

வாகனங்களில் கலக்கும் நடிகைகள்
கார் ரேஸிங், பைக் ரேஸிங் என்றால் தமிழ் சினிமா பிரபலங்களில் நடிகர் அஜித் குமாரின் பெயர்தான் நினைவுக்கு வரும். அதேபோல் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சைக்கிள் ஓட்டிச்சென்ற நடிகர் விஜய் இன்றைய உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே ட்ரெண்டாக இருக் கும் சைக்கிளிங் கில் தனக்கும் ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி கதாநாயகிகள் கார் ரேஸிங், சைக்கிளிங் ஆகியவை தொடர்பான செய்திகளில் இடம்பிடித்தனர்.
நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கான பயிற்சியில் முதல் நிலையை நிறைவுசெய்துள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தனக்கு ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது ஆர்வம் வந்துவிட்டதாகச் சொல்லும் நிவேதா, 2015-ல் அமீரகத்தில் வசித்தபோது தனக்கென்று சொந்தமாக ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார். அதில் பொருத்தப்பட்ட அதிவேக எஞ்சின் காரணமாக மகளின் பாதுகாப்பு குறித்து அவருடைய தந்தை அஞ்சியதாகவும் அவரைக் கஷ்டப்பட்டு சம்மதிக்க வைத்ததாகவும் நிவேதா கூறியிருக்கிறார்.
மறுபுறம் நடிகை த்ரிஷா புதிய உயர்ரக சைக்கிளை வாங்கி அதில் அமர்ந்திருக்கும் ஒளிப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். சைக்கிளிங் செல்வதற்கான உடை, ஹெல்மெட், முகக் கவசம் ஆகியவற்றோடு கிழக்குக் கடற்கரை சாலையில் அவர் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒளிப்படங்களும் வெளியாகின. கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேணுபவரான த்ரிஷா தற்போது சைக்கிளிங்கையும் தொடங்கியிருக்கிறார்.
ஆபத்தில் உதவியவர்களைக் கைவிடலாமா?
தெலங்கானா அரசு மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் செவிலியர் இல்லாததால், ஓராண்டுக் கால அவுட்சோர்ஸிங் அடிப்படையில் தற்காலிகப் பணியில் செவிலியரை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி 1,640 செவிலியர் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021வரை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டனர். கரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததால் அவர்களுடைய பணிக்காலம் ஜூன் இறுதிவரை நீட்டிக்கப்பட்டது. ஜூலை 5ஆம் தேதியிலிருந்து அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள செவிலியர், தாங்கள் பணியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிப் போராடிவருகின்றனர். ஹைதராபாத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் அலுவலகத்துக்கு முன் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான செவிலியர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தும் முயற்சிகள் காவல்துறையால் ஒடுக்கப்பட்டுள்ளன. உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு அரசும் காவல்துறையும் அனுமதி மறுத்துவருகின்றன.
வேலையிழந்த செவிலியர் பலர் பணியின் காரணமாக கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்கள். குடும்ப உறுப்பினர்களைப் பெருந்தொற்றுக்குப் பறிகொடுத்தவர்கள். பலர் தனியார் நிறுவன வேலையை விட்டுப் பணிப் பாதுகாப்பு கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். அவுட்சோர்ஸிங் மூலம் நியமிக்கப்பட்ட செவிலியர் யாரும் பணியிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று முதல்வர் கூறியிருந்ததையும் மார்ச் 2022 வரை பணியாற்றும் வகையில் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த வாய்மொழி உறுதிமொழிகளையும் போராடும் செவிலியர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் 4,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தெலங்கானா அரசு, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செவிலியரின் அரும்பணிக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது அக்கறையுடனும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம்.
போராடிப் பெற்ற நிரந்தரப் பணி
இந்திய ராணுவத்தில் மேலும் 147 பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியைப் பெற்றுள்ளனர். எல்லையில் அந்நிய நாட்டு ராணுவத்தினருடனும் தீவிரவாதிகளுடனும் தம் உயிரைப் பணையம் வைத்துப் போராடிய பெண்கள் ராணுவத்தில் நிரந்தரப் பணியாளர்கள் ஆவதற்கு ஆண்மையப் போக்கை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருந்தது.
1992-லிருந்து இந்திய ராணுவத்தில் பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்கள் அதிகபட்சம் 14 ஆண்டுகளைக்கொண்ட குறைந்த காலப் பணியில்தான் (எஸ்.எஸ்.சி.) அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் 2020 பிப்ரவரியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக நிரந்தரப் பணி வாய்ப்பும் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், உடற்தகுதி உள்ளிட்ட சில அளவுகோல்களின் அடிப்படையில் அவர்களுக்குப் பணி நிரந்தர வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் பெண்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அந்த வழக்கில் 2021 மார்ச் 25 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பெண்களுக்கான நிரந்தரப் பணிக்கான அளவுகோல்கள் இயல்பிலேயே பெண்களைப் பாகுபடுத்துவதாகக் கூறி அவற்றில் சில மாற்றங்களுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் 150 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் நிரந்தரப் பணியைப் பெறும் வாய்ப்பு உருவானது. இதன்மூலம் நிரந்தரப் பணியைப் பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 424 ஆக அதிகரித்துள்ளது.
சிறப்புக் குழந்தைகளின் தொடர்பாடலுக்கு உதவும் செயலி
ஆட்டிச நிலையில் உள்ள குழந்தைகளில் பலரால் பேச முடியாது. பேசக்கூடிய வர்களும் முழுமையாகப் பேச மாட்டார்கள். பெரும் பாலும் துண்டு துண்டான சொற்களையே சொல்வார்கள். ஆட்டிசம் தவிர பிற அறிவுசார் குறைபாடு உடையவர் களும்கூடச் சரளமான பேச்சுத் திறன் அற்றவர்களாகவே இருப்பர்.
இதனால், அவர்கள் தம்முடைய எண்ணங்களைப் பகிர முடியால் போவதால் அவர்களது தேவைகள் நிறைவேறுவது சிரமமாக இருப்பதோடு இக்குழந்தைகள் சமூகத்தின் நடத்தை விதிகளை மீறுவதற்கும் வித்திடு கிறது என்று சிறார் மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக ஆட்டிசம் போன்ற அறிவுசார் குறைபாடு உடையவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் விலை உயர்வாகவும் போதமைகளோடும் இருக்கின்றன. இந்தக் குறைகளைப் போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ‘அரும்புமொழி’ என்னும் செயலி. இந்தச் செயலியை Arumbumozhi என்னும் பெயரில் தேடி கூகுள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். பயன்படுத்துவதற்கும் மிக எளிமையானது.
இந்தச் செயலியைப் பயன்படுத்திய ஓராண்டுக் காலத்துக்குள் அதுவரை பேசவே இயலாமல் இருந்த தம்முடைய குழந்தைகள் ‘தண்ணீர் தா’ போன்ற ஓரிரு சொற்களைக் கொண்ட வாக்கியங்களைப் பேசத் தொடங்கியிருப்பதாகப் பெற்றோர்கள் சிலர் நற்சான்றிதழ் அளித்துள்ளனர்.