

அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பாக அமையும். அதனால்தான் நாடாளு மன்றத்தில் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இப்படியான போராட்டங்களுக்கு நடுவே சில செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துவிடுகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் உறுப்பினராக லீலாவதி நியமிக்கப்பட்டிருப்பது அந்த நம்பிக்கைக் கீற்றுகளுள் ஒன்று.
தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையத்தைத் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைத்துள்ளது. அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்ட உரிமைகள், நல உதவிகள், உரிமைகளுக்காகவும், அவர்களுக் கான சட்டங்கள் சரியாகச் செயல்படு வதற்கும், அவை மறுக்கப்படும் போது விசாரித்து அவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள ஏழு உறுப்பினர்களில் ஒருவராக லீலாவதி தன்ராஜ், பழங்குடியின மக்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தந்தை காட்டிய வழி
லீலாவதி, பொள்ளாச்சியில் வசிக்கிறார். இவருடைய கணவர் தன்ராஜ், பழங்குடியின மக்களுக்காகச் செயல்பட்டுவரும் ‘ஏக்தா பரிஷத்’தின் தமிழக நிர்வாகி. லீலாவதி, காவேரி உற்பத்தியாகக்கூடிய குடகுமலைப் பகுதியில் குடியா (மலை குடியா) சமூகத்தில் பிறந்தவர். இந்தக் குடகுமலைக்காடுகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியின் உயரமான பகுதியில் குடியா சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசக்கூடிய குடியா மொழி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகியவை சம அளவில் கலந்த திராவிட மொழியாகப் பார்க்கப் படுகிறது. தங்களில் ஒருவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளது, பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
லீலாவதி அவ்வளவு எளிதாக இந்தப் பதவிக்கு வந்துவிட வில்லை. இவரது தந்தை சிறு வயதில் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளியாக இருந்துள்ளார். அப்போது, பல சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளார். அதில் இருந்து மீட்கப்பட்டபின், தன்னைப் போன்ற பழங்குடியின மக்கள் நலனுக்காகவும், அவர்களுடைய பூர்விக மலைகளை ஆதிக்க நில உடைமைக்காரர்கள் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்தவும் போராடியதால் சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித்துள்ளார். மக்கள் போராட்டங் களால் குடகுமலையில் லீலாவதியின் தந்தை பழங்குடியினத் தலைவராக உயர்ந்தவர். தான் படிக்க முடியாத ஏக்கத்தைத் தன் மூத்தமகள் லீலாவதியைப் படிக்க வைத்துத் தீர்த்துக்கொண்டார். மங்களூருவில் உள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் பி.எஸ்.டபிள்யூ., சமூகப்பணி படிக்க வைத்துள்ளார்.
சேவையால் ஏற்பட்ட பிணைப்பு
லீலாவதி சிறுமியாக இருந்தபோது மலைக்கிராமத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்த்தார் அவருடைய தந்தை. சாலை இல்லாத, பூச்சிகள், விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் வழியாக மகளை திங்கள்கிழமை தூக்கிச் சென்று உண்டு உறைவிடப்பள்ளியில் விட்டு, வெள்ளிக்கிழமை தூக்கி வந்து விடுவார். படித்து முடித்துவிட்டுப் பழங்குடியின மக்களுடைய பிரச்சினைகளுக்காகவும் உரிமை களுக்காகவும் மனு எழுதுவது, போராட்டங்களில் பங்கேற்பது என்று தந்தைக்கு வலது கரமாக இருந்துள்ளார். அதன்பின், தன்னைப் போல் மதுரையில் பழங்குடி இன, பட்டியலின மக்களுடைய நலனுக்காகப் போராடிய தன்ராஜ் என்பவரைத் திருமணம் செய்தார்.
அதுவரை கர்நாடகத்தில் குடகு மலையில் பழங்குடியினருக்காகப் போராடிய லீலவாதி, திருமணத் துக்குப் பின் கணவருடன் கேரளம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாது அவர்கள் கிராமத்தில் அவர்களுக்காக ஒரு பழங்குடியினத் தலைவரை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுவந்தார். தன் சமூகப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகத்தான் தற்போது தனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக லீலாவதி கூறுகிறார்.
‘‘நான் குடகுமலையில் பிறந்தாலும் சிறுவயது முதலே எங்களது காடுகளுக்கு அருகே உள்ள காபித் தோட்டங்களில் பணியாற்றிய தமிழக மக்களுடன் நல்ல உறவு உண்டு. அங்கே நம் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், கூலிப் பிரச்சினைகளுக்காகவும் அப்பா முன்னின்று போராடுவார். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ்மொழி நன்றாகப் பேசத் தெரியும். எங்கள் அப்பா பழங்குடியின மக்களுக்காக மட்டுமின்றி வனத்தில் வாழும் பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத் துக்காகவும் பாடுபட்டவர். தன் பூர்விக விவசாய நிலத்தை எங்கள் வனகிராமத்தை ஒட்டி வாழ்ந்து வரும் நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அம்மா தானமாக வழங்கினார்.
இதனால் பரந்துபட்ட பூர்வகுடி பழங்குடி சமூகத்திற்காகப் பாடுபட வேண்டும் என்கிற சிந்தனை சிறுவயதிலேயே வந்துவிட்டது. அதற்காகவே பழங்குடிகளுக்காகப் பாடுபடுபவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டேன்” என்கிறார் லீலாவதி.
மக்களின் முன்னேற்றமே லட்சியம்
ஆரம்பத்தில் லீலாவதியின் தந்தைக்கு இவர்களது திருமணத்தில் உடன்பாடு இல்லையாம். அதன்பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக வேலை செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகே குடகு மலையில் திருமணம் நடந்தது.
“தமிழகத்தில் வாழும் 36 பழங்குடி சமூகத்தின் பிரதிநிதியாக, குரலாக, அடையாளமாக விளங்கிப் பாடுபடுவேன். மேலும், தகுதி இருந்தும் பழங்குடியின அங்கீகாரம் பெற முடியாமல் தவிக்கும் பழங்குடி சமூகத்திற்குச் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெற்றுத்தருவதுடன் அவர்களது நலன் சார்ந்த முன்னேற்றத்திற்கும் நிச்சயமாக அயராது உழைப்பேன். தேவைப்படுகிற ஆலோசனை களையும் வழிகாட்டுதல்களையும் அரசுக்கு வழங்குவேன். தமிழகப் பழங்குடிகளுக்கும் அரசுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவேன்.
தற்போது மலைக்கிராமங்களுக் குள்ளேயே நுகர்வுக் கலாச்சாரம் வந்துவிட்டதால் அவர்களும் சங்கடப் படுகிறார்கள். பழங்குடியினருக்காகப் போராடுவது மட்டுமல்லாமல் அவர்கள் மத்தியில் அழிந்துவரும் கலைகளைப் பெரியவர்களிடம் இருந்து பதிவு செய்து அடுத்த தலைமுறை யினருக்குக் கொண்டு செல்லும் பணிகளிலும் ஈடுபடுகிறேன்.
பழங்குடியினக் குழந்தைகளுக்காக மாலை நேர வகுப்புகளையும் அவர்கள் கிராமங்களிலே நடத்தி வருகிறோம். இதுபோன்ற பெரிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. மலைக்கிராமங்களில் தண்ணீர், வீடு, சாலை இல்லை. முன்பு இதற்காக அதிகாரத்தில் இருந்தவர்களிடம் கேட்டோம். தற்போது அதைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் இவற்றைச் செய்து கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது’’ என்றார் லீலாவதி.