

அறுபது வயதுக்கு மேல் வேலை கேட்டுச் சென்றால், ஓய்வு பெற வேண்டிய வயதில் வேலையா என்று பலர் ஆச்சரியப்படக்கூடும். ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த கலைச்செல்வனும் சுசீலாவும் அறுபது வயதுக்கு மேல் புதிய பாதையில் பணிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் இளைஞர்கள் கோலோச்சும் ஆர்.ஜே. எனப்படும் ரேடியோ ஜாக்கியாகக் கோலோச்சுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்ச்சோலை இணையதள வானொலி (www.perthtamiltalkies.com.au) சிங்கப்பூரிலிருந்தும் தற்போது ஒலிபரப்பாகிறது. அதில்தான் இவர்கள் இருவரும் இணைந்திருக்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சித் துறையில் 45 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் கலைச்செல்வன். சிறுவர் நிகழ்ச்சிகளும் நாடகங்களும் இவரது தனித்தன்மை. சமூக அமைப்புகளின் ஆதரவுடன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவந்தார். தொடர்ச்சியான பணிகளில் இருந்து விலகி சிறிது ஆசுவாசப்படலாம் என்று அவர் நினைத்த வேளையில்தான் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்புத் தேடி வந்தது.
ஒலி நாடாக்களே தகவல் களஞ்சியம்
கலைச்செல்வனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுசீலாவும் இந்தத் துறையில் 40 ஆண்டுகள் அனுபவமிக்கவர். மலையாளம் இவரது தாய்மொழி என்று நம்ப முடியாத அளவுக்குத் தெளிவாக இருக்கிறது இவரது தமிழ்ப்பேச்சு. 19 வயது துடிப்பான இளம்பெண்ணாக இந்தத் துறையில் அடியெடுத்துவைத்தவர், போகப்போக அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். திரைப்படங்கள் குறித்த பேச்சுக்கு இடமில்லாத குடும்பத்திலிருந்து வந்தவருக்குத் தன் வீட்டருகே குடியிருந்த பெண் ஒருவர்தான் திரைப்படங்கள் குறித்த பல்வேறு தகவல்களைச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.
“தினமும் அவங்க வீட்டுக்குப் போவேன். அவங்க எல்லாப் படங்களையும் பார்த்திருப்பாங்க. அவங்ககிட்ட இருந்து நிறைய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். திரைப்படங்கள் குறித்த மாத இதழ்களைத் தவறாமல் வாசித்துக் குறிப்பெடுத்துக்கொள்வேன்” என்று சொல்லும் சுசீலா, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது தான் நடத்திய இரண்டு மணி நேர நிகழ்ச்சியை மறக்க முடியாது என்கிறார்.
“அவர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் இரவோடு இரவாக இசை நூலகத்துக்குச் சென்று அங்கிருந்த இசை நாடாக்களைப் போட்டுக் கேட்டேன். இன்றுபோல் அன்றைக்குக் கூகுளில் அனைத்தையும் தேட முடியாதே. அதனால், அவரைப் பற்றிய அரிய தகவல்களைப் புத்தகங்கள், தெரிந்தவர்கள் என்று கேட்டுச் சேகரித்தேன்” என்று புன்னகைக்கிறார் சுசீலா.
ஆஸ்கர் அங்கீகாரம்
கலைச்செல்வன், சுசீலா இருவரும் பாடலைப் பற்றியும் நடிகர்களைப் பற்றியும் மட்டுமே பேசுவதில்லை. ஒவ்வொரு நாளும் நேயர்களுக்குச் சொல்ல அவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கும். “எங்கள் நிகழ்ச்சியைக் கேட்கிறவர்கள் நிகழ்ச்சியின் முடிவில் ஏதாவதொன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்தானே” என்று சிரிக்கிறார்கள்.
கலையரசன் தயாரித்த நிகழ்ச்சி ஒன்று ஆஸ்கரில் பங்கேற்று வெண்கலம் வென்றிருக்கிறது. சிறந்த தொகுப்பாளருக்கான அங்கீகாரத்தை இவர்கள் பெற்றிருக்கிறார்கள். நொடிக்கு இவ்வளவு வார்த்தைகள் என்று கணக்கிட்டுச் சொற்களை உச்சரிக்கும் இளையோருக்கு மத்தியில் ஆழ்ந்த அனுபவமும் பொறுமையும் நிறைந்த குரலில் நிதானமாக இவர்கள் தொகுத்து வழங்குவது நேயர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“25 ஆண்டுகளாக பெர்த் வானொலியை நடத்திவரும் கபிலனின் பணி பாராட்டுக்குரியது. அதன் வெள்ளி விழா ஆண்டில் நாங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி. செப்டம்பரில் இருந்து ‘நெஞ்சில் ஜில் ஜில்’ என்கிற நிகழ்ச்சியைத் திங்கள் முதல் வெள்ளிவரை காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை வழங்கிவருகிறோம். நாளை ஒலிபரப்பாகவிருக்கும் பாடல்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்க வேண்டும்” என்று விடைகொடுத்தனர் இருவரும். பணி மீதான இந்த அக்கறையும் பொறுப்புணர்வும்தான் அறுபதைக் கடந்த பிறகும் அவர்களை உற்சாகத்துடன் இயங்கவைக்கிறது.