

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகர் வீதிகளில் அழுக்கு உடையுடன் பரட்டைத் தலையுடன் தாடியுடன் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் காணலாம். காரணம் நாகை வேதாரண்யம் சாலையில் வேளாங்கண்ணி தாண்டி பாப்பாவூர் என்ற தர்காவில் மனநோயாளிகள் குணசாலை உள்ளது. பலர் அங்கிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்து விடுகிறார்கள்.
ஏன் இப்படி ஆனார்கள்?
ஒரு முறை ராஜஸ்தானி உடை அணிந்த ஒரு பெண் வீதிகளில் அலைந்தாள். விசாரித்ததில் மனம் பாதிக்கப்பட்ட நபர்களை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாதவர்கள் காரில் கொண்டுவந்து இரவில் யாருக்கும் தெரியாமல் இறக்கிவிட்டுச் சென்று விடுவார்களாம். வீட்டில் உள்ளவர்கள் பிரச்சினைக்கு கண்டுபிடித்த சுலப வழி இது. மனக்கோளாறினால் அவர்கள் உடை அணிவதில்லை. இயற்கை உபாதைகள் தெரிவதில்லை. வீட்டில் வைத்திருந்தால் அவர்களைப் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டியிருக்கும்.
சித்த சுவாதீனம் இல்லாததால் யார் எந்த ஊர் என்று சொல்லவும் தெரியாது. காசு கேட்கவும் தெரியாது. கொடுத்தாலும் என்ன செய்வது என அவர்களுக்குத் தெரியாது. எங்கோ வெறித்த பார்வையுடன் மொழி புரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் எப்போதும் மௌனம்தான். தரும சிந்தனை உள்ளவர்கள் சாப்பாடு வாங்கிக் கொடுப்பார்கள். உடுத்த உடை தருவார்கள். பல நேரங்களில் அந்தப் பொட்டலம் தலை மாட்டில் பிரிக்காமலேயே இருக்க, பஸ் ஸ்டாப்புகளில் படுத்திருப்பார்கள். குளிக்காமல் அழுக்கு உடைகளுடன் இலக்கில்லாமல் திரியும் அவர்களைப் பார்த்தால் நம் மனம் வாடும். என்ன செய்வது அவர்களை?
ஒரு முறை சாதாரணமாக வந்த ஒரு பெண் சில காலம் கழித்து கர்ப்பமாகவும் ஆகி இருந்தாள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது? இவர்கள் எல்லாம் வாழ்வு மறுக்கப்பட்டவர்களா?
அத்தனை வருடங்களாக நம்முடன் இருந்த ஒரு உறவு, மனநிலை பிழன்றதாலேயே இப்படி அந்நிய வீதிகளில் அலைய வேண்டியதுதானா? மனித மனங்களில் ஈரம் சுத்தமாக வடிந்துவிட்டதா? பணமயமாக்கலில் உணர்வுகளைத் தொலைத்துவிட்டு நாளை என்ன செய்யப் போகிறோம்? இதற்கு என்னதான் தீர்வு. பகிர்ந்துகொள்ளுங்கள் தோழிகளே, உங்கள் அனுபவமும் கருத்தும் பலருக்கும் பயனுள்ளதாக அமையலாம்!
- வசந்தா குருமூர்த்தி, கும்பகோணம்.