

இஸ்லாமியப் பழமைவாதக் கருத்துகளை நடைமுறைப் படுத்தும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியமைக்கப் போகின்றனர். 1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சியின் கீழ் இருந்த போது ஆண் துணை இல்லாமல் பெண்களால் வெளியே வர முடியாது, கல்வி கற்கக் கூடாது, வாகனம் ஓட்டக் கூடாது எனப் பெண்களை வீட்டுக்குள் முடக்கும் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றை மீறும் பெண்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். வன்முறைத் தாக்குதலுக்கும் உள்ளாகினர்.
2001 அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு தாலிபான்களை ஒடுக்குவதற்காக ஆப்கானில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதி கடந்த மே மாதத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டு, தற்போது காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக மட்டும் அமெரிக்கப் படையின் ஒரு பகுதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து தாலிபான்கள் ஆப்கானை மீண்டும் கைப்பற்றிவிட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் நிலவிவந்த ஜனநாயக ஆட்சியில் ஒப்பீட்டளவில் பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தது. லட்சக்கணக்கான பெண்கள் பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களில் கல்வியைப் பெற்றனர். திரைப்பட இயக்குநர்கள் உருவாகினர். மேயர் உள்ளிட்ட அரசியல் பதவி களுக்கும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் தாலிபான்கள் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்கின்றனர். ஆனால், களத்தி லிருந்து வரும் செய்திகள் அதற்கு நேரெதிராக உள்ளன. அலுவலகப் பணிகளில் இருந்த பெண்களை நீக்கிவிட்டு அந்தப் பணியிடங்களில் ஆண்களை நியமிக்க தாலிபான்கள் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கு உட்பட்டே பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்று தாலிபான்கள் கூறியிருப்பது பெண்களின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் தலைநகர் காபூலில் கறுப்பு உடையும் பர்தாவும் அணிந்திருந்த நான்கு பெண்கள் தாலிபான்கள் முன்னிலையில் தமது கல்வி, பணி மற்றும் அரசியல் பங்கேற்பு உரிமை களுக்காகப் பதாகைகளை ஏந்தி அறவழிப் போராட்டம் நடத்தினர். இந்தக் காணொலிச் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆப்கானின் வேறு சில பகுதிகளிலும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் ஆப்கான் பெண்கள் தாலிபான்களுக்கு எதிராகப் போராடிய செய்திகளும் வெளியாகின. அமெரிக்கா போன்ற உலக வல்லாதிக்க நாடுகள் கைவிட்டுவிட்ட நிலையில் ஆப்கான் பெண்களே தமது உரிமைகளுக்காக தாலிபான்களை எதிர்த்துப் போராடத் தொடங்கியிருப்பது நம்பிக்கைக் கீற்றை விதைத்தி ருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆப்கான் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளை நினைவு கூரும் விதமாக ஆப்கான் கொடியை ஏந்தியபடி சாலைகளில் நடந்த ஊர்வலங்களில் ஆண்களும் பெண்களும் பெருவாரியாகப் பங்கேற்றனர். தாலிபான்கள் கொடிக்கு எதிராக ஆப்கான் கொடியை முன்வைப்பதன் மூலம் நவீன ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.