

கடந்த நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகராக மீரா குமார் செயல்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் 16-ம் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது தொகுதி மக்களால் சகோதரி என அன்போடு அழைக்கப்படும் சுமித்ரா மகாஜன் 1943-ம் ஆண்டு ஏப்ரல் 12-ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிப்லன் என்னும் ஊரில் பிறந்தார். இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் பட்டமும் பெற்றுள்ளார். அவரது அரசியல் பயணம் இந்தூர் நகரசபையிலிருந்து தொடங்கியது. 1982-ம் ஆண்டு இந்தூர் நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1984-85 ல் அந்நகராட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
தொடரும் வெற்றி
இவர் 1989-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிராகாஷ்சந்த் சேதி என்னும் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து முதலில் நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்தார். அந்தத் தேர்தலில் இருந்து தொடர்ந்து அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி அடைந்து வந்திருக்கிறார். இந்தியாவில் தொடர்ந்து எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே பெண் இவர். இந்தத் தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவரை அடுத்த வந்த காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணன் படேலைவிட 4,66,901 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
1999 முதல் 2003 வரையான காலத்தில் மூன்று மத்திய அமைச்சரவையில் மாநிலங்களுக்கான அமைச்சராகச் செயல்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றியடைவதற்கு முன்னர் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மூன்று முறை தோல்வியடைந்துள்ளார். ஆனால் அந்தத் தோல்வியால் அவர் துவண்டுபோகவில்லை. அவரது தளராத முயற்சி இன்று அவரை மக்களவைத் தலைவராக்கியுள்ளது.