

கரோனா தொற்று பரவாமல் இருக்க வீடுகளில் இருந்தபடியே இணையவழியில் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துவருகிறது. அந்த வகையில், கோவை ராவ் மருத்துவமனை உடன் இணைந்து ‘கருவுறாமை: காரணங்களும் தீர்வுகளும்’ எனும் இணையவழிச் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வை செப்டம்பர் 8 அன்று நடத்தியது.
இல்லற வாழ்வில் இன்றைக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது குழந்தைப் பேறின்மையே. ஒரு பெண் கருவுறாமல் இருப்பதற்குப் பெண் மட்டுமே காரணமல்ல. இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் ஆண் - பெண் இருவருக்குமே உடல்நலம் சார்ந்த பல காரணங்களால் கருவுறுதல் நிகழாமல் போகிறது. இதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ளாமல் அல்லது சரியான ஆலோசனைகளைப் பெறாமல் தயங்கி நிற்பவர்களே நம்மில் அதிகம். குழந்தைப்பேறின்மைக்கான காரணங்களைச் சொன்னதோடு அவற்றுக் கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றையும் மருத்துவர்கள் விளக்கினார்கள். நிகழ்ச்சியின் இடையே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விடையளித்தார்கள். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’யின் உதவி செய்தி ஆசிரியர் பிருந்தா சீனிவாசன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் பங்கேற்ற மருத்துவர்கள் பேசியதிலிருந்து:
ராவ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் ஆஷா ராவ்:
முதன்முதலாக கோவையில் 1977-ல் லேபராஸ்கோபி அறுவைச் சிகிச்சையை ஆரம்பித்தோம். 1996-ல் டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை முறையை ஆரம்பித்துவிட்டோம். குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு 40 சதவீதம் பெண்கள் காரணமாகவும், 40 சதவீதம் ஆண்கள் காரணமாகவும் இருக்கிறார்கள். 20 சதவீதம் வேறு காரணங்களாகவும், ஆணும் பெண்ணும் இணைந்த காரணங்களாகவும் இருக்கின்றன. இன்றைய காலச்சூழலில் ஆண் - பெண் இருவருமே வீட்டுச் சூழலிலும், வேலை செய்யும் இடத்திலும் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளா கின்றனர். குழந்தைப் பிறப்பு நிகழாமல் இருப்பதற்கு இதுவுமொரு காரணம்.
கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப்பை போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகளே பெண்கள் கருவுறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கலாம். சிலருக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் இருக்கலாம். இந்தப் பிரச்சினை உள்ள பெண்கள் முதலில் உணவில் மாவுச்சத்தைக் குறைத்து, நிறைய காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைபடி சில மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு, கருமுட்டை உருவாகும் காலத்தில் கணவரோடு சேர்ந்திருந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புண்டு.
ராவ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தாமோதர் ராவ்:
முன்பெல்லாம் திருமணமாகிக் குழந்தைப் பேறு இல்லை என்றவுடன் பெண்ணும், பெண்ணின் தாயாரும் மட்டும் மருத்துவமனைக்கு வருவார்கள். பெரும்பாலும் ஆண்கள் வருவதில்லை. ஆனால், தற்போது இந்நிலை மாறிவருகிறது. குழந்தைப் பேறின்மைக்கு ஆண் மலட்டுத்தன்மையும் காரணமாக இருக்கலாம் எனும் புரிதலில் ஆண்களும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பெண்களைவிட ஆண்களுக்கான பரிசோதனை முறை எளிமையானது. ஆண்களின் உயிர் அணுக்களை எடுத்துப் பரிசோதிப்பதன் மூலமாகக் காரணத்தைக் கண்டறியலாம். ஆண்களும் தயங்காமல் மனைவியுடன் பரிசோதனைக்கு வர வேண்டும்.
ஆண் மலட்டுத்தன்மைக்கு இன்றைக்கு மாறியிருக்கும் வாழ்க்கை முறையும் ஒரு காரணம். மன அழுத்தம், மது அருந்துதல், புகை பிடித்தல், போதைக்கு அடிமையாதல், சத்தற்ற உணவை உட்கொள்ளுதல், உயிரணுவில் தொற்று ஏற்படுவது, சிறுவயதில் ஆண்களின் விதையுறுப்பில் காயம் ஏற்பட்டிருத்தல் போன்றவை ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள். இன்றைய நவீன மருத்துவப் பரிசோதனைகளின் மூலமாக, மருத்துவரின் வழிகாட்டுதலோடு இல்லற உறவில் கணவனும், மனைவியும் ஈடுபட்டால் குழந்தைப் பிறப்பு நிச்சயம் சாத்தியமாகும். இந்த நிகழ்வைத் தவறவிட்டவர்கள் https://www.htamil.org/00061 என்கிற இணைப்பில் பார்க்கலாம்.
தொகுப்பு: மு.முருகேஷ்