

இந்தியாவின் மூத்த பெண்ணியவாதிகளில் ஒருவரும் பெண்ணுரிமை அமைப்புகளின் முன்னோடியுமான கமலா பாசின் (75) செப்டம்பர் 25 அன்று மறைந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாவட்டத்தின் சாகிதன்வாலி கிராமத்தில் 1946-ல் கமலா பாசின் பிறந்தார். பிரிவினைக்கு முன்பு பிறந்த இவர் தன்னை ‘நள்ளிரவு தலைமுறை’களில் ஒருவர் என்று குறிப்பிடுவார்.
1970 முதலே தன் பெண்ணுரிமைப் போராட்டத்தைத் தொடங்கிவிட்ட இவர், தெற்காசிய நாடுகளின் பெண்ணுரிமைக் குரலாக ஒலித்தார். கிராமப்புற, பழங்குடியினப் பெண்களின் நலனுக்காக 2002-ல் ‘சங்கத்’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். கல்வியற்ற பெண்களும் பாலினப் பாகுபாட்டைப் புரிந்துகொள்ளும் வகையில் கலை, பாடல், விளையாட்டுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
‘பெண்ணியம்’ என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் அல்ல என்று சொல்லும் இவர், அது ஆணாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் இரு வேறு கருத்தியல்களுக்கு எதிரான மோதல் என்பார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமி ஒருவர் காவல் நிலையத்தில் இரு காவலர்களால் 1972-ல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு அப்போது பெண்ணிய அமைப்புகள் பெருவாரியாகத் திரண்டன. அதில் கமலா பாசினின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அந்த வழக்குக்குப் பிறகே பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குறித்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பாலினப் பாகுபாடு குறித்தும் ஆணாதிக்கத்தை எதிர்த்தும் நிறைய புத்தகங்களை கமலா பாசின் எழுதியுள்ளார். கசந்துபோன மண வாழ்வுக்குப் பிறகும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் என்பதைப் போராட்டங்கள் நிறைந்த தன் தனிப்பட்ட வாழ்க்கை மூலம் நிரூபித்தவர் இவர்.