Published : 31 Oct 2021 03:08 am

Updated : 31 Oct 2021 06:04 am

 

Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 06:04 AM

விவாதக் களம்: வளர்ப்புமுறையிலும் மாற்றம் வேண்டும்

debate

இளம்பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதை சுவாரசியமான கதைபோல் ஒளிபரப்பிய யூடியூப் அலைவரிசை ஒன்றின் அணுகுமுறை குறித்து அக்டோபர் 24 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். எல்லா நிலைகளிலும் பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் வன்முறையைக் குறைக்க என்ன வழி எனக் கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

ஆண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ அதே போன்று பெண்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. தற்போது பெண்களைச் சார்ந்துதான் பல இடங்களில் ஆண்கள் வாழ்கிறார்கள் என்கிற நிலை இருந்தபோதும் இந்தச் சமூகம் அதைப் பரவலாகப் பேசுவதில்லை. ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்றெல்லாம் பேசிப் பொழுதைக் கழிக்காமல் ஆண்களும் பெண்களும் சமத்துவத்தோடு வாழ்வதற்கு வழி காண வேண்டும்.

- மா.கல்பனா பழனி, பென்னாகரம், தருமபுரி.

************************

பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கற்பிதங்கள் ஆண்களால் தான் உருவாக்கப்பட்டன. அதனால்தான் பெண் என்னும் பிம்பம் புனிதமாகக் கட்டமைக்கப்பட்டது. குற்றம் பெண்ணின் ஆடையில் இல்லை. ஆணின் பார்வையில்தான் இருக்கிறது. பெண்ணை வெறும் பண்டமாகப் பார்ப்பதாலேயே வன்முறைகள் நடக்கின்றன. பெண்ணைச் சக தோழியாக எண்ணத் தொடங்கினாலே போதும். அவளைப் போற்றவும் வேண்டாம், தூற்றவும் வேண்டாம். ஆண்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று பெண்களுக்குத் தோன்றும் இடங்களில் தயங்காது எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய வேண்டும். அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

**************************

ஆண் பிள்ளைகளை வளர்க்கும்போதே பெண் பிள்ளைகளை மதித்து நடக்கும் பண்பினைக் கற்றுத்தர வேண்டும். வேரோடிப் போயிருக்கும் இந்த ஆதிக்க மனப்பான்மையை யாரால் அழிக்க முடியும் என்று கருதாமல் சமூகத்தில் உள்ள அனைவருமே இணைந்து செயல்பட்டே ஆக வேண்டும். பெண் கொடுமை என்ற வன்கொடுமை நிகழும் இடங்களில் சட்டம் மிகக் கடுமையான தண்டனைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

- மணிமேகலை, ஓசூர்.

****************************

குழந்தைப் பருவத்தில் ஊட்டி வளர்க்கப் படும் பாகுபாடுதான் பின்னாளில் பெரிய விஷயங் களுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. மணம் முடித்தபின் ஆண்கள் சந்தேகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் களைய அரசுதான் முன்வர வேண்டுமா என்ன? தனிமனித ஒழுக்கமே அவனது வாழ்க்கையை நிர்ணயம் செய்யும். அவற்றைப் பள்ளி பருவத்தில் சரியாக விதைக்க வேண்டும்.

- ச. பிரதீப், திண்டுக்கல்.

********************************

அலங்கரித்துக்கொள்வது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழ்வது ஆகியவை அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை முதலில் ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். ஆண்கள் நிகழ்த்தும் வன்முறையை தைரியமாக வெளியே சொல்லி, தண்டனைக்கு உட்படுத்தித் தன்னைப்போல் மற்றொரு பெண் பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

- சபிதா தேவி, மதுரை.

***********************************

பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமை களைப் பார்த்துப் போகிறபோக்கில் ஐயோ பாவம் என சொல்லும் அளவில்தான் உள்ளேன். இது ஆணாதிக்கச் சிந்தனை என்பதை உணர முடிகிறது. சாதியும் மதமும் ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கின்றன. பெண்களை நுகர்பொருளாகவும் பெற்றோர், கணவர், குழந்தைகளுக்குக் கட்டுப் பட்டவளாகவும் வைத்திருக்கின்றன. ஆண், பெண் இருவரும் அறிவும் திறனும் பண்பும் கொண்ட மேம்பட்ட உயிர்களாக உறுதிப்படுத்துவதற்கு பெண்ணைச் சமமாகப் பாவிக்கும் அரசியல் உறுதி தேவை. அரசியல் மாற்றம்மூலம் பெண்கள் மீதான வன்முறையைக் களைய முடியும்.

- காசிநாததுரை, வேந்தோணி, ராமநாதபுரம்.

***************************************

ஆண்கள் தன் மீதோ பிற பெண்கள் மீதோ அதிகாரம் செலுத்துவதில் பெருமிதம் கொள்ளும் எண்ணத்தை உடைக்க வேண்டும். பெண்களை உடலாக மட்டும் பார்க்கும் எண்ணத்தைப் பெரும்பாலும் காட்சி ஊடகங்களே கட்டமைக்கின்றன. அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற படைப் பாளிகள் கண்ணியத்தோடு செயல்பட வேண்டும். திரைப்படத்திலோ விளம்பரப் படத்திலோ பெண்ணின் உடலை முதன்மைப் படுத்துவதைவிட அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறான தொடர் காட்சி அமைப்புகள் சிறு தாக்கத்தையாவது எற்படுத்தும். அது சமூகத்திலும் எதிரொலிக்கும்.

