

பாலியல் குற்றங்களுக்குப் பெண்கள்தாம் பொறுப்பா?
உலகெங்கும் அனு தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் மீது ஆண்கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகிறார்கள். ஆனால், பெரும்பாலான சமூகங்களில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மீதே அதற்கான பழியைத் திசைதிருப்பிவிடுவது இயல்பான எதிர்வினையாக இருக்கிறது. பெண்கள் அணியும் ஆடைகள்தாம் ஆண்களைப் பாலியல் குற்றங்களுக்குத் தூண்டுகின்றன என்று தீர்ப்பெழுதுவதில் சாமானியர்கள் முதல் அரசுகளின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் வரை பலரும் போட்டிபோடுகிறார்கள். அண்மையில் இப்படியொரு கருத்தைப் பேசியிருப்பவர் பாகிஸ்தான் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான்.
அண்மையில் சர்வதேச கவனம்பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இம்ரான் கான் “பெண்கள் சிறிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்தால் அது நிச்சயம் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டும். ரோபாட்களாக இருந்தால் மட்டுமே ஆண்களால் அப்படித் தூண்டப்படாமல் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார். “உண்மையிலேயே பெண்களின் ஆடைதான் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா?” என்று பேட்டி எடுத்தவர் மீண்டும் கேட்டதற்கு “நீங்கள் எந்தச் சமூகத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்று பதிலளித்துள்ளார் இம்ரான் கான்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்தக் கருத்துக்குப் பாகிஸ்தான் எதிர்கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்துக் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் ஸர்தாஜ் அதுல், பிரதமரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணான தன்னைப் போன்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகியிருப்பது பெண்கள் அதிகாரம்பெறுவதில் பிரதமருக்கு இருக்கும் அக்கறையின் விளைவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் வெளியான தரவுகளின்படி பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் 22 ஆயிரம் பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 11 வல்லுறவுக் குற்றங்கள் நடப்பதாகப் புள்ளிவிவரம் உள்ளது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் வல்லுறவு குற்றம்சாட்டப்பட்ட 77 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளார்கள்.
குழந்தைகளைப் பாதுகாக்க அன்னையருக்குத் தடுப்பூசி
இந்தியாவில் நாவல் கரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாம் அலை முடிவுறத் தொடங்கியுள்ளதை அடுத்து மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன. மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் வைரஸ் தாக்குதலுக்குள்ளாவர்கள் என்னும் அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இதற்கான சாத்தியம், அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை என்று அறிவியலாளர்களும் மருத்துவ நிபுணர்களும் கூறிவருகின்றனர். ஆனால், முதல் அலையில் முதியவர்களும் இரண்டாம் அலையில் 18 வயதைக் கடந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிப்புக்குள்ளானதை வைத்துப் பார்க்கும்போது மூன்றாம் அலையில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களிடையே வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்கிற அச்சத்தைப் புறக்கணிக்க முடியாது. இந்தச் சூழலில் மத்திய அரசும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. அதே நேரம் மூன்றாம் அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் வலியுறுத்திவருகின்றனர். இந்தியா, 18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கவில்லை. இந்தச் சூழலில் மேற்கு வங்கத்தில் 12 வயதுவரையுள்ள குழந்தைகளின் அன்னையருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். குழந்தைகளுக்குக் கரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை இதன்மூலம் குறைக்க முடியும் என்று அம்மாநில அரசு கருதுகிறது. மேலும், அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெண்களுக்கென்று 26,000 கோவிட் சிகிச்சை படுக்கைகளை ஒதுக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கேரளத்தை உலுக்கும் வரதட்சிணை மரணங்கள்
கல்வியறிவு உள்படப் பல்வேறு சமூக நல அளவுகோல்களில் முன்னிலை வகிக்கும் கேரள மாநிலத்தில் வரதட்சிணைக் கொடுமையால் பெண்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் வசிக்கும் விஸ்மயா (24), ஆயுர்வேத மருத்துவ மாணவி. இவர் கடந்த வாரம் தன் புகுந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தனது கணவரால் வரதட்சிணைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டது குறித்துத் தன் பிறந்த வீட்டு உறவினர்களுக்கு இறப்பதற்கு முன்பு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஸ்மயாவின் பெற்றோர் திருமணத்துக்காக வாங்கிக்கொடுத்த ரூ.11.5 லட்சம் மதிப்புள்ள கார் கிரணுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவர் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் கேரளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதை அடுத்து கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்துள்ளது.
விஸ்மயா இறந்த அதே நாளில் திருவனந்த புரத்தின் விழிஞ்ஞம் பகுதியில் வசிக்கும் அர்ச்சனா (24) வரதட்சிணை கொடுக்காததால் அவருடைய கணவர் வீட்டாரால் எரித்துக் கொல்லப்பட்டார். மேலும், வள்ளிக்குன்னத்தில் சுசித்ரா (19) என்பவர் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுவும் வரதட்சிணையால் தூண்டப்பட்டதாக இருக்கும் என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. மாநில குற்ற ஆவணக் காப்பக தரவுகளின் 2016 முதல் 2020 காலத்தில் கேரளத்தில் 66 வரதட்சிணை தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. தம்மிடம் வரும் வரதட்சிணைக் கொடுமை தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ள கேரள மகளிர் ஆணையத் தலைவர், அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய மனுவை மாநில அரசுக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். திருமணத்தின்போது பெறப்படும் தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் மீது மணப்பெண்ணுக்கு உரிமையளித்தல் மற்றும் ஆடம்பரத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் கொண்டுவருதல் ஆகியவை இந்தப் பரிந்துரைப் பட்டியலில் முக்கியமானவை. வரதட்சிணைக் கொடுமை மரணங்களைத் தொடர்ந்து, “வரதட்சிணை கொடுப்பதன் மூலம் உங்கள் மகள்களை விற்பனைப் பொருள்கள் ஆக்காதீர்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.