Last Updated : 10 Oct, 2021 02:17 AM

 

Published : 10 Oct 2021 02:17 AM
Last Updated : 10 Oct 2021 02:17 AM

பெண்கள் 360: நாகஸ்வரப் பெண்களை மேடையேற்றும் நவராத்திரி விழா

நாகஸ்வரப் பெண்களை மேடையேற்றும் நவராத்திரி விழா

நாகஸ்வரம், தவில் போன்ற கருவிகளை இசைப்பவர்களாகப் பெண்கள் மேடை ஏறுவது அரிதினும் அரிதான நிகழ்வாகவே நீடிக்கிறது. இவ்விரு கருவிகளில் உலக அளவில் புகழ்பெற்ற ஆண் கலைஞர்கள் பலரை நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், பெண் நாகஸ்வரக் கலைஞர்களில் மதுரை எஸ்.பொன்னுத்தாய் போன்ற மிகச் சிலர் மட்டுமே கவனம் பெற்றிருக்கிறார்கள்.

இதற்குப் பொருள் பெண்கள் நாகஸ்வரம் இசைக்கக் கற்பதில்லை என்பதல்ல. நாகஸ்வர வித்வான்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தந்தையிட மிருந்தும் தாத்தாவிடமிருந்தும் நாகஸ்வரம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்ற பெண்கள் நாகஸ்வரம் பயில்வதற்கான வாய்ப்புகள் இல்லாத குறையைப் போக்குவதற் கான முயற்சிகள் 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் 17 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இசைப் பள்ளிகள் பெண்கள் நாகஸ்வரம் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தன. இவற்றின் மூலம் நாகஸ்வரத்தில் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் பட்டப்படிப்பை முடித்த பெண் கலைஞர்கள் உருவானார்கள். இன்னும் பல தனியார் முயற்சிகள் மூலமாகவும் நாகஸ்வரப் பெண் கலைஞர்கள் உருவாகிவருகிறார்கள். ஆனால், இவர்கள் தமது திறனை வெளிப்படுத்தப் போதுமான மேடைகள் கிடைப்பதில்லை. இப்போது அந்தக் குறையை நீக்குவதற்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் இசை குறித்துப் பல நூல்களை எழுதியிருப்பவரும் இசை ஆர்வலருமான லலிதா ராம்.

கர்னாடக இசையையும் இசைக் கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக இவர் தொடங்கியிருக்கும் ‘பரிவர்த்தினி’ என்னும் அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி நாட்களில் சிறப்பு கர்னாடக இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துவருகிறது. இந்த ஆண்டு ஆர்.பிரபாவதி, பி.பாகேஸ்வரி, காளீஷபி மெஹ்பூ, டி.வி.விஜயலட்சுமி, எஸ்.சந்தானலட்சுமி, டி.கே.மகேஸ்வரி, எஸ்.சாந்தி, பிரசன்னா சிவதாஸ், டி.வி.சங்கரி ஆகிய ஒன்பது நாக்ஸ்வரக் கலைஞர்கள், அவர்களின் கணவருடன் மேடையில் அமர்ந்து நாகஸ்வரம் வாசிக்கும் ஒன்பது நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு நடத்தியது. இவை ஒவ்வொன்றும் நவராத்ரி நவசக்தி சீரீஸ் என்னும் பெயரில் பரிவர்த்தினியின் யூட்யூப் அலைவரிசையில் நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் பதிவேற்றப்படுகின்றன. நிகழ்ச்சிகளைக் காண: https://bit.ly/3Bsoetm

அமிலத் தாக்குதலுக்கு உள்ளானோரின் உரிமைகள்...

அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, மருத்துவ உதவி, மறுவாழ்வு ஆகியவற்றைப் பெறும் உரிமை உண்டு என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் பெண்களே மிக அதிக அளவில் அமிலத் தாக்குதலுக்குள்ளாகின்றனர். திருமணமாகாத பெண்கள் காதலை மறுத்ததற்காக அமிலம் வீசி ‘பழிவாங்க’ப்படுகின்றனர். திருமணமான பெண்கள் கணவன் அல்லது அவருடைய உறவினர்களால் அமிலத் தாக்குதலுக்குள்ளாகின்றனர். அமில வீச்சுத் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. ஆனால், பாதிப்புக்குள்ளானவர்கள் அவற்றைப் பெறுவதில் சில நடைமுறை தடைகள் நிலவுகின்றன.

