Published : 07 Nov 2021 03:06 am

Updated : 07 Nov 2021 05:58 am

 

Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 05:58 AM

சைக்கிள் புரட்சி செய்த மக்கள் கலெக்டர்

sheela-rani-chunkath

இரண்டே ஆண்டுகள் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஒருவரை முப்பது ஆண்டுகளாக அந்த மாவட்ட மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்! ஒரு மாவட்ட ஆட்சியராலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைச் செயல்படுத்திக் காட்டியவர் ஷீலா ராணி சுங்கத் ஐஏஎஸ்.

புதுக்கோடை மாவட்டத்தில் அவர் ஆட்சியராக இருந்த 1990-92-ம் ஆண்டுகளில் அறிவொளி இயக்கம் நடைபெற்றது. எழுத்தறிவு இயக்கத்துடன் சேர்ந்து பெண்களுக்கான பல திட்டங்களைக் கொண்டுவந்து, பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியவர். சுகாதாரச் செயலாளராக இருந்தபோது ‘பெண் சிசுக்கொலை’ என்கிற கொடூரத்தைத் தடுத்து நிறுத்தியவர். தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தியவர். ஓய்வுக்குப் பிறகு ஆயுர்வேத மருத்துவம் பயின்று, சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் ஷீலா ராணி சுங்கத்துடன் ஒரு நேர்காணல்.

புதுக்கோட்டை அறிவொளி இயக்கம் மட்டுமே இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அதற்கான காரணமாக எதைச் சொல்வீர்கள்?

அறிவொளி ரொம்ப சுவாரசியமான, சவாலான அனுபவம். இன்றைக்கும் அறிவொளியில் பணியாற்றியவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். 25 ஆயிரம் தன்னார்வலர்களுடன் செயல்பட்ட மிகப் பெரிய மக்கள் இயக்கம். அரசாங்கத்தின் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது ‘மக்கள் இயக்க’மாக மாறினால்தான் வெற்றி பெறும், நினைத்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும். ‘அறிவொளி’ மக்கள் இயக்கமாக இருந்ததால்தான் வெற்றி கிடைத்தது. ‘கற்போம், கற்பிப்போம்’ என்றுதான் ஆரம்பித்தோம். அறிவொளியில் பணியாற்றிய ஒவ்வொருவருமே மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம், எங்களுக்குத் தெரிந்ததைக் கற்றும் கொடுத்தோம். இந்த எளிய அணுகுமுறை எங் களை மக்களிடமும் மக்களை எங்களிடமும் நெருங்கச் செய்தது. அறிவொளி இயக்கத்துக்காகப் பெண்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள். இரவு பத்து மணிக்குக்கூடப் பெண்கள் பாடம் எடுக்கும் காட்சியைப் பார்க்க முடிந் தது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் நமக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

உங்களை ’மக்களின் கலெக்டர்’ என்று சொல்வார்கள். பெண்களுக்கான பல திட்டங்களைக் கொண்டுவந்தீர்கள். இதற்கான விதை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

பெண்ணியவாதிகளான சிமோன் து போவார், சூசன் ஃபலூடி, ஜ்ரெமைன் க்ரீர் போன்றவர்களின் சிந்தனைகள் என்னைப் பாதித்திருந்தன. பெண்களிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புதான் கிடைப்பதில்லை. பெண்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது வீட்டிலும் சமூகத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் அறிவொளி மூலம் வெளியுலகத்துக்கு வந்த பெண்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சிகளை ஆரம்பித்தோம்.

நீங்கள் கொண்டுவந்த ‘சைக்கிள் புரட்சி’யைப் பற்றிச் சொல்லுங்கள்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமாக நான் கருதுவது ‘மொபிலிட்டி’. வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு சைக்கிளைப் போன்று சிறந்த வாகனம் எதுவும் இல்லை. பெண்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்தால் உடல்நலமில்லாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம். குடங்களில் தண்ணீர் கொண்டு வரலாம். குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம். வியாபாரம் செய்யலாம். இப்படி எவ்வளவோ வேலைகளைச் செய்ய முடியும் என்பதால், பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

சைக்கிள் ஓட்டுவதை இயக்கமாக மாற்றி, கடைக்கோடி கிராமம்வரை கொண்டு சென்றோம். குழந்தைகளிலிருந்து 72 வயது பாட்டிகள்வரை சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள்! இந்தியன் வங்கியிடம் பேசி, மானிய விலையில் பெண்களுக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்தோம். சைக்கிள் என்பது வெறும் வாகனமாக மட்டும் பெண்களுக்கு இருக்கவில்லை. சுதந்திரத்துக்கான பாதையாக இருந்தது. பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்தது.

