பெண்கள் 360: தாய்ப்பாலும் கொடுக்கலாம் பதக்கங்களையும் வெல்லலாம்

பெண்கள் 360: தாய்ப்பாலும் கொடுக்கலாம் பதக்கங்களையும் வெல்லலாம்
Updated on
1 min read

கடந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டன. நோயின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து 2021 ஜூலை 23இல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. முதலில் கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தம்முடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விருந்தினர்கள் யாரையும் உடன் அழைத்துவரக் கூடாது என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தாய்ப்பால் கொடுக்கும் அன்னையராக இருக்கும் போட்டியாளர்கள் தமது குழந்தைகளை அழைத்து வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய கூடைப்பந்து வீராங்கனை கிம் கோஷே (Kim Gaucher) வெளியிட்ட இன்ஸ்ட்ராகிராம் பதிவுகளே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த மனமாற்றத்துக்குக் காரணம். 37 வயதாகும் காசர் தன் மகள் சோஃபிக்கு தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும். ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு மகளை அழைத்துச் செல்ல முடியாததால் “இப்போது நான் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையாக இருப்பது அல்லது ஒலிம்பிக் வீராங்கனையாக இருப்பது ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்” என்று சோஃபிக்குத் தாய்ப்பால் கொடுத்தபடி இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் காணொலிப் பதிவை வெளியிட்டிருந்தார். இதை அடுத்து கனடிய கூடைப்பந்து கமிட்டியும் தேசிய கூடைப்பந்து நிர்வாக அமைப்பும் மகளையும் உடனழைத்து வர அனுமதிக்க வேண்டும் என்னும் கோஷேவின் கோரிக்கைக்கு ஆதரவளித்தன. இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தாய்ப்பால் வழங்கும் அன்னையராக இருக்கும் போட்டியாளர்கள் குழந்தைகளைத் தம்முடன் அழைத்துவரலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கக் கால்பந்து வீராங்கனை அலெக்ஸ் மார்கனும் தன்னுடைய கைக்குழந்தையுடன் டோக்கியோவுக்குச் சென்று ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கைச் சூழலில் நிகழும் மாற்றங்கள் அவர்களின் தொழில் வாழ்வில் முன்னேற்றத்துக்கான தடையாக நீடிக்க அனுமதிப்பது பெண்களின் உரிமையைப் பறிப்பதாகும். அந்த அநீதியைக் களைவதற்கான முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in