விவாதக் களம்: திரைத்துறையைச் சலவை செய்வோம்

விவாதக் களம்: திரைத்துறையைச் சலவை செய்வோம்
Updated on
1 min read

சமூக ஊடகங்களிலும் யூடியூப் அலைவரிசைகளிலும் பெண்கள் குறித்த தவறான சித்தரிப்பு குறித்து அக்டோபர் 24 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். பெண்களை இப்படிக் காட்சிப்படுத்துவதையும் பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் வன்முறையையும் குறைக்க என்ன வழி எனக் கேட்டிருந்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:

பெண்களும் ஆணுக்கு இணையனவர்கள்தாம் என்கிற அடிப்படைப் புரிதலைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

- கிருபாகரன்

நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பாலினச் சமத்துவம் குறித்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற்றத்தை உள்ளடக்கியது என்பதை ஆணாதிக்கச் சமூகம் உணர வேண்டும்.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

இன்று பெரும்பாலான பெண்கள் படித்துவிட்டு வேலைக்குச் சென்று பொருளாதாரத் தன்னிறைவுடன் இருக்கிறார்கள். அதனால், ஆண்களை எதிர்பார்த்து அவர்கள் சம்பாதித்துக் கொடுத்து வாழவேண்டிய நிலையில் இல்லை. பெண்களின் அடையாளம் அறிவுதான்.

- தங்கவேல் பழனிச்சாமி, பெரிய கள்ளிவலசு.

பெண்களை உடல்களாக மட்டும் கருதும் எண்ணத்தைக் களைய பெண்களின் உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளைப் பொதுவெளியில் எடுத்துரைக்க வேண்டும். பெண்ணுடல் பற்றிய புரிதல்களைப் பள்ளிக் காலத்திலிருந்தே மாணாக்கருக்குச் சிறந்த முறையில் போதிக்க வேண்டும். ஆசிரியர்களே இன்னும் கூச்சத்தை விடவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

- ப்ரீத்தி பவி, பொன்னமராவதி.

அண்மையில் வெளியான ஒரு படத்தில் இடம்பெற்ற, “உனக்கு ஏத்த மாதிரி வாழ்வது சுதந்திரமில்லை, மத்தவங்க உன்னை ஏத்துக்கிற மாதிரி வாழ்வதுதான் சுதந்திரம்” என்பது போன்ற வசனங்கள்கூடப் பெண்கள் மீது நேரடியாக நிகழ்த்தப்படும் வன்முறையே. இப்படிப்பட்ட காட்சிகளைக் களைந்து, பெண்களை உணர்வு கொண்டவர்களாகவும் சக மனுஷியாகவும் சம மரியாதையுடனும் நடத்த வேண்டும்.

- வர்ஷ், ஈரோடு.

பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் மிகுந்த காலதாமதத்திற்குப் பின்பே நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அச்சமின்றித் தொடர்கின்றன. தண்டனைகள் கடுமையாகவும் துரிதமாகவும் கிடைத்தால்தான் குற்றங்கள் குறையும்.

- ர. ரஜினி பியூலா ஷோபிகா, நாகமலை புதுக்கோட்டை, மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in