

கரோனா பெருந்தொற்றுக் காலம் குழந்தைகள் வாழ்வில் ஆறாத ரணத்தையும் தீராத் துயரத்தையும் ஏற்படுத்திவருகிறது. நூற்றுக்கணக்கான குழந்தைத் திருமணங்கள் தமிழகம் முழுக்கச் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகின்றன. ‘குழந்தைகளுக்கான உரிமைகளும் நீங்களும்’ (CRY) அமைப்பு நடத்திய ஆய்வின்படி 2020-ம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. அம்மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 318 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது முதல் அலையின் நிலவரம். இரண்டாம் அலையில் இன்னும் அதிகரித்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
‘நான் படிக்க வேண்டும், எனக்குத் திருமணம் வேண்டாம், தயவுசெய்து திருமணத்தை நிறுத்துங்கள்’ என்று மதுரை மாவட்ட எஸ்.பி.யின் செல்போனுக்குக் குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கும் துணிச்சல் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் சொல்லித் தீராதது.
கரோனா காலத்தில் திருமணம் செய்துவைத்தால் செலவு குறையும் என்கிற ஒரே நோக்கத்தால் சிறுமிகள் வாழ்வு சீர்குலைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்து வதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் குறைவாக உள்ளது.
குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்க்கையை மீட்டுத் தருவது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமை என்றாலும் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கக்கூடிய மிக முக்கியமான நபராகக் குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரி (CMPO - Child Marriage Prohibition Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைத் திருமணத்தைக் கையாள் வதில் இவர்களது பங்களிப்பு என்ன என்பது குறித்து மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநராகப் பல துறைகளின் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் எஸ்.ருக்மணியிடம் பேசினோம்.
‘‘தமிழகத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் (District Social Welfare Officer) சி.எம்.பி.ஓவாக (CMPO) நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் சட்ட ரீதியான உதவி உள்பட எல்லாவிதமான உதவியும் ஆதரவும் அளிக்க இவருக்கு அதிகாரம் உண்டு. சம்பந்தப்பட்ட குழந்தைகள் மட்டுமல்ல; திருமணம் குறித்த தகவல் அறிந்த யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதன் மூலம் அந்தக் குழந்தையின் எதிர்காலம் காக்கப்படும். அதற்காகத் திருமணம் முடிந்துவிட்டால் அவ்வளவுதான் தலைவிதி என்பதல்ல. திருமணம் முடிந்த பிறகும் குழந்தைகளை மீட்டு, எதிர்காலத்தை உறுதிப்படுத்தலாம்” என்கிறார் ருக்மணி.
திருமணம் நடந்து முடிந்துவிட்டால்?
l காவல்துறையினரிடம் புகார் அளித்து அவர்களது உதவியுடன் குற்றவாளிகளைக் கைதுசெய்யலாம்.
l பாதிக்கப்பட்ட குழந்தையை அல்லது குழந்தைகளை உடனடியாக அல்லது 24 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும் (2000-ம் ஆண்டு, சிறார் நலத் திட்டத்தின்கீழ்). அதுவரை அந்தக் குழந்தையை மாநில அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருக்கச் செய்ய வேண்டும்.
l குழந்தை நலக் குழு அம்மாவட்டத்தில் இல்லை என்றால் அக்குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதல் வகுப்பு நீதிபதியின் முன் ஆஜர்படுத்த வேண்டும்.
l எப்போதும், எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காவல் நிலையத்தில் இருக்க வைக்கக் கூடாது. அக்குழந்தையை மீண்டும் மீண்டும் தன் வாக்குமூலத்தை வெவ்வேறு அதிகாரிகளிடம் கூறச்செய்து புண்படுத்தக் கூடாது.
l தேவையற்ற மருத்துவப் பரிசோதனை களோ மகளிர் நலப் பரிசோதனைகளோ செய்யக் கூடாது. எந்த ஒரு பரிசோதனையும் செய்வதாக இருந்தால் அக்குழந்தையிடமும், பெற்றோர்/காப்பாளர்/ அடுத்து நெருங்கிய நண்பர்கள் ஆகியோரிடம் விளக்கிக் கூறி ஒப்புதல் பெற்றுத்தான் செய்ய வேண்டும்.
l குழந்தையை மீட்ட பின் மருத்துவ உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை, மறுவாழ்வு ஆதரவு போன்ற எல்லாவிதமான உதவிகளையும் ஆதரவையும் அளிக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
l அக்குழந்தையை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கூடாது. ஆதாரங்கள் மற்றும் குறுக்கு விசாரணை களை ஒரே நாளில் நடத்த முயல வேண்டும். வாக்குமூலம் பதிவு செய்யப்படும்போது அங்கே இருக்க வேண்டும்.
l முழுமையாக அக்குழந்தையின் தேவைகளையும் வீட்டுச் சூழ்நிலையையும் மதிப்பிட வேண்டும். விசாரணை நடக்கும்போது பாதிக்கப்பட்ட குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்நிகழ்வுக்குப் பின் குழந்தை பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் குழந்தையின் நீண்டகால மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு குறித்துத் திட்டமிட வேண்டும்’’ என்கிறார் ருக்மணி.
மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் சமூகநலத் துறையும் இணைந்து குழந்தைத் திருமணம் இல்லாத தமிழகத்தை உருவாக்கச் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவசர அவசியம்.