உலகின் மிக வயதான ஓவியர்!

உலகின் மிக வயதான ஓவியர்!
Updated on
2 min read

உலகின் மிக வயதான பெண் ஓவியர் லூங்கூனன். ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த லூங்கூனனுக்கு வயது 105. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் இவரது ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ஓவிய கண்காட்சியில் லூங்கூனனின் ஓவியங்கள் இடம்பெற்றன!

யார்?

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நிகினா பகுதியில் பிறந்தார் லூங்கூனன். 40 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் பாரம்பரியம் கொண்ட ஆண்டர்சன் மலைக்கு அருகில் உள்ள ஃபிட்ஸோரி நதிக்கரையில் வளர்ந்தார். இவருடைய பெற்றோர் கால்நடைப் பண்ணை வைத்திருந்தனர். கால்நடைகளை மேய்ப்பதும் சமைப்பதும் லூங்கூனனின் முக்கிய வேலைகள். சற்று வளர்ந்த பிறகு குதிரையேற்றம் கற்றுக்கொண்டார்.

“நாங்கள் வாழ்க்கையில் இருந்துதான் பாடங்கள் கற்றுக்கொண்டோம். எங்கள் கால்கள்தான் உலகை விசாலப்படுத்திக் காட்டின. காடுகளிலும் மேடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் தினமும் பல மைல் தூரம் நடந்தாலும் ஒருநாளும் சோம்பலோ, சலிப்போ வந்ததில்லை. எங்களுக்குத் தேவையான உணவு, கால்நடைகளுக்குத் தேவையான உணவு, மூலிகைச் செடிகளில் இருந்து மருந்துகள் எல்லாம் மைல் கணக்கில் நடந்து சென்றுதான் கொண்டு வருவோம். பழங்குடியினரின் வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் சுவாரசியமானது. இயற்கையோடு இணைந்தது’’ என்கிறார் லூங்கூனன்.

ஓவியராக மாறியது எப்போது?

95 வயதுக்குப் பிறகே லூங்கூனன் ஓவியராக மாறினார். அதற்குக் காரணம் அவரது சகோதரி. அவரும் பழங்குடியினரின் பாரம்பரிய ஓவியங்களைத் தீட்டி வந்தார். முதுமை லூங்கூனனின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை. ஒரு குழந்தைபோல மிகவும் ஆர்வத்துடன் ஓவியங்களைக் கற்றுக்கொண்டார். தன்னுடைய ஓவியக் கலையை மெருகேற்றிக்கொண்டார். 5 ஆண்டுகளில் 380 ஓவியங்களை வரைந்துவிட்டார். இன்று நிகினா மொழி பேசும் பழங்குடி மக்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். பழங்குடி மக்களின் மொழி, கலை, கலாசாரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் லூங்கூனனின் ஓவியங்கள் மிக அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்றக் கட்டிடம், பல்வேறு பல்கலைக்கழங்களில் லூங்கூனனின் ஓவியக் கண்காட்சிகள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன. லூங்கூனனின் தனித்துவம் மிக்க ஓவியங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வரவேற்பு இருக்கிறது. வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அளவில் லூங்கூனனின் புகழ் பரவிவிட்டது. கண்காட்சி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய தூதரகத்தில் ஓவியங்கள் வைக்கப்பட இருக்கின்றன.

திறமைக்கு வயது தடையில்லை…

“பழங்குடியினரின் வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள்தான். இன்றும் கூட நிலையாக ஒரு இடத்தில் வாழ முடியவில்லை. எங்கள் இனத்தின் அருமை பெருமைகளை என் ஓவியங்கள் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். என் ஓவியத்துக்குக் கிடைக்கும் பாராட்டை நான் மதிக்கிறேன். என் வயதையும் சேர்த்துச் சொல்லும்போது நான் அதிகம் மகிழ்வதில்லை. எனக்கொன்றும் அவ்வளவு வயது ஆகிவிடவில்லை. இன்றும் தனியாளாக நீண்ட தூரம் என்னால் நடந்து செல்ல முடியும். வயதுக்கும் திறமைக்கும் தொடர்பில்லை. நான் என் வயதைக் காரணம் காட்டி ஓவியம் தீட்டும் எண்ணத்தைக் கைவிட்டிருந்தால், இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஓவியராக இருந்திருக்க மாட்டேன். கங்காரு நாட்டில் இருந்து கழுகு நாடு வரை என் ஓவியங்கள் பறந்து சென்றுவிட்டன. என்னால்தான் அவ்வளவு தூரம் செல்ல முடியவில்லை. எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும் எங்களின் கலையைக் காப்பாற்றியதில் எனக்கும் சிறு பங்கு உண்டு என்ற திருப்தியே அதிக மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார் லூங்கூனன்.

பறவைக் கோணத்தில் அடர் வண்ணங்களில் புள்ளிகளால் வரையப்படும் நிகினா ஓவியங்களைப் போலவே லூங்கூனனும் ரொம்பவே வசீகரிக்கிறார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in