Published : 02 Jan 2022 07:00 am

Updated : 02 Jan 2022 07:00 am

 

Published : 02 Jan 2022 07:00 AM
Last Updated : 02 Jan 2022 07:00 AM

முகங்கள்: மஞ்சள் பையிலிருந்து தொடங்கும் மாற்றம்

manjal-pai

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக ஞெகிழி ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஞெகிழிப் பைக்கு மாற்றாகத் துணிப்பையைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் ‘மஞ்சப் பை இயக்கம்’ திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ‘மஞ்சள் பை’ இயக்கத்தைத் தொடங்கியவர் மதுரையைச் சேர்ந்த கௌரி. இவரும் இவருடைய கணவர் கிருஷ்ணனும் சேர்ந்து இதைச் செயல்படுத்திவருகிறார்கள்.

இயற்கைக்குத் திரும்புவோம்

கௌரி, கிருஷ்ணன் இருவரும் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவர்கள். 2014இல் இவர்களுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நேரம் மூச்சிரைப்பு அதிகமானது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது ஞெகிழியை எரிப்பதால் உருவாகும் நச்சு காற்றில் கலப்பது தெரியவந்தது. காற்று மாசு குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியோரையும் பாலூட்டும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிப்பதாகத் தெரிந்துகொண்டார்கள். அதன் பின் ஞெகிழியின் சீர்கேடுகள் குறித்த தேடலில் இறங்கினார்கள்.

அதிக ஞெகிழி பயன்பாட்டால் காற்று மட்டுமல்ல, மண்ணும் மலடாகிறது; அவை மக்குவதும் இல்லை என்பது புரிய, முதல்கட்டமாக ஞெகிழிப் பை பயன்பாட்டைக் குறைப்பது என முடிவெடுத்தனர். அவற்றுக்கு மாற்றாகத் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க நினைத்தவர்கள், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘ஐந்திணை விழா'வில் ஞெகிழி பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பிறகு முதல்கட்டமாக 200 துணிப்பைகளைத் தைத்து வாங்கி விற்பனை செய்தனர்.

“இதற்காகவே என் வேலையை விட்டுவிட்டேன். 2014 இறுதியில் இந்தத் துணிப்பை திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினோம். மதுரையில் துணிப்பை உற்பத்தியாளர்கள் அதிகம் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்குக் குடியேறினோம். துணிப்பைகள் நீடித்து உழைக்கும், அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கும் தன்மை கொண்டவை என்பதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்” என்று சொல்லும் கௌரி, ‘யெல்லோ பேக்’ (theyellowbag.org) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு

ஆரம்பத்தில் மற்றவர்களிடம் துணிப்பைகளைத் தைத்து வாங்கியவர்கள், பிறகு தைப்பதற்கு ஆள் வைத்துத் தொழிலைத் தொடர்ந்தனர்.

“நான் வேலையை விட்டதால் துணிப்பை விற்பனையையே என் வருமானத்துக்கான தொழிலாகவும் மாற்ற நினைத்தேன். சில பெண்களுக்காவது நிலையான வருமானத்தைத் தருவதாக இந்தத் தொழில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். வீட்டில் சிறிய அளவில் தொடங்கிய தொழில், செல்லமுத்து அறக்கட்டளையின் அலுவலகக் கட்டிடத்தில் சில காலம் இயங்கியது. பிறகு இடப்பற்றாக்குறையால் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் தனி அலுவலகம் அமைத்துவிட்டோம்” என்கிறார் கௌரி. இங்கே முதலில் இரண்டு தையல் இயந்திரங்களை வைத்து வேலையைத் தொடங்கினர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தினர். தைக்கத் தெரியாத பெண்களுக்குத் தையல் பயிற்சியளித்து வேலையைத் தொடங்கினர். இப்போது இவர்களிடம் 12 பெண்கள் முழுநேரமாகப் பணிபுரிகிறார்கள்.

“தொடக்கத்தில் மதுரையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று துணிப்பை தைக்க ஆர்டர் கொடுத்தோம். சிலர் பிளாஸ்டிக் நரம்புகளைப் பயன்படுத்தித் தைத்தனர். ஆனால், நூலில் தைப்பதுதான் எங்கள் நோக்கம். மற்றவர்களிடம் ஆர்டர் கொடுப்பதால் நேரமும் தரமும் பெரும் சவாலாக இருந்தன. அதனால், நாமே தைக்கலாம் என முடிவெடுத்தோம். நாங்கள் தொடங்கும் தொழில், பெண்களுக்கு நீடித்த, நிலைத்த வருமானத்தைத் தருவதாக அமைந்தால் இரட்டிப்பு நன்மை என்பதால் பெண்களையே வேலைக்கு அமர்த்தினோம். இது திட்டவட்டமான அலுவலகம் போல இருக்காது. எங்களிடம் பணி புரிகிறவர்கள், குடும்பம் போலத்தான் உணர்வார்கள்” என்று சொல்கிறார் கௌரி.

பொதுமுடக்கத்திலும் முடங்காத தொழில்

தொழிலைத் தொடங்கிய புதிதில், துணிப்பையின் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லி விற்பனை செய்வது பெரும் சவாலாக இருந்திருக்கிறது. தொழில் ஓரளவுக்கு வளரத் தொடங்கியபோது கரோனா பெருந் தொற்றுக் கால முடக்கம் வந்துவிட, மீண்டும் சுணக்கம்.

“அதையும் நல்லவிதமாகச் சமாளித்துவருகிறோம். சமூக ஊடகங்கள், நண்பர்கள் என்று இணையம் மூலமாகவும் விற்பனையைத் தொடர்கிறோம். திருமண விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்லூரிகள் என வெவ்வேறு தரப்பிலிருந்து ஆர்டர் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பைகளை வடிவமைக்கிறோம். தோளில் மாட்டிக்கொள்ளும் பைகள், குழந்தைகள் முதுகில் மாட்டிச் செல்லும் வகையிலான பைகள், சுருக்குப் பைகள், காய்கறிப் பைகள் என வெவ்வேறு வடிவங்களில் பைகளைத் தைத்துத் தருகிறோம்” என்கிறார் கௌரி.

ஒரு பக்கம் ‘பிளாஸ்டிக் இல்லாத உலகம்’ என்பதை இலக்காக வைத்து இவர்கள் செயல்பட்டுக்கொண்டே மறுபக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்கிவருகிறார்கள். மாணவர்களிடம் உள்ள தனித் திறமையைக் கண்டறிந்து அதில் அவர் பயிற்சி பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்கள்.

“நாங்கள் எடுத்து வைத்திருப்பது மிகச் சிறிய அடிதான். மாற்றவும் சீர்படுத்தவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக துணியிலான நாப்கின்களைப் பயன்படுத்தலாம். மக்காத குப்பைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கூடுமானவரைக்கும் இயற்கைக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்தலாம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு அவசியம். வீட்டைத் தாண்டி வெளியே வந்தால்தான் பார்வையும் சிந்தனையும் விசாலமடையும். அது காலத்தின் கட்டாயம்” என்கிறார் கௌரி.

முகங்கள்மஞ்சள் பைManjal pai

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

kollywood-junction

கோலிவுட் ஜங்ஷன்

இணைப்பிதழ்கள்

More From this Author

x