

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள ஐவர் தடகளக் குழுவில் மூவர் பெண்கள். ரேவதி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய மூவரும் 4 400 மீ. கலப்புத் தொடரோட்டப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தகுதிப் போட்டியில் வெற்றிக்கோட்டை முதலில் தொட்ட ரேவதி, வாழ்க்கையிலும் பெரும் இன்னல்களைக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். தற்போது தென்னக ரயில்வேயில் பயணச்சீட்டுப் பரிசோதகராகப் பணியாற்றிவரும் ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருடன் இவருடைய சகோதரியும் மதுரையில் உள்ள அம்மாவழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர். தினக்கூலித் தொழிலாளியான ரேவதியின் பாட்டி, பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் இவர்களைப் படிக்க வைத்தார். மண்டல விளையாட்டுப் போட்டியில் வெறுங்காலுடன் ஓடிய ரேவதியைப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன், ரேவதியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குப் பயிற்சியளிக்க நினைத்தார். ரேவதியின் பாட்டியிடம் எடுத்துச்சொல்லி பயிற்சியைத் தொடங்கினார். வெற்றி இலக்கை நோக்கி அன்றைக்கு ஓடத் தொடங்கிய ரேவதியின் கால்களுக்கு இன்றுவரை ஓய்வில்லை. 2006இல் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ரேவதி, அன்றைக்குத் தவறவிட்ட பதக்கத்தை இப்போதைய ஒலிம்பிக்கில் வெல்லும் நோக்கத்துடன் பயிற்சிபெற்றுவருகிறார்.
திருச்சியைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வத் துடன் பங்கேற்றார். இவருடைய அப்பா கட்டிடத் தொழிலாளி. வீட்டின் வறுமை, முறைப்படி பயிற்சிபெறத் தடையாக இருந்தது. இருந்தபோதும் தன் கனவைக் கைகொள்ளும்விதமாகச் சென்னையில் குடியேறி பயிற்சி பெற்றார். பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் சென்றார். இதுவரை தேசிய அளவிலான 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஏழு சர்வதேசப் போட்டிகளில் மூன்றில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் உறுதியுடன் இருக்கிறவர், அரசு வேலை கிடைத்தால் பொருளாதாரச் சிக்கலின்றி தொடர்ந்து பயிற்சிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருவரான டுட்டி சந்தைத் தோற்கடித்தவர் தனலட்சுமி. திருச்சியைச் சேர்ந்த இவர், சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர், விளையாட்டுத் துறையில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக டோக்கியோ ஒலிம்பிக் நுழைவைப் பார்க்கிறார். தகுதிப்போட்டியில் வென்றுவிட்டால் ஒலிம்பிக் களத்தில்தான் தங்களுக்கான உண்மையான போட்டி காத்தி ருப்பதாகச் சொல்கிறார் தனலட்சுமி. இந்த மூன்று பெண்களும் போட்டிக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள பயிற்சிக்கு இடையே, உசேன் போல்ட்டின் வீடியோக்களைப் பார்ப்பார் களாம். உலகின் மிக வேகமான மனிதர் எனக் கொண்டாடப்பட்ட அவரது வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் பல நுணுக்கங்களைக் கற்க முடிவதாக தனலட்சுமி குறிப்பிடுகிறார்.