Published : 05 Dec 2021 06:42 PM
Last Updated : 05 Dec 2021 06:42 PM

பெண்கள் 360: சிறுத்தையிடமிருந்து குழந்தையை மீட்ட வீரத்தாய்

தமிழகத்தில் குறைகிறதா பாலின விகிதம்?

பல்வேறு சமூக நலக் குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னேறிய நிலையில் இருப்பது குறித்துப் பெருமைப்பட்டுவரும் அதேவேளையில் அவ்வப்போது சில பிரச்சினைகளும் தலைதூக்கு கின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு - 5-ன் (National Family Health Survey-5) முடிவுகள் தமிழகத்தில் பாலின விகிதம் சரிந்திருப்பதாகக் கூறுகிறது. முந்தைய கணக்கெடுப்பின்படி 2016-17-ல் தமிழகத்தில் பாலின விகிதம் பிறக்கும் குழந்தைகளில் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்பதாக இருந்தது. 2020-21இல் 1000க்கு 878ஆகக் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் தேசிய அளவிலான சராசரி 919-லிருந்து 929ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். ‘27,929 குடும்பங்களிடம் மட்டுமே தரவுகளைப் பெற்று இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் குழந்தைப் பிறப்பின் உண்மையான பாலின விகிதத்தைச் சரியாகக் கணக்கிடப் போதுமானதல்ல’ என்று தமிழகச் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தின் சுகாதார மேலாண்மைக் கட்டமைப்பிடம் உள்ள தரவுகளின்படி தமிழகத்தின் பாலின விகிதம் 1000க்கு 940 என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் முந்தைய கணக்கெடுப்பில் 26,033 குடும்பங்களிடம்தான் தரவுகள் பெறப்பட்டன. எனவே, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை வைத்து அதன் முடிவுகளை நிராகரிக்க முடியாது என்று பொதுச் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்திருப்பதால் ஆண்குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பது கடினமாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். செயற்கைக் கருத்தரிப்பு முறைகளில் ஆண் குழந்தைகளைப் பிரசவிக்கச் செய்வதற்கு வெளியே தெரியாத பல தொழில்நுட்பங்கள் கையாளப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆக, செயற்கைக் கருத்தரிப்பு முறைகளில் கையாளப்படும் பாலின வேற்றுமை நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு உரிய திட்டங்களை அரசு விரைந்து வகுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சிறுத்தையிடமிருந்து குழந்தையை மீட்ட வீரத்தாய்

புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரப் பெண்கள் சங்க இலக்கிய காலத்தில் மட்டுமல்ல சமகாலத்திலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடிப் பெண் ஒருவர் சிறுத்தையால் அபகரித்துச் செல்லப்பட்ட தன்னுடைய ஆறு வயது மகனை ஒற்றை ஆளாகப் போராடி மீட்டிருக்கிறார். சித்தி மாவட்டத்தில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் இடைப் பகுதியில் (buffer zone) அமைந்துள்ள படி ஜிரியா என்னும் கிராமத்தில் வசித்துவருகிறார் கிரண். இவர் பைகா என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த ஞாயிறு மாலை தன்னுடைய குடிசைக்கு வெளியே கைக்குழந்தையை மடியில் கிடத்தித் தன்னுடைய மற்ற மூன்று குழந்தைகளையும் அருகே அமர்த்தியபடி நெருப்புமூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார். பணிக்குச் சென்றிருந்த கணவர் வீடு திரும்பியிருக்கவில்லை. அருகிலிருந்தபடி இவர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று பாய்ந்து வந்து கிரணின் ஆறு வயது மகன் ராகுலை அபகரித்துச் சென்றது. உடனடியாக மடியிலிருந்த குழந்தையை மற்ற குழந்தைகளிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிறுத்தையிடம் அகப்பட்ட மகனை மீட்க அந்த கும்மிருட்டு நேரத்தில் காட்டுப் பகுதிக்குள் ஓடிச் சென்றார் கிரண். சிறுத்தையை நோக்கித் தாவி அதன் பாதங்களில் அகப்பட்டிருந்த ராகுலை இழுத்து வெற்றிகரமாக மீட்டுவிட்டார் கிரண். சிறுத்தையின் நகக் கீறல்களால் ராகுலுக்கு முகத்திலும் பின்புறத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. சிறுத்தையுடனான மோதலில் கிரணுக்கும் காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மாநில அரசு வனத் துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்துநிற்காமல் அபலைக் கண்ணீர் வடிக்காமல் ஒரு வன விலங்கை எதிர்த்து ஒற்றையாளாகத் துணிச்சலுடன் போராடித் தன் குழந்தையை மீட்ட கிரணின் வீரச் செயலை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் உள்படப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x