2010 நவம்பர் 24 அன்று மும்பையில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார் இரண்டு மகன்களுக்குத் தாயான அந்தப் பெண். அப்போது அவருடைய கணவர் அந்தப் பெண் மீது அமிலம் போன்ற எரிக்கும் திரவம் ஒன்றைக் கொட்டினார். இதனால், அந்தப் பெண் 70-80 சதவீதம் தீக்காயங்களுக்குள்ளானார். அவருடைய முகமும் சில உடலுறுப்புகளும் சிதைந்தன. அந்தப் பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்ட பத்து ஆண்டு சிறைத் தண்டனையை 2011-ல் மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடிய பாதிக்கப்பட்ட பெண், அமிலத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களின் மருத்துவத்துக்காகத் தான் ரூ.5 லட்சம் செலவழித்துள்ளாதாகவும் அரசுத் திட்டங்கள் எதுவும் தனக்கு உதவவில்லை என்றும் கூறினார். அமிலத் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கான மகாராஷ்டிர அரசின் மனோதைர்யா இழப்பீடு திட்டத்தின் கீழ் தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், மகாராஷ்டிர அரசு அந்தப் பெண் இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதற்கான வரையறைக்குள் வர மாட்டார் என்று கூறிவிட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அமிலத் தாக்குதலுக்குள்ளானவர்கள் இயலாமை கொண்டோர் உரிமைச் சட்டம் (Rights of Persons With Disabilities Act) 2016-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறிப்பிட்ட இயலாமை’ என்னும் வரையறைக்குள் வருவர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநிலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டது. அதோடு தன்னை இயலாமை கொண்ட நபராகப் பதிவுசெய்துகொள்ளுதல், பிரதமரின் நிவாரணத் தொகையைப் பெறுதல், தேசிய சட்டச் சேவைகள் ஆணையத் திட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீட்டுத் தொகையைப் பெறுதல், மருத்துவ, மறுவாழ்வு உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றின் மூலம் அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும் என்றும் மும்பை மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கால்பந்து களத்தில் கரம்கோத்த பெண்கள்

அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் கோத்தம் எஃப்.சி, வாஷிங்டன் ஸ்பிரிட் ஆகிய கிளப் அணிகளுக்கிடையிலான தேசிய மகளிர் கால்பந்து லீக் (National Women Soccer League) போட்டி தொடங்கி ஆறு நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளின் வீராங்கனைகளும் விளையாட்டை நிறுத்திவிட்டு ஒருவருக்கொருவர் கைகளை இணைத்துக்கொண்டு வட்ட வடிவத்தில் சில நிமிடங்கள் நின்றனர். வட கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற நார்த் கரோலினா கரேஜ், ரேஸில் லூஸ்வில்லி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இரு அணி வீராங்கனைகளும் இதேபோல் செய்தனர். இந்த கிளப் அணிகளின் கால்பந்து பயிற்சியாளர் பால் ரிலே மீது நார்த் கரோலினா கரேஜ் அணியில் விளையாடிய சினீட் ஃபர்ரேலி (Sinead Farrelly), மனா ஷிம் (Mana Shim) ஆகிய இரு வீராங்கனைகள் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வுகள் குறித்து இப்போது ஒரு இதழில் இவ்விரு வீராங்கனைகளும் மனம் திறந்திருக்கின்றனர். இதையடுத்து பால் ரிலே பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டார். வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தத் தவறியமைக்காக நார்த் கரோலினா கரேஜ் அணியின் உரிமையாளர் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனாலும் தேசிய மகளிர் கால்பந்து லீக் வீராங்கனைகள் கடந்த வார இறுதிப் போட்டிகளில் விளையாட மறுத்தனர். அதற்குப் பிறகு விளையாட வந்தபோது, தமக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறலை வெளி உலகுக்குச் சொன்ன வீராங்கனைகளுக்குப் போட்டியை நிறுத்திவிட்டு ஆடுகளத்திலேயே ஆதரவு தெரிவித்தனர். #மீடூ (#metoo) விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பற்றி எதுவும் பேசாமல் குற்றம்சாட்டிய பெண்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைப்பதில் நிகழும் காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறவர்கள் இந்தக் கால்பந்து வீராங்கனைகளின் செயல் குறித்து யோசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x