உதவி தெரிந்த பெண்களை வேலைக்கு அனுப்பினேன். இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. எங்களிடம் வேலைக்குப் பதிவுசெய்ய எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இத்தனை ஆண்டுப் பயணத்தில் பலரது வாழ்க்கையை ஓரளவுக்கு மாற்ற முடிந்திருக்கிறது என்பதே நிம்மதி” என்கிறார் எலிசபெத்.

Staff wanted for job

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

kollywood-junction

கோலிவுட் ஜங்ஷன்

இணைப்பிதழ்கள்

More From this Author

x