Last Updated : 13 Mar, 2016 02:06 PM

 

Published : 13 Mar 2016 02:06 PM
Last Updated : 13 Mar 2016 02:06 PM

பெண் திரை: அம்மா வந்தாளா?

கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஆவணப் பட இயக்குநர் ஸ்ரீஜா. அரசியல் பழிவாங்கல் கொலைகள் தொடர்பாக அவர் எடுத்த ஆவணப் படம், எடுக்கப்படும்போதே பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறது. இருந்தும் தைரியமாக அந்த ஆவணப் படத்தை எடுத்து வெளியிடுகிறார். ஆனால், அந்தப் படத்தை எடுத்த பிறகு அவர் அமைதியாகிவிடுகிறார். அடுத்து ஆவணப் படம் எடுப்பதைப் பற்றி யோசிப்பதேயில்லை, பெரிதாக எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபாடு காட்டுவதும் இல்லை.

இந்நிலையில் ஒரு நபரின் அறிவுறுத்தலின் பேரில் தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்று ஸ்ரீஜாவை ரகசியமாகக் கண்காணிக்கிறது. ஆவணப் படம் எடுப்பதை அவர் நிறுத்தியதற்கான காரணம் பிடிபட மாட்டேன் என்கிறது.

யார் காரணம்?

இன்னொரு புறம் அவருடைய திருமண வாழ்க்கையில் சிக்கல். அவள் தனித்திருக்கிறார். அவருடைய கணவன் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து வார்த்தைகளால் வதைக்கிறான். இதற்கிடையில் ஒரு தோழியின் மூலமாக அறிமுகமாகும் அவ்ரோ சென் என்ற ஒளிப்படக் கலைஞர் அவருடைய வீட்டுக்குத் தொடர்ச்சியாக வர ஆரம்பிக்கிறார். குழப்பமான மனநிலை அதிகரிக்க, அவ்ரோ சென்னைக் காதலிக்கும் நிலைக்கே போய்விடுகிறார் ஸ்ரீஜா. ஏற்கெனவே அவருக்கு இருக்கும் குழப்பங்களை, இந்தக் காதல் இன்னும் மோசமடையச் செய்கிறது.

அரசியல் பார்வையும் படைப்பாக்கத் திறமையும் கொண்ட ஜா முடக்கப்பட்டிருப்பதற்கு வெளி அரசியல் சக்திகளோ, கணவரோதான் காரணம் என்றுதான் நமக்குத் தோன்றும். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அவருடையது அதையும் தாண்டிய ஓர் உளவியல் பிரச்சினை. சிறு வயதில் அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கலே, அவருடைய இன்றைய நிலைக்கு அடிப்படை என்கிறது படம்.

மகிழ்ச்சி இல்லாத உறவு

குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களால் சிறு வயதில் ஒரு பெண் குழந்தையின் மனதில் ஏற்படும் தாக்கம், அவருடைய எதிர்கால வாழ்க்கையை எப்படிச் சிதைக்கிறது என்பதைப் பேசுகிறது ‘டக்பக் - ஷோ’ (dakbaksho) (அஞ்சல் பெட்டி) என்ற வங்க மொழித் திரைப்படம். சென்னையில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

ஸ்ரீஜாவின் தந்தை ஓர் ஓவியர். ஸ்ரீஜாவுக்கு 6-7 வயதாகும் போது, குடும்பத்தைத் துறந்து வேறொருவருடன் சென்றுவிடுகிறார் அவளுடைய தாய் மிருணாளினி. அந்த உறவும் மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை. ஆறு மாதங்களிலேயே மிருணாளினி தற்கொலை செய்துகொள்கிறார்.

இதை அறியாத ஸ்ரீஜா முகவரியற்ற கடிதத்தை எழுதி, தொடர்ந்து தன் அம்மாவுக்கு அஞ்சல் பெட்டியில் போட்டுக்கொண்டிருக்கிறாள். அந்தக் கடிதத்தைப் படித்து என்றைக்காவது ஒரு நாள் தன் அம்மா திரும்ப வருவாள் என்பது அவளுடைய நம்பிக்கை. ஆனால், அம்மா வரவில்லை. வளர்ந்த பிறகுதான் தன் தாய்க்கு நேர்ந்த கதி ஸ்ரீஜாவுக்குத் தெரிய வருகிறது.

உறவு சிதையுமா?

திருமணம் ஆன பிறகு ஆவணப் படம் எடுக்க அடிக்கடி வெளியே செல்வது, இரவில் வெளியே செல்வது தொடர்பாகப் பிரச்சினையைக் கிளப்புகிறார் அவருடைய கணவர். ருத்ரா என்ற ஒளிப்பதிவாளருடன் ஜா இணைத்துப் பேசப்படுகிறாள். எங்கே தன் தாய்க்கு நிகழ்ந்ததுபோல, தன்னுடைய திருமண உறவும் சிதைந்துவிடுமோ என்ற அச்சத்தில் உளவியல் சிக்கலுக்குள் ஸ்ரீஜா தள்ளப்படுகிறார் என்பதையே ‘டக்பக்-ஷோ’ சொல்கிறது.

உளவியல் த்ரில்லர் படங்களுக்கே உரிய சிக்கலான தன்மைகளுடன் படம் நகர்கிறது. உளவியல் சிக்கல் என்ற முடிச்சு அவிழ்க்கப்படும்வரை, பார்வையாளனை உட்கார வைப்பதுபோல காட்சிகள் அமைந்திருக்க வேண்டியது இதுபோன்ற படங்களில் அத்தியாவசியம். சில நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப் பிரதிபலிப்பது போலவும், பழமைவாதத்தை விதந்தோதுவது போலவும்கூட காட்சிகள் உள்ளன. சில இடங்களில் படம் சுணங்கியும் விடுகிறது.

இந்தச் சிக்கல்களைத் தாண்டியும் தன் முக்கியத்துவத்தைப் படம் நிலைநிறுத்திவிடுகிறது. இந்தக் காலத்துப் பெண்கள், ஆண்களுக்குச் சவால் விடுக்கும் திறமைகளோடு இருந்தாலும், அவர்கள் முடங்கிப் போவதற்கான முக்கியக் காரணத்தைக் கவனப்படுத்தியதும், அது உளவியல் சிக்கலாக உருவெடுப்பதற்கான அடிப்படை புள்ளியை அழுத்தமாகக் காட்டியிருப்பதுமே இந்தப் படத்தைக் கவனத்துக்குரியதாக மாற்றியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x