

புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் கிருத்திகா ரவிச்சந்திரன். கணினியில் தட்டச்சும் கைகள், பரத நாட்டியத்தில் அபிநயங்களும் பிடிக்கும். தேர்ந்த பரதக் கலைஞரான கிருத்திகா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சிறந்த நூறு பெண்களில் ஒருவாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இவரது திறமைக்கு மற்றுமோர் அங்கீகாரம்.
“நான் அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். பள்ளிக்கு சைக்கிளில்தான் போவேன். கலைகளை இலவசமாகக் கற்றுத் தரும் புதுச்சேரி பால்பவனில் ஆறு வயதிலிருந்தே பரதம் கற்கத் தொடங்கினேன். 14 வயதுவரை அங்கேயே பரதம் கற்றேன். எனது பரத அரங்கேற்றமும் பால்பவனில்தான் நடந்தது.
அரசுப் பள்ளியில் படித்ததால் ரிலாக்ஸாக இருந்தேன். அந்த அசைன்மெண்ட், இந்த புராஜெக்ட் என்று இல்லாததால் பள்ளியில் படிப்பு நேரம் போக கலைகளைக் கற்க முடிந்தது. டியூஷன் சென்றதே இல்லை. எனது இனிமையான வாழ்க்கைக்கு அடிப்படையே அரசுப் பள்ளிதான். அங்கேதான் தேடுதலுக்கான வெளி கிடைத்தது” என்று சொல்லும் கிருத்திகா, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துக் கணினியில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார். எம்.எஸ்சி. ஃபைன் ஆர்ட்ஸ் படித்தார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பரதக் கலையில் எம்.ஃபில். முடித்தார். தற்போது கணினிப் பிரிவில் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பகுதிநேர ஆய்வு மாணவியாகப் படித்து வருகிறார்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி கிடைத்து அங்கு பணிபுரிந்து வருகிறார்.
கலாச்சார பரிமாற்ற விழாவில் பங்கேற்று சீனாவில் ஷாங்காய், நாஞ்ஜிங்க், வியட்நாம் உட்பட பல நாடுகளில் பரத நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார். குழந்தைகளுக்குக் கட்டணமில்லாமல் பரத நாட்டியம் கற்றுத் தருகிறார். காலாப்பட்டிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று பரத பயிலரங்குகளை நடத்தி, கலை தொடர்பான புரிதலைக் குழந்தைகளுக்கு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஜிப்மரில் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பயிலரங்கு நடத்தியிருக்கிறார். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பார்வையற்ற, மாற்றுத் திறனாளி, ஆதரவற்ற சிறார்களுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் பணியையும் செய்திருக்கிறார்.
“குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது தரப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் புகைப்படம் எடுத்துகொண்டோம். அனைவருக்கும் கைத்தறி புடவை, சான்றிதழும் வழங்கப்பட்டன. பலரும் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தால்தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அது மிகவும் தவறானது. அரசுப் பள்ளியில் படித்து சாதித்தோர் பலருண்டு. அரசுப் பள்ளியில் படித்ததால்தான் என்னால் பல துறைகளில் ஆர்வமாக ஈடுபட முடிந்தது. அதற்கு என் பெற்றோரும் முக்கியமான காரணம். அடுத்ததாக திருக்குறள் சார்ந்த கின்னஸ் சாதனை நிகழ்வுக்கு தயாராகி வருகிறேன்” என்கிறார் புன்னகையுடன்.
படங்கள்: எம். சாம்ராஜ்