

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டியம்மா, மாநில அரசு நடத்தும் எழுத்தறிவுக்கான தேர்வில் 89 சதவீத மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா ஹாக்கின்ஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 62 நொடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இவர்களின் சாதனைகளைவிட அவற்றை இவர்கள் நிகழ்த்தியிருக்கும் வயதுதான் இவர்களைச் உலகம் முழுவதும் கவனிக்க வைத்திருக்கிறது. குட்டியம்மாவுக்கு வயது 104, ஜூலியாவுக்கோ 105.
கேரளத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்த குட்டியம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடந்தது. 2002-ல் அவருடைய கணவர் காலமாகிவிட்டார். தன்னுடைய மூத்த மகன் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் குட்டியம்மாவுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் 100-ம் பிறந்தநாளைக் கொண்டாடியபோது தனக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை என்னும் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை நிறைவேற்ற அனைவருக்கும் எழுத்தறிவு புகட்டுவதற்கான மாநில அரசின் ‘சாக்ஷரதா’ திட்டம் கைகொடுத்தது. இந்தத் திட்டத்தில் மலையாள எழுத்துகளையும், தன்னுடைய வீட்டு முகவரியை எழுதுவதற்கான எழுத்தறிவும், அடிப்படைக் கணிதமும் கற்பிக்கப்படுகிறது.
குட்டியம்மா கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்தத் தகவலை அறிந்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி இதை ட்விட்டரில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். மறுபுறம் ஜூலியா, 105 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார். ஆனால், அதுவும் தன்னை திருப்தியடையச் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் 100 மீட்டர் தொலைவை ஓடிக் கடக்க விரும்பினாராம். தன்னுடைய 100-ம் வயதில்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்கான பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார் ஜூலியா. அதற்கு முன்பு பத்தாண்டுக் காலம் பைக் பந்தயங்களில் பங்கேற்றிருக்கிறார். சாதிக்க வயது தடையில்லை என்று 40 வயதைக் கடந்தவர்களுக்கே நினைவுறுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், சாதிக்க எந்த வயதுமே தடையில்லை என்று இந்த இரண்டு பெண்களும் நிரூபித்திருக்கிறார்கள். உலகப் பெண்களுக்கு நம்மால் சாதிக்க முடியும் என்னும் பெரும் நம்பிக்கையையும் இவர்கள் அளித்திருக்கிறார்கள்.
ஆடையின்மீது தொட்டாலும் குற்றம் தான்
இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த சதீஷ் பந்து ரக்டே என்பவரை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு குற்றமற்றவர் என விடுவித்திருந்தது. அந்தச் சிறுமியின் ஆடையின் மீதுதான் அவர் கைவைத்தார் என்பதால் அவரை விடுவிப்பதாகவும் உடலுடன் தொடர்பு நிகழ்ந்திருந்தால்தான் தொடுதல் என்கிற அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும் என்றும் நீதிபதி புஷ்பா கணேடிவாலா தீர்ப்பளித்திருந்தார்.
போக்சோ சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதோடு அதன்கீழ் பதியப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வழிவகுக்கக்கூடிய பாதகமான தீர்ப்பாகப் பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பரவலான கண்டனங்களைப் பெற்றது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர மாநில அரசு ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.
நவம்பர் 18 அன்று இந்த வழக்கில் நீதிபதிகள் உதய் உமேஷ் லலித், எஸ்.ரவீந்திர பட், எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ‘உடலுடன்’ என்னும் வரையறையின் அடிப்படையிலான தீர்ப்பை ‘அபத்தமானது’ என்று கூறி ரத்துசெய்தது. குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே போக்சோ சட்டத்தின் நோக்கமாக இருக்கையில் சட்டத்தில் இடம்பெற்ற தொடுதல், உடல்ரீதியான தொடர்பு ஆகிய சொற்களை அகராதியில் உள்ள பொருளில் மட்டும் எடுத்துக்கொள்வது அந்தச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதோடு இந்த உடலுடனான தொடர்புதான் குற்றம் என்று கருதுவதென்றால் கைகளில் கிளவுஸ் அணிந்துகொண்டு ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நிகழ்த்துகிறவர்கள் தப்பித்துவிட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பிட்ட உடலுறுப்புகள் மீது பாலியல் நோக்கத்துடன் நிகழ்த்தப்படும் எந்த வகையான தொடுதலும் பாலியல் குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட சீன டென்னிஸ் வீராங்கனை
சீனாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயை (Peng Shuai) கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகக் காணவில்லை. மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் சர்வதேசக் களத்தில் புகழ்பெற்றவரான பெங், நவம்பர் 2 அன்று சீன சமூக வலைத்தளமான ‘வீபோ’வில் (Weibo) முன்னாள் துணை பிரதமரும் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினருமான ஷாங்க் கவோலி (Zhang Gaoli) மீது பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன் இருவரும் உறவில் இருந்ததாகவும் ஆனால் பிரிந்துவிட்ட பிறகும் 2018-ல் தன்னைப் பாலியல் உறவுகொள்ள வற்புறுத்தியதாகவும் அது தன்னை அருவருப்படையச் செய்து நடைபிணம் போல் உலவச் செய்ததாகவும் பெங் கூறியிருந்தார். இந்தப் பதிவை வெளியிட்ட பிறகு பெங் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும் பெங்கின் பதிவும் நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. மகளிர் டென்னிஸ் சங்கத்தின் (Women Tennis Assocation) தலைவர் ஸ்டீவ் சைமன் இந்த விஷயத்தில் அரசு வெளிப்படையாகச் செயல்பட வேண்டும் என்றும் பெங்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். #WhereIsPengShuai என்னும் ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. நோவாக் ஜோகோவிச் உள்ளிட்ட தற்கால டென்னிஸ் சாம்பியன்களும் மார்ட்டினா நவரத்திலோவா உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பெங்கின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக பெங் கூறுவது போன்ற மின்னஞ்சல் ஒன்று மகளிர் டென்னிஸ் சங்கத்துக்கு அனுப்பப்பட்டது. அது சீன அரசு ஊடகத்திலும் வெளியானது. ஆனால், அந்த மின்னஞ்சல் பெங்கின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்திருப்பதாகவும் அதை பெங்தான் அனுப்பியிருப்பார் என்று நம்ப மிகவும் கடினமாக இருப்பதாகவும் சைமன் இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். இதுவரை டென்னிஸ் உலகைச் சேர்ந்த யாரும் பெங்கைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சைமன் கூறியிருக்கிறார். அதேநேரம் பெங் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார் என்று சீன டென்னிஸ் சங்கம் சைமனிடம் தெரிவித்துள்ளது.
தொகுப்பு: கோபால்