- த.செந்தமிழ்.

*********************************

பெண்களை வெறும் காட்சிப் பொருளாகக் காட்டுவதில் திரைப்படம், இணையம், விளம்பரம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடம்கூட ஸ்மார்ட் போன் உள்ள நிலையில் இப்படியான காட்சியமைப்புகள் அவர்களை எதிர்மறையாகத் தூண்டக்கூடும். திரைப்படத்தில் பார்க்கும் காதல் காட்சிகளால் கவரப்பட்டு, நிஜத்திலும் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்கிறார்கள். இது போன்ற காட்சிகள், விளம்பரங்கள் போன்றவற்றைத் தடைசெய்ய வேண்டும். பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் ஆண்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

- பரகத் அலி சித்தாரா.

***************************

முதலில் குடும்பம் உதாரணமாகத் திகழ வேண்டும். வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து செய்வது அதில் முதல் படி. வீட்டுப் பெண்களிடம் அலுப்பை, கோபத்தை, சோகத்தை மட்டும் காட்டாமல் மனம்விட்டுப் பேச நேரம் ஒதுக்குவது நல்லது. இப்படி அன்றாட வாழ்வில் அன்பைக் காட்டினால் அதைப் பார்த்து வளரும் மகன்களுக்குப் பெண்களை மதிப்பது இயல்பாகிவிடும். திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பெண்களைக் காட்சிப் பொருளாக நடத்துவதைக் கண்டிக்க வேண்டும். குடும்ப வன்முறையைத் தலைமுறை தலைமுறையாக ஆண்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதைக் கண்டித்துத் திருத்த வேண்டும்.

- வித்யா சங்கரி

********************************

அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் நோக்கிலும் சுவாரசியம் எனும் பேரிலும் பல யூடியூப் சேனல்கள் பெண்களுக்குப் பாதகம் விளைவிக்கும்வண்ணம் கேள்விகளைத் தொடுக்கின்றனர். மனிதனைப் படைக்கும் ஒவ்வொரு பெண்ணும் இறைவி என்று ஆண்கள் எண்ணினால் இது போன்ற வக்கிரங்களுக்கு வாய்ப்பில்லை.

- ச. அரசமதி, தேனி.

***************************

தங்களை அழகுப் பதுமைகளாகக் காட்டிக் கொள்ள விரும்புவதாலும், அழகென்ற பொய் வர்ணனைகளுக்கு மதி மயங்குவதாலும் ஏற்படும் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பெண்ணுக்கு நடந்த துயரம் என்கிற அளவில் விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே கடந்து செல்லாமல் சமூகச் சீர்கேட்டின் அடையாளமாகக் கருதி அதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- ம.தனப்பிரியா, கோவை.

***********************

பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் குற்றங் களுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் அச்சமின்றிப் புகார் கொடுப்பர்.

- கீர்த்திகா நாகராஜன்

****************************

நாளைய தலைமுறையை காக்க, நீண்ட தொலைநோக்குப் பார்வையுடன் பள்ளிகளில் பாலியல் கல்வி கொண்டு வரலாம். பாலியல் பற்றிய புரிதல்களை, ஆண், பெண் பற்றிய அடிப்படை உண்மைகளை அந்தந்த பருவத்திற்கு ஏற்ப தக்க ஆசிரியர்களைக் கொண்டு விதைக்கலாம். ஆண்மை, பெண்மை பற்றிய புரிதலற்ற குழப்பங்கள் நம் மனத்திற்குள் திணித்து வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் வன்முறையைக் களையவும் பெண்ணை உடலாகப் பார்க்கும் அணுகுமுறையை மாற்றிடவும் பாலியல் கல்வியும் தேவை.

- யாழினி ஆறுமுகம், சத்தியமங்கலம்.

*******************************

பெண்களுக்கான இலக்கணங்கள் எல்லாமே ஆண்களால் எழுதப்பட்டவை என்றாலும், ஈ.வெ.ரா.பெரியார் போன்றவர்கள் எழுதிய இலக்கணங்கள் சற்றே மாறுபட்டவைகளாக உள்ளனவே! அவற்றை ஏன் பெண் சமூகம் முழுவதுமாக ஏற்றுக்கொள்வது இல்லை? இந்தச் சமூகம் செய்யும் எல்லாச் செயலுக்கும் கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை உருவாக்கி, அதில் அனைத்து மனிதச் செயல்களையும் இணைத்துவிட்டதாலேயே இன்றும் இந்தியப் பெண்கள் அந்த அடிமைச் சங்கிலியை அறுக்க மறுக்கிறார்கள். ஆண்கள் உருவாக்கிய பெண் இலக்கணங்களை உடைத்தெறிய வேண்டுமானால் பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

- தி.சௌந்தர்ராஜன், அசோக்நகர், சென்னை.
விவாதக் களம்வளர்ப்புமுறையில் மாற்றம்Debateபாலியல் வன்முறை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x