Last Updated : 04 Jul, 2021 03:12 AM

Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

என்கவுன்டர் அவருக்குப் பிடிக்காது: முன்னாள் டிஜிபி திரிபாதியின் மனைவி

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி யாகப் பணியாற்றி ஓய்வுபெற்றத் தன் கணவருக்கு வழங்கப்பட்ட வழியனுப்பு விழாவில் அவரது அருகில் பெருமிதத்துடன் அமர்ந்தி ருந்தார் அனுஜா திரிபாதி. கணவர் திரிபாதியின் முப்பது ஆண்டுகளைக் கடந்த காவல் துறைப் பணியில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் பஞ்சம் இருந்ததில்லை என்கிறார் அவர். “ஆனால், அதன் சிறுதுளிகூட வீட்டுக்குள் நுழைந்ததில்லை” எனப் புன்னகைக்கிறார்.

திரிபாதியின் மாநிலமான ஒடிசாதான் அனுஜாவுக்கும். எம்.ஏ., ஆங்கில இலக்கியம் முடித்திருக்கிறார். இவர்களுடையது பெற்றோர் பார்த்து நடத்திவைத்த திருமணம். “1989-ல்திருமணம் முடிந்ததும் குடிபெயர்ந்த தமிழ்நாடு, தற்போது எனக்கு மிகவும் பிடித்த மாநிலமாகிவிட்டது” என்கிறார் அனுஜா. கன்னியாகுமரியில் குடியேறிய கையோடு அனுஜா கையில் எடுத்த முதல் திட்டம் தமிழைக் கற்பது. “‘30 நாட்களில் தமிழைக் கற்கலாம்’ புத்தகத்தை வாங்கியும் அதிலிருந்து எதையும் கற்க முடியவில்லை” என்கிறார். “இவரோடு வேலை செய்தவங்க, அக்கம் பக்கத்துல இருந்தவங்களோட பேசியும் தமிழ்ப் படங்களைப் பார்த்தும்தான் தமிழ் கத்துக்கிட்டேன்” என்று சொல்பவரின் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாறினாலும் தமிழ் தடுமாற்றம் இல்லாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டின் உணவு, கலாச்சாரம் போன்றவை கிட்டத்தட்ட ஒடிசாவைப் போல இருப்பதால் சமாளிக்க முடிந்ததாகச் சொல்கிறார். “அவருக்கு ஒவ்வொரு ஊருக்கு மாற்றலாகும்போதும் ஏதாவது ஒரு கலையைக் கற்றுக்கொள்வேன். எனக்கு ஓவியத்தில் ஆர்வம் என்பதால் தஞ்சாவூர் ஓவியம் வரையக் கற்றுக்கொண் டேன்” என்கிறார். கணவர் என்னதான் கண்டிப்பான காவல் அதிகாரியாக இருந்தாலும் வீட்டுக்குள் நல்ல தந்தையாகத்தான் இருப்பார் எனப் பாராட்டு கிறார் அனுஜா. “ஒரு அப்பாவா குழந்தைகள் நலனில் அக்கறையோடு இருப்பார். எங்களோட ரொம்ப நேரம் இருக்க முடியலைன்னாலும் கிடைக்கிற நேரத்தைக் குழந்தைகளோடு செலவிடுவார். நண்பர்கள்கிட்ட பழகுற மாதிரிதான் பேசுவார். பையனும் பொண்ணும் சின்னவங்களா இருந்தப்போ அவங்களோட சேர்ந்து கிரிக்கெட், லூடோ, கேரம் எல்லாம் விளையாடியிருக்கார். ராத்திரி கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்தாலும் குழந்தைகளை கார்ட்ஸ் விளையாடக் கூப்பிடுவார்” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். மகனுக்குத் திருமணமாகிவிட்டது. மகள் மருத்துவ மேற்படிப்புப் படித்துக்கொண்டிருக்கிறார்.

சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை, துப்பாக்கிச்சூடு என எவ்வளவு கடினமான நாளாக இருந்தாலும் தன் கணவர் வீட்டுக்குள் நுழையும்போது அமைதியாகத்தான் வருவார் என்கிறார் அனுஜா திரிபாதி. “பொதுவா அவரோட வேலை சம்பந்தப்பட்ட எதையும் எங்ககிட்ட சொல்ல மாட்டார். நிறைய நாள் இரவு இரண்டு மணிக்கு மேலதான் வருவார். கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டு மறுபடியும் நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடுவார். அவரோட வேலையைப் பத்தித் தெரியும் என்பதால் நாங்களும் நிறைய எதிர்பார்ப்பதில்லை. காவல் அதிகாரியின் மனைவியா அவரோட பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்தானே. அவருக்குத் தோட்ட வேலையில் ஈடுபாடு அதிகம். எப்போதாவது நேரம் கிடைத்தால் தோட்டத் துக்குச் சென்றுவிடுவார். அதிகமாகப் பேச மாட்டார். நாம பேச ஆரம்பித்தால் தூங்கிடுவார்” என்று சொல்லிவிட்டு அடக்க முடியாமல் சிரிக்கிறார் அனுஜா.

