Published : 03 Oct 2021 05:04 am

Updated : 03 Oct 2021 06:30 am

 

Published : 03 Oct 2021 05:04 AM
Last Updated : 03 Oct 2021 06:30 AM

பெண்கள் 360: கண்ணியத்தைப் பாதுகாக்கும் சடங்கு

women-360

தொகுப்பு: கோபால்

செவிலியர்களின் இரண்டு போராட்டங்கள்

தமிழகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வகையான செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் இரு தரப்பினருமே கோவிட்-19 தாக்கத்தைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இன்றியமையாத பங்காற்றிவருகிறவர்கள். 2019-ல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற 3,000 செவிலியர்கள் கோவிட்-19 மருத்துவப் பணிக்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிகப் பணியமர்த்தப்பட்டனர். இந்தச் செவிலியர்களைத் தற்போது மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றும் வகையிலான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருகிறது. இந்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தாங்கள் அரசு செவிலியர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் ஆகிய இரண்டு முதன்மை கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரக (டி.எம்.எஸ்) வளாகத்தில் செப்டம்பர் 29 அன்று நள்ளிரவுவரை ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் செவிலியர் பிரதிநிதிகளுடன் நாளை (அக்டோபர் 4) பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். மறுபுறம் கிராம சுகாதார செவிலியர்கள் தங்கள் பணி நேரம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 42 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகப்பேறு உதவிகள், தாய் சேய் நல உதவிகள், கருவுற்ற பெண்கள் குறித்த தொடர் கண்காணிப்புகள், மற்ற தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கிராம சுகாதாரச் செவிலியர்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் ஒரு நாளைக்கு 12-14 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியிருப்பதாகவும் விடுமுறை நாட்களிலும் பணிக்கு வர வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்.


அரபு மண்ணில் முதல் பெண் பிரதமர்

துனீசிய அதிபர் கைஸ் சயீத், 63 வயதான நஜ்லா பெளடென் ரோம்தானே (Najla Bouden Romdhane) என்பவரை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இதன் மூலம் துனீசியாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரபுப் பகுதியில் பிரதமரான முதல் பெண் என்னும் பெருமையை நஜ்லா பெற்றுள்ளார். 2011-ல் அரபு வசந்தத்துக்கு வித்திட்ட புரட்சிப் போராட்டங்களின் மூலம் துனீசியாவில் சர்வாதிகார ஆட்சி நீக்கப்பட்டு ஜனநாயகம் மலர்ந்தது. அதன் மூலம் பிரதமருக்கும் அவர் தலைமையிலான நாடாளுமன்றத்துக்கும் நிர்வாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் பிரதமரை பதவி நீக்கம்செய்து நாடாளுமன்றத்தைக் கலைத்ததோடு நிர்வாக அதிகாரத்தைத் தன்வசம் எடுத்துக்கொண்டார் அதிபர். விரைவாகப் புதிய அரசை அமைக்க உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் எழுந்த அழுத்தத்தைச் சமாளிக்கத் தற்போது பல்கலைக்கழகப் பேராசிரி யையும் உயர்கல்வி அமைச்சகத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவருமான நஜ்லாவைப் பிரதமராக நியமித்து அவர் தன் அமைச்சரவையை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் ஆட்சியில் தன்னுடைய அதிகாரத்தை எந்த அளவுக்குத் தளர்த்திக்கொள்வார் என்பதில் தெளிவில்லை. துனீசியாவில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தபோது சர்வதேசச் சமூகம் மகிழ்ச்சி யடைந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு அரசு அமைப்புகளில் பரவிய ஊழல் மற்றும் அரசியல்வாதிகளின் செயற்பாட்டின்மை காரணமாக மக்கள் வாழ்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. மேலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் இருந்த துனிசீயாவின் நிதி நிலைமை கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால் இன்னும் மோசமடைந்திருக்கிறது. எனவே, மிகவும் சவாலான காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார் நஜ்லா.

கண்ணியத்தைப் பாதுகாக்கும் சடங்கு

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து அண்மையில் வெளி யாகியுள்ள மணப்பெண் ஆடையக விளம்பரம் பெரிதும் கவனம் ஈர்த் துள்ளது. கன்யாமான் (#KanyaMaan) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்து மதத் திருமணங்களில் பின்பற்றப்படும் கன்னிகாதானம் என்னும் சடங்கைக் கேள்விக்குட்படுத்துகிறது. பெண்கள் தானப் பொருள் அல்ல என்பதை உணர்த்தும்விதமாக அந்தச் சடங்கை அவர்களின் கண்ணியத்தைப் (மானம்) பாதுகாக்கும் வகையிலான தாக மாற்றியமைக்கிறது. அந்த விளம்பரத்தில் வரும் திருமணத்தில் மணப்பெண்ணின் பெற்றோர் தம் மகளை மணமகன் குடும்பத்துக்குத் தானமாக அளிப்பதைப் போல் மணமகனின் பெற்றோர் தம் மகனை மணப்பெண்னின் குடும்பத்துக்குத் தானமாக அளிக்கிறார்கள். இதன் மூலம் மணமகனின் பெற்றோருக்கு மகளும் மணப்பெண்ணின் பெற்றோருக்கு மகனும் கிடைக்கிறார்கள் என்று பொருள்வருகிறது. மத நம்பிக்கை சார்ந்த சடங்கை நிராகரிக்காமல் இழிவுபடுத்தாமல் அதில் காலத்துக் கேற்ற சிறிய மாற்றத்தைப் பரிந்துரைக் கும் இந்த விளம்பரம் நவீன ஜனநாயகச் சிந்தனையாளர்களால் வரவேற்கப் பட்டிருக்கிறது. அதே நேரம் இந்து மத நம்பிக்கையை இழிவு படுத்துவதாகச் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. அண்மைக் காலங்களில் மதம், சாதி, பெண்ணடிமைத்தனம் போன்ற விஷயங்களில் சமூகத்தின் சிந்தனை மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல விளம்பரங்கள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. தீவிர எதிர்ப்புகளின் அழுத்தத்தால் சில விளம்பரங்கள் முற்றிலும் பொதுப்பார்வையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. கன்யாமான் விளம்பரத்துக்கு அந்த நிலை ஏற்பட வில்லை. இதுபோன்ற விளம்பரங்கள் சமூக ஏற்றதாழ்வுகளைத் தாங்கிப் பிடிக்கும் வழக்கங்கள் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைக்கும் என்பதே இவற்றின் வணிக நோக்கத் தைத் தாண்டிய முக்கியத்துவம்.

விளம்பரத்தைக் காண: https://bit.ly/3isFwPv
Women 360பெண்கள் 360செவிலியர்களின் இரண்டு போராட்டங்கள்அரபு மண்ணில் முதல் பெண் பிரதமர்கன்யாமான்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x