இந்த மாற்றங்கள் பெண்களைப் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வழிவகுத்தனவா?

பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாலே மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதனால் ‘ஸ்கில் டெவலப்மெண்ட் டிரெயினிங்’ கொடுத்தோம். ஜெம் கட்டிங், பை தைத்தல், வயர் நாற்காலி பின்னுதல், பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற தொழில்களை அறிமுகம் செய்தோம். சம்பாதிக்கும் பணத்தை, கணவர்கள் வாங்கிச் சென்று குடித்துவிடுவார்கள். உழைத்த பெண்களுக்கு ஒன்றுமே மிஞ்சாது. அதனால், பெண்களுக்கென்று தனி வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்தோம். கல்குவாரியில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களுக்கு, குவாரியைக் குத்தகைக்குக் கொடுத்து, நடத்தச் செய்தோம். இதனால் கொத்தடிமை முறை ஒழிந்ததோடு, பெண்களே குவாரியைச் சிறப்பாக நிர்வகிக்கும் நிலைக்கு வந்தார்கள்.

சுகாதாரச் செயலாளராக நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். அப்போது பெண் சிசுக்கொலை விஷயத்தைக் கையாண்ட விதம் பற்றிச் சொல்லுங்கள்.

பெண் சிசுக்கொலை, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மிக முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. மதுரை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வட ஆர்க்காடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக்கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தன. எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எவ்வளவு குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து தகவல்களைத் திரட்டிக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறும் பிரசவங்கள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டன. குழந்தைகள் வீட்டுக்குச் சென்ற பிறகு, அவர்களைக் கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வருடத்தில் சுமார் 3 ஆயிரம் பெண் குழந்தைகள் உயிரிழந்திருந்த தகவல் தெரியவந்தது.

பெண் சிசுக்கொலைக்குப் பொதுவாகக் குழந்தையின் தாயைத்தான் குற்றவாளியாக்கிவிடுகிறது இந்தச் சமூகம். பெண் சிசுக்கொலை என்பது சமுதாயப் பிரச்சினை. பெண் குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிடும்போது, குடும்பமே சேர்ந்துதான் அந்த முடிவை எடுக்கிறது. பிரச்சினை என்று வந்தால் மட்டும் தாய் மீது குற்றத்தைச் சுமத்திவிடுவார்கள்.

அறிவொளி அனுபவத்தை வைத்து, பெண் சிசுக்கொலைக்கு எதிராகப் பிரசாரங்களை ஆரம்பித்தோம். கலைப் பயணங்களை நடத்தி னோம். அதற்கு நல்ல பலன் இருந்தது. ஆண்டுக்கு 3 ஆயிரம் பெண் குழந்தைகள் இறந்த நிலை மாறி, பெண் சிசுக்கொலையே முற்றிலும் நின்றுவிட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளைச் சொல்லுங்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. பகலில் மட்டுமே இயங்கின. அடிப்படை மருத்துவக் கருவிகள்கூட இருக்காது. இப்படியொரு இடத்துக்கு மக்கள் எப்படி வருவார்கள்? முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவக் கருவிகளை வழங்கினோம். நான்கு செவிலியர்களில் இருவர் பகலிலும் இருவர் இரவிலும் பணியில் இருக்கச் செய்தோம். இவர்களுடன் உதவியாளர்களும் இருப்பார்கள். அவசரத் தேவை என்றால் மருத்துவரை அழைக்கவும் ஏற்பாடு செய்தோம். 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகக் காத்திருந்தன. மக்களுக்கும் நம்பிக்கை வந்தது. சில ஆண்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பிரசவத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
ஷீலா ராணி சுங்கத் ஐஏஎஸ்சைக்கிள் புரட்சிமக்கள் கலெக்டர்Sheela rani chunkathஅறிவொளி இயக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x