அப்பாவின் பணி நெருக்கடி குறித்துக் குழந்தைகளும் அறிந்திருந்ததால் அவரைத் தொந்தரவு செய்யமாட்டார்களாம். “என் பொண்ணு அவங்க அப்பாவோடதான் அந்தப் படத்தைச் சேர்ந்து பார்க்கணும்னு ரொம்ப வற்புறுத்தினதால ‘பிக்கு’ இந்திப் படத்தைப் பார்க்க வந்தார். அவரோடு சேர்ந்து நாங்க பார்த்த ஒரே படம் அதுதான். மூணு மணி நேரம் ஒரு இடத்துல உட்கார்ந்து படம் பார்க்கும் அளவுக்குக்கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை” என்கிறவரின் குரலில் எந்த ஏமாற்றமும் இல்லை.

திரிபாதி என்றதுமே சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு முக்கிய என்கவுன்டர்கள் நினைவுக்கு வரும். அதுபோன்ற நாட்களில் அதைப் பற்றி ஏதாவது சொல்வாரா என்றால், “இதுன்னு இல்லை பொதுவா எந்த ஸ்பெஷல் டாஸ்க்கா இருந்தாலும் சொல்ல மாட்டார். என்கவுன்டர் என்பது எப்பவும் இவரது விருப்பத் தேர்வாக இருந்ததில்லை. என்கவுன்டர் ஹீரோயிசம் இல்லைன்னு அவருக்குத் தெரியும். கூடுமானவரைக்கும் அப்படியொரு சூழலைத் தடுக்கத்தான் பார்ப்பாங்க. அதுபோன்ற நாட்களில் வீட்டுக்கு வர மாட்டாங்க. வந்தாலும் டென்ஷனை வெளியே காட்ட மாட்டாங்க. ஆனா, அவர் எவ்வளவு மன அழுத்தத்துல இருக்கார்னு எனக்குத் தெரியும். எந்த ஸ்பெஷல் ஆக்ஷனா இருந்தாலும் சில நேரம் அது முடிந்ததும் சாமி கும்பிடுவார். மீண்டும் இப்படியொரு சூழல் வேண்டாம் என்பதுதான் அவர் வேண்டுதலா இருக்கும்” என்கிறார் அனுஜா.

சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த போது திரிபாதி ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியமானவை. கைதிகளின் கல்விக்கும், தொழிற்பயிற்சிக்கும் வழி வகுத்தார். “இவர் என்னவெல்லாம் செய்திருக்கார்னு நாங்களே செய்தியைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவோம். நிறைய கைதிகள் இவருக்குக் கடிதம் எழுதுவாங்க, படம் வரைந்து அனுப்புவாங்க. யாரும் விரும்பி எந்தத் தவறையும் செய்வதில்லை, நிறைய பேர் சூழ்நிலையால கைதியானவங்கதான். சிறையில் இருக்கறவங்களோட வாழ்க்கை யைப் பார்த்தால்தான் நமக்குப் பலதும் புரியும். அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும் என்பார்” என்கிறார் அனுஜா.

கண்டிப்பான காவல் அதிகாரியின் குடும்பத்துக்கு மிரட்டல் வருமே, அப்படி ஏதும் வந்திருக்கிறதா என்றால் சிரிக்கிறார். “90 சதவீதம் அப்படி ஏதும் வந்ததில்லை. குடும்பத்தோட பாதுகாப்பு முக்கியம்னு இவர் எப்பவும் நினைப்பார். அதனால பெரிய சிக்கல் வந்ததில்லை. எங்க வீட்டுப் பாதுகாப்புக்கு இவர் யாரையும் நியமிக்கவில்லை. நானே என்னைக் காப்பாத்திக்கலைன்னா வேற யார் காப்பாத்துவாங்கன்னு கேட்பார். எப்பவாவது ரொம்ப அதிசயமா அவருக்குப் பிடித்த பழைய இந்திப் பாடல்களையும் ஒரியப் பாடல்களையும் பாடுவார். பணி ஓய்வுக்குப் பிறகுதான் வீட்ல இவ்ளோ புத்தகங்கள் இருப்பதே அவருக்குத் தெரியுது. இனி நிறைய படிக்கணும்னு சொல்லியிருக்கார்” என்று புன்னகையுடன் முடித்தார் அனுஜா திரிபாதி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x