Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

விவாதக் களம்: குழந்தைப்பேறு பெண்ணின் உரிமையே

பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், குறிப்பாக குழந்தைப்பேறு உரிமை குறித்து 18 ஜூலை அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். குழந்தைப்பேறு சார்ந்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருக்கிறதா எனக் கேட்டிருந்தோம். அந்த உரிமை மறுக்கப்படுவது குறித்தும் பெண்களே அதை உணராத நிலை குறித்தும் பலரும் எழுதியிருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு:

நான் ஒரு மகப்பேறு மருத்துவர். எந்தப் பெண்ணுமே மகப்பேறு தனது உரிமை என உணர்வது இல்லை. திருமணமான நான்கே மாதங்களிலேயே, ‘இன்னும் ஏன் குழந்தை தங்கவில்லை என வீட்டில் போய்ப் பார்த்துவிட்டு வர சொன்னார்கள்’ என்று வருவார்கள். கணவரோ வெளிநாட்டில். பரிசோதனையும் செய்துகொள்ள மாட்டாராம். ஆனால், வந்திருக்கும் இந்த இரண்டு மாத இடைவெளியில் குழந்தை தங்கவில்லை என்றால் விவாகரத்து ஆனாலும் ஆகிவிடும். 34 வயதில் குடலிறக்கப் பிரச்னையோடு இருக்கும் அரசு ஊழியர். ‘வீட்டில் ரொம்ப அழுத்தம் கொடுக்கிறார்கள். மூன்றாவது குழந்தை அதுவும் ஆண் குழந்தை வேண்டும்’ என்பார். இவர்களுடன் இவர்களுடைய கணவன்மார்கள்கூட வருவதில்லை. இவற்றுக்கு இடையே சில ஆறுதல்களும் உண்டு. கணவனுடன் வந்து, ‘இன்னும் படிப்பு முடியவில்லை, குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட என்ன செய்வது?’, ‘எதிர்பாராதவிதமாகக் கர்ப்பமாகிவிட்டேன். பாதுகாப்பாகக் கலைக்க விரும்புகிறேன்’ என்றுவரும் பெண்கள் அரிது. இவை தவிர ஏமாற்றிச் சென்ற காதலனால் கருவுற்ற பெண்கள், போதிய இடைவெளியின்றி கருவுற்றவர்கள் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் பெண்களின் தேர்வு இரண்டாம்பட்சம்தான்.

குமுதாசலம், ஆத்தூர், சேலம்.

உரிமைகள் மறுக்கப்படுகையில் பெண்கள் எதிர்த்து நின்று, சமயோசிதமாகச் செயல்பட வேண்டும். ஆனால், இது எளிதல்ல. அப்போதும் அவள் இன்னல்களையும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. என்றைக்கு ஆண்கள் புரிந்துணர்வுடன் பெண்ணைச் சக மனுஷியாக, சுயநலமின்றி உண்மையாக மதிக்கி றார்களோ, அன்றுதான் பெண்ணுரிமை முழுமையடையும்.

மணிமேகலை, ஓசூர்.

குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை முழுக்க முழுக்கப் பெண்களுக்கு மட்டுமே உண்டு. அப்படி அந்த உரிமை மறுக்கப்படும் பட்சத்தில் தாராளமாகத் தன் நிலைப்பாட்டைப் பெண்கள் விளக்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் எதிலும் தாழ்ந்துவிடவில்லை. ஆண்கள் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பாராமல் தனக்கான உரிமையைத் தானே எடுத்துக்கொள்ளப் பெண்கள் பழக வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வது, வளர்ப்பது என எதுவாக இருந்தாலும் அது பெண்ணின் உடல்நிலை, மனநிலையைப் பொறுத்ததாகத்தான் அமைய வேண்டும். இதில் ஆண்கள் முடிவெடுக்க பெண்கள் அனுமதிக்கக் கூடாது.

தேஜஸ்,காளப்பட்டி.

பெண்ணின் உடல் சார்ந்த உரிமை குறித்த விவாதம் சிறந்த முன்னெடுப்பு. முதலில் பெண்கள் புனிதம், தாய்மை, பெண்மை போன்ற அபத்தங்களை உடைக்க வேண்டும். ‘உன் முன்னேற்றத்தைக் குழந்தைப்பேறு தடுக்கும் என்றால் கர்ப்பப்பையை அறுத்து எறிந்துவிடு’ என்று பெண் முன்னேற்றம் குறித்து எழுதியவர் பெரியார். இதை விளங்கிக்கொண்டால் பெண் ஏன் அடிமையானாள் என்று புரியும்.

மேனகா செல்வராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x