Published : 20 Dec 2015 02:19 PM
Last Updated : 20 Dec 2015 02:19 PM

முகங்கள்: தமிழால் இணைந்த தோழிகள்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு துறைகளைச் சேர்ந்த பெண்களை நட்பென்னும் புள்ளியில் இணைத்திருக்கிறது தமிழ். திருவண்ணாமலை மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாதேவி. அப்பா, அம்மா, அண்ணன்கள் என்று அன்பும் அமைதியும் தழைத்தோங்கும் குடும்பம். அப்பாவும் மூத்த அண்ணனும் ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள். வீட்டில் எப்போதும் தமிழ் மணக்கும். சிறு வயது முதலே அதைக் கேட்டு வளர்ந்த உமாவுக்குத் தமிழ் மீது எப்போதும் தனிப் பற்று. அதனால் தமிழில் முதுகலைப் பட்டம் படித்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் அபிராமி. தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அபிராமி, கணிப்பொறி பட்டப் படிப்புக்குப் பிறகு எம்.சி.ஏ., எம்.பி.ஏ., இரண்டையும் முடித்தார்.

இந்த இருவரும் எப்படித் தமிழால் இணைந்தார்கள்? அபிராமியே அதை விளக்குகிறார்.

“நான் எம்.சி.ஏ. ஃபைனல் இயர் படிக்கும்போது புராஜெக்ட் செய்யணும். எல்லாரும் வழக்கமா பைனான்ஸ், பேங்கிங் இப்படித்தான் தேர்ந்தெடுப்பாங்க. நாம ஏதாவது வித்தியாசமா செய்யணுமேன்னு மொழியியலைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அபிராமி சொல்ல, தொடர்கிறார் உமாதேவி.

“நாம எவ்வளவுதான் உயர்ந்தாலும் தமிழை மட்டும் மறந்துடக் கூடாது. ‘நீ தமிழுக்கு ஏதாவது செய்யணும்மா’ன்னு அப்பா அடிக்கடி சொல்வார். பேராசியர் தெய்வசுந்தரம் சாரோட அறிமுகம் அதுக்கான பாதையை அமைச்சு கொடுத்துச்சு. இங்கிலீஷ்ல ஸ்பெல் செக்கர் இருக்கற மாதிரி தமிழ்ல ‘சொற்பிழை திருத்தி’ உருவாக்குற அவரோட முயற்சில நானும் பங்கெடுத்துக்கிட்டேன். அதுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அபிராமி பார்த்துக்கிட்டாங்க” என்று தாங்கள் தோழிகளான கதையைச் சொல்கிறார் உமாதேவி.

‘சொற்பிழை திருத்தி’ பணி முடிந்த பிறகு தன் பி.எச்டி., வேலையைத் தொடங்கினார் உமாதேவி. அதற்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம்தான் வழிகாட்டி. பிறமொழிச் சொற்களைத் தமிழிலும் தமிழ்ச் சொற்களைப் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கும் மென்பொருள்கள் ஏற்கெனவே சந்தையில் உண்டு. ஆனால் தமிழில் ஒரு வாக்கியத்தை அப்படியே முழுவதுமாகப் பிழையின்றி மொழிபெயர்க்கும் மென்பொருள்கள் மிகக் குறைவு. அப்படியே மொழிபெயர்த்தாலும் அது முழுமையானதாக இருக்காது. காரணம் தமிழின் பன்முகத்தன்மையும் இலக்கணமும் தனித்தன்மை கொண்டவை. அதையே சவாலாக ஏற்றுக்கொண்டார் உமாதேவி.

“தமிழில் ஒரு தனிச் சொல்லை எளிதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிடலாம். அதற்குக் கணினியின் அறிவே போதுமானது. ஆனால், ஒரு வாக்கியத்தை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, கணினி அறிவுடன் பகுத்தறியும் சிந்தனையும் அவசியம். கணிப்பொறி என்கிற கருவியை எப்படிச் சிந்திக்கவைக்க முடியும்? அந்தச் சவால் எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு எல்லா வகையிலும் தொழில்நுட்ப வகையில் உதவியாக இருந்தார் அபிராமி. இதைச் செயல்படுத்த எனக்கு மூன்று ஆண்டுகளானது. இப்போது என் ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நான் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் உமாதேவி.

மொழியைக் கணினியியில் உருவேற்றும் இந்த வேலை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்கிறார் அபிராமி.

“நான் புராஜெக்ட் பண்ணும்போதே தமிழ்ல என்ன சாதிக்க முடியும்னு பலரும் என்கிட்டே கேட்டாங்க. ஆனா நான் எதுக்காகவும் தடுமாறல. நான் எடுத்த முடிவில் உறுதியா இருந்தேன். தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கும் பணி எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கு. தமிழ்ல பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி இப்படி ஒவ்வொண்ணும் கணக்குப்படிதான் அமைஞ்சிருக்கு.

தமிழை பாடத்திட்டத்துல ஒரு மொழியா மட்டும் படிச்ச எனக்கு அதோட தோற்றம், தொன்மை, வளர்ச்சி பற்றி தெரிஞ்சுக்கும்போது ஆச்சரியமா இருக்கு. சொற்கள் சேர்ந்து ஒரு தொடர் உருவாகும்போது, எல்லாமே இலக்கண விதிப்படி, அதாவது கணக்குப்படி நடக்குது. இந்த மாதிரி கணக்கை பள்ளி நாட்களில் சொல்லிக் கொடுத்திருந்தா இன்னும் ஆர்வமா தமிழைப் படிச்சிருப்பேன்” என்கிறார் அபிராமி. திருமணத்துக்குப் பிறகு தமிழ் சார்ந்த தன் பணியைத் தொடர்வதில் சிக்கல் இருக்கக் கூடாது என்பதால் ஆரம்பத்திலேயே தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டதாகச் சொல்கிறார் இவர்.

“திருமணத்துக்குப் பிறகு தான் பணியாற்றுகிற நிறுவனத்திலேயே என்னையும் பணியாற்றச் சொன்னார் என் கணவர். ஆனால் என் விருப்பம் தமிழ்தான் என்று சொன்னதும் மறுப்பேதும் சொல்லவில்லை. தொடர்ந்து ஊக்கமளிப்பதுடன் தன் ஆலோசனைகளையும் சொல்வார்” என்று அபிராமி சொல்ல, “நான் பி.எச்டி. செய்துகொண்டிருக்கும்போதுதான் எனக்கும் திருமணமானது. என் கணவர் சாப்ட்வேர் இன்ஜினீயர். என்னுடைய இந்த முயற்சியைப் பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் தொழில்நுட்ப உதவியும் செய்வார்” என்று முடித்தார் உமாதேவி.

தொடர்ந்து தமிழ்த் தளத்தில் இயங்கவே விரும்புகிறார்கள் தமிழால் இணைந்த உமாதேவியும் அபிராமியும். “தொழில்நுட்ப அளவில் உலக மொழிகளுக்கு நிகராகத் தாக்குப்பிடிக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு, எப்போதும் தமிழுக்கு அழிவில்லை” என்று ஒருமித்த குரலில் இந்தத் தோழிகள் சொல்லும்போது அதில் தமிழ் குறித்த பெருமிதமும் நட்புணர்வும் கலந்து ஒலிக்கின்றன.

‘இருளுக்கு இங்கே இனி என்ன வேலை?’ தொடர் அடுத்த இதழில் இடம்பெறும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x