பெண் திரை: ஒரு குழந்தையும் மூன்று பெண்களும்

பெண் திரை: ஒரு குழந்தையும் மூன்று பெண்களும்
Updated on
2 min read

பருவ வயதில் காதல் வந்தால் தவறு, திருமணத்துக்குப் பின் குழந்தை பிறக்கவில்லை என்றாலோ மலடி, திருமணம் நடக்காமல் குழந்தை பிறப்பது அழிக்க முடியாத அவமானம், அப்பா இல்லாத மகள் நன்றாக வளர மாட்டாள், ஒரு பெண்ணால் தனி ஆளாகக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்த முடியாது… பெண்களைச் சுற்றி இப்படி எத்தனையோ கற்பிதங்கள்.

அனைத்துப் பெண்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால், எல்லோர் மீதும் சமூகம் திணிக்கும் மதிப்பீடுகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. வெறும் மதிப்பீடுகளை மட்டும் வைத்துக்கொண்டு மனிதர்களை, அவர்களுடைய உணர்வுகளை, வாழ்க்கையைப் புரிந்துகொண்டுவிட முடியுமா? இந்தக் கேள்விகளைத்தான் எழுப்புகிறது ‘இன் ஹர் பிளேஸ்’ (In her place) என்ற கொரிய திரைப்படம். சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்த 13-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது.

ரகசிய ஏற்பாடு

தென்கொரியக் கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் பண்ணையில் வசிக்கும் பதின்பருவப் பெண் ஆன் ஜியே. இவள் திருமணத்துக்கு முன் காதலன் மூலம் கருவுறுகிறாள். கணவர் இல்லாததால் பண்ணை நஷ்டத்தில் வீழ்ந்துவிட்ட நிலையில், மகள் அவமானப்படக் கூடாது என்று நினைக்கிறார் அவளுடைய தாய் கில் ஹேயியான்.

இந்த நிலையில், பிறக்கப்போகும் குழந்தையை ஊருக்குத் தெரியாமல் தத்து எடுத்துக்கொள்ள சியோலைச் சேர்ந்த குழந்தையில்லாத ஒரு பணக்காரத் தம்பதி ஒப்புக்கொள்கிறது. இந்த ஏற்பாடு வெளியே தெரிந்துவிடாமல் இருக்க, தத்து எடுத்துக்கொள்ளப் போகும் பெண்ணான யூன் டாகியுங், கிராமத்து வீட்டின் ஒரு பகுதியிலேயே வந்து தங்குகிறார்.

குழந்தையை மறப்பது

தன் மகள் குழந்தையைப் பெற்று சியோல் தம்பதியிடம் கொடுத்துவிட்டால் கிடைக்கும் பணம் மூலம் தங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும் என்பது தாய் கில்லின் கனவு. மகளுக்கு முறைப்படி திருமணம் நடந்த பின் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் சீராட்டி வளர்ப்பேன் என்கிறார் கில். ஆனால்,

இந்தக் குழந்தை பிறந்தவுடன் மறந்துவிடுவதுதான், ஒரே வழி என்று மகளிடம் கூறுகிறார்.

ஆன் ஜியேவுக்கு எதுவும் புரியாத வயது. குழந்தையை அவ்வளவு எளிதாகக் கொடுத்துவிட முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவள் கருவுறுவதற்குக் காரணமான காதலனும் அவள் நினைவுகளில் நிழலாடிக்கொண்டே இருக்கிறான். அவன் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்று “இனிமேல் இந்தப் பக்கம் வந்தால், சும்மாவிட மாட்டோம்” என்று எச்சரித்துத் திரும்புகிறார் தாய் கில். அவனோ, குழந்தை பிறந்தவுடன் எனக்கு ஒரே ஒரு முறை காட்டுங்கள் என்று கெஞ்சுகிறான்.

சிக்கலான முடிச்சு

தனக்குப் பிறக்கும் குழந்தையைத் தாரை வார்க்க ஆன் ஜியே தயாராக இல்லை. குழந்தை குறைபாட்டுடன் பிறந்து தொலையட்டுமே

என்று கண்டதைத் தின்ன ஆரம்பிக்கிறாள்.

அதைக் கண்டுபிடித்துவிடும் யூன் டாகியுங்,

“உன் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையது.

அது குறைபாட்டுடன் பிறக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று உரிமை கொண்டாடி, எப்பொழுதும் ஆன் ஜியேவுடனேயே இருக்க ஆரம்பிக்கிறாள்.

இந்த நெருக்கடிக்கு இடையில் எப்படியாவது காதலனைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறாள் ஆன் ஜியே. அவளுடைய செல்போன் முடக்கப்பட்டுவிட்டது. யூன் டாகியுங்கின் செல்போனைக் கைப்பற்றி, ஓர் இரவில் காதலனை வரச் சொல்கிறாள். அவனும் வர ஒப்புக்கொள்கிறான். அவன் வந்தானா, குழந்தை பிறந்ததா, மூன்று பெண்களின் வெவ்வேறுபட்ட ஆசைகள் ஒரே புள்ளியில் சந்தித்து, நினைத்தபடி அவை நிறைவேறினவா என்ற முடிச்சு மிகவும் சிக்கலாகவே அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

தத்தெடுப்பு மூடநம்பிக்கைகள்

படத்தில் வரும் மூன்று பெண்களும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள். கில் ஹேயியான் கணவரை இழந்த, விவசாயப் பண்ணையைத் தனியாக நிர்வகிக்க முடியாத, பதின்பருவப் பெண்ணை வளர்க்கும் தாய். குழந்தையற்ற வசதியான நகரத்துப் பெண் யூன் டாகியுங். எதுவும் புரியாத வயதில் கருவுற்று, அந்தக் குழந்தையைத் தாரை வார்க்கத் தயாராக இல்லாத பதின்பருவப் பெண் ஆன் ஜியே. இந்த மூன்று பெண்களின் மனக் குழப்பங்களை, வலியை, சிக்கல்களைச் சுற்றிச் சுழல்கிறது இந்தப் படம்.

நம்மிடமிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் விலகி இருந்தாலும் வசதிகளில் மாறுபட்டிருந்தாலும் கொரியாவிலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், சமூக நியதிகள், மதிப்பீடுகள் போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதையே ‘இன் ஹர் பிளேஸ்’ போன்ற படங்கள் சொல்கின்றன.

வெளிப்படையான குழந்தை தத்தெடுப்பு தென்கொரியாவில் மிகப் பெரிய சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், ரகசியத் தத்தெடுப்பில் தலைதூக்கும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் உணர்வுபூர்வமாகக் கடத்தியுள்ளார் இயக்குநர் ஆல்பர்ட் ஷின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in