

“படித்து முடித்தவுடன், கல்யாணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து, கணவனை கவனித்துக்கொண்டு புகுந்த வீட்டை நல்லபடியாக வைத்துக்கொள்வது மட்டும் ஒரு பெண்ணின் கடமை அல்ல. அதையும் தாண்டி பெண்கள் சாதிக்க நிறைய இருக்கிறது” - எடுத்த எடுப்பிலேயே மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் தன் கருத்துக்களைச் சொல்கிறார் ஜீவா. சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த இவர், “பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறு தொழில் ஒன்றைச் செய்துகொண்டே குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளலாம்” என்று சொல்வதுடன் அதற்கு உதாரணமாகவும் திகழ்கிறார்.
எம்.எஸ்சி. படித்த ஜீவாவுக்கு இரண்டு குழந்தைகள். அவர்களை கவனித்துக்கொண்டு வேலைக்குச் சென்றுவருவதும் சிரமம் என்பதால், பெண்களுக்கு ஜடை பின்னலில் மலர் அலங்காரம் செய்து கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறார். மூகூர்த்த நாள் வந்துவிட்டால் போதும், ஜடை அலங்காரம் செய்ய ஆர்டர்கள் ஜீவாவைத் தேடிக் காத்துக்கொண்டிருக்கும். திருமணம், பூச்சூடல் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது பெண்களின் கூந்தலில் இவர் பல வண்ண மலர்கள் வைத்து அழகுபடுத்துவார்.
“எனக்கு சொந்த ஊர் சேலம் என்பதால், அலங்கரிக்கப் பயன்படுத்தும் மலர்கள் பற்றி சிறு வயதிலிருந்தே தெரியும். கல்யாணம் செய்தவுடன் சென்னை வந்துவிட்டேன். என் அம்மா வீட்டுக்குப் போய்விட்டு சென்னை திரும்பும்போது, அங்கிருந்து பல வகையான பூக்களைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிறவர்கள் அனைவரும் ரசித்து மகிழ்வார்கள். அப்போதுதான் இந்தப் பூக்களை வைத்து எதாவது செய்யலாமே என்ற ஆசை வந்தது. இரண்டே நாளில் ஜடையைப் பூக்களால் அலங்கரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டேன். முதலில் பியூட்டி பார்லர்களில் ஆர்டர்கள் பெற்றேன்” என்று சொல்லும் ஜீவா, இந்தக் கலையைச் செய்யத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. இப்போது பல தரப்பினரிடமிருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. ஒவ்வொரு வாரமும் தன் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு ஆசிரமத்தில் சில பெண்களுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து வருவதாகச் சொல்கிறார்.
“இந்தத் தொழிலில் முதலீட்டைவிட அதிக லாபம் கிடைக்கிறது” என்று தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார் ஜீவா.