

ஆப்ரிக்க நாடுகள் என்றாலே வறண்ட பாலைவனங்கள் கொண்டவை என்கிற எண்ணத்தை மாற்றியது எங்கள் ஆப்பிரிக்கப் பயணம். தென்னாப்ரிக்கா மிக அழகான இயற்கை வளத்தை கொண்டுள்ளது. சில்லென்ற இயற்கை சூழலில் நெரிசலோ புகையோ இல்லாமல் நெடுந்தூரம் பயணம் செல்வது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. அருகில் உள்ள ஸாம்பியாவில் உள்ள விக்டோரியா ஃபால்ஸ் சென்றிருந்தோம். நயாகரா அளவுக்குப் பெரியதாக இல்லையென்றாலும் உலகின் மிக பெரிய அருவிகளுள் ஒன்று என்பதால் அதைப் பார்க்கச் சென்றோம். விமானத்தில் பயணிக்கும்போதே அருவியின் அழகை மேலிருந்து பார்த்து ரசிக்கலாம். ஓடும் அருவியின் அழகை அருகில் நின்று ரசித்த பின் சற்றுக் கீழே இறங்கி அதன் எதிரில் நின்று அது விழும் அழகை ரசித்தோம்.
பிரம்மாண்டமாக அது விழும் அழகினை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மேலிருந்து விழும் அருவி தெறித்து நம் மேல் மழை போல் பொழிகிறது. அதற்காக அங்கேயே ரெயின் கோட் தருகிறார்கள். அதை போட்டுக்கொண்டு அருவியின் அருகில் நனையாமல் நின்று ரசிக்கலாம். தினமும் காலை, மாலை இரு வேளையும் வானவில் தெரிவது இந்த இடத்தை மேலும் அழகாக்குகிறது. மாலை நேரம் சாம்பியா அருவியில் படகில் அழைத்துச் செல்கிறார்கள். நதியின் மீது மாலை நேரச் சூரியனின் கதிர்கள் விழுந்து அழகூட்டுவதைவிட அருமையான காட்சி இருக்க முடியாது. அருவிகள் எப்போதும் அழகுதான் என்றாலும் கடல் கடந்து சென்று நான் ரசித்த அருவிக்கு எப்போதும் என் மனதில் தனியிடம் உண்டு.
- சுஜாதா தாமு, சென்னை.