Last Updated : 14 Feb, 2016 04:19 PM

 

Published : 14 Feb 2016 04:19 PM
Last Updated : 14 Feb 2016 04:19 PM

எங்க ஊரு வாசம்: குருவியா பொறக்கணுமா, மயிலா பொறக்கணுமா?

இருட்டோடு இருட்டாக வெற்றிலைச் சுமையோடு போகிறவர்களுக்கு வழியில் எந்த பயமும் இருக்காது. மடியில் இருக்கும் வெற்றிலை வாசத்துக்கு எந்தப் பேய் பிசாசும் அண்டாது! அந்நேரத்துக்கு ஏதாவது பூச்சி, பொட்டு இருக்கும் என்பதற்காகக் கைகளைத் தட்டிக்கொண்டும், காட்டுப் பாட்டுகளைப் பாடியவாறும் நடப்பார்கள்.

மேற்கு மலைத்தொடரின் அருகில் இருக்கும் புளியந்தோப்பைப் போய்ச் சேரும்போது பலபலவென்று விடிவு கண்டிருக்கும். தூரத்தில் தெரியும் தொடர்மலை நம் நெஞ்சுக்குள் சிறு திகிலோடு, மலைப்பையும் ஏற்படுத்தியவாறு உயரமும் கம்பீரமுமாக வானத்து மேகங்களைத் தொட்டுவிடத் துடித்துக் கொண்டிருக்கும். அதிலிருந்து விழும் அருவியின் சத்தம் எங்கு திரும்பினாலும் சோவென்று மாயம் காட்டித் திகைக்க வைக்கும். மரங்களின் இலைகளெல்லாம் பனிபொழிவில் ஈரம் சாடி, வந்தவர்களின் மேனியைச் சிலிர்க்க வைப்பதில் அவைகளுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சிதான்.

இந்த விடியல் நேரம் கண்டு அந்தத் தோப்பு முழுக்க அடைந்திருக்கும் நாரை, ராக்கொக்கு, செரும்பருந்து, நாட வந்தான், வௌவால், குருவி என்று அனைத்துப் பறவைகளும் மந்திரக்கோல் தழுவியது போல் சட்டெனப் பறந்து வானத்து வெளியை நிரப்பிக்கொண்டு நாலு திசைகளிலும் சிறகுகளை விரித்துக் கூட்டம் கூட்டமாய்ப் பறக்கும் அழகைப் பார்த்துத் தங்கமணி சொல்லுவாள்:

“ஆத்தாடி ஆத்தா... இந்தக் குருவிகளும் கொக்குகளும் என்னமாத்தேன் ஆதாளி போட்டுக்கிட்டு ஒத்துமையா பறந்து போவுதுக... நாம அந்தக் குருவிகளா பொறத்திருந்தாலும் தாவல. இம்புட்டு பாடும், கஷ்டமும் பட வேண்டாம்” என்று தங்கமணி சொல்லும்போது சங்கனி சொல்வாள்:

“குருவியா எதுக்கு பொறக்கணுமிங்கே, அந்தா ஆடுது பாரு மயிலு. அப்படியே அள்ளிக் கண்ணுக்குள்ள வச்சிப் பொத்திக்கிடலாம் பொலுக்கே” என்று சொல்லும்போது எல்லாரும் திரும்பிப் பார்ப்பார்கள்.

தரிசு நிலத்தில் கால்களை ஊன்றியவாறு ஒரு ஆண் மயில் ஆட அதைச் சுற்றிலும் பெண் மயில்கள் சாகச நடை போடுவதைப் பார்க்கையில் அந்த அழகு நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும். சிறு சிறு காட்டு முயல்களும், கீரிப்பிள்ளைகளும் குறுக்கும், மறுக்குமாக ஓடி ஓடிப் புதர்களில் ஒளிய அதைப் பார்க்க இவர்களுக்கு நேரமிருக்காது.

“இப்படி நின்னு நெளிச்சிக்கிட்டு இருந்தா நம்ம புளியம்பூவை இன்னைக்கு அள்ளிக்கிட்டு போனாப்பலதேன்” என்று விசுவம் ஒரு அதட்டுபோட, எல்லாரும் அவசரமாய் காட்டு மொச்சி செடியை ஒடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தக் காட்டு மொச்சி செடி எளியவர்களைப் போல எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும். இதன் மாறில் கூடை பின்னலாம். உடம்பு வலிநோய்க்கு நல்ல மருந்தும்கூட. முக்கியமாக முழங்கால் வலிக்கு இதன் இலைகளைப் பறித்து மணலோடு சேர்த்து வரையோட்டில் வறுத்து ஒத்தணம் கொடுத்தால் வலி மறைந்தேபோகும். இப்போது எல்லோரும் அந்தச் செடியிலிருந்து நீள, நீளக் கம்புகளை ஒடித்து விளக்கமாறு (துடைப்பம்) போல் கட்டிக்கொள்வார்கள். பிறகு தோப்பின் படல் ஒதுக்கி உள்ளே நுழையும்போது அவர்கள் விழிகள் அனைத்தும் ஆச்சரியத்தால் விரியும். ஆயிரம் புளிய மரங்கள் வரை தூரு பெருத்து பூ, பிஞ்சு, காய் என்று அடர்ந்து சூரியனின் சிறு கீறல்கூட நுழைய முடியாமல் மரங்கள் கவிந்திருக்கும் காட்சியில் தாங்கள் செய்ய வந்த வேலை மறந்து சற்றே அதன் அழகில் லயித்து நிற்பார்கள்.

பூமித் தாயின் சிவந்த மண்ணின் அடையாளம்கூடத் தெரியாமல் அதே சிவந்த வண்ணத்தில் ஒற்றைக் கல் மூக்குதியாய் சிறுமணம் பரப்பியவாறு தோப்பு முழுக்க விரிந்திருக்கும் பூக்களைப் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும். ஆனால் இவர்கள் வந்த வேலை ஆக வேண்டுமே. பூவின் மேல் தங்கள் கால் தடம் பட்டுவிடாமல் தாங்கள் நின்ற காலடியிலிருந்து பூவைக் கூட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

தோப்புக்கார முதலாளி வந்துவிடுவாரோ, அல்லது தோப்பு காவல்காரன் வந்துவிடுவானோ என்று அவர்களுக்கு எந்த பயமும் கிடையாது. ஏனென்றால் புளியம் பழங்கள் மரங்களில் பழுத்து நிலத்தில் உதிரும்போதுதான் அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது. களவாணிகள் பழங்களைப் பெறக்கி மடி மறைத்துக் கொண்டுபோய்விடக் கூடாதல்லவா?

இப்போது புளியம்பூவைக் கூட்டி அள்ளியதில் ஒரு மூடை சேர்ந்துவிட்டது. ஆளுக்கொரு மூடையைத் தூக்கிக்கொண்டு வேலிப்படல் மூடி வெளியே வந்தார்கள். அவர்களோடு பசியும் கூடவே வந்துவிட்டது.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x