

டெலிஷா டேவிஸ், இவர்தான் கடந்த வாரம் கேரளத்தின் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எர்ணாகுளம் இரும்பன பெட்ரோலிய மையத்திலிருந்து திரூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்பிச் சென்ற டேங்கர் லாரியை வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நிறுத்தியுள்ளார். பொதுவாக எரிபொருள் கொண்டுசெல்லும் டேங்கர்களை வாகனப் போக்குவரத்துப் பரிசோதனைக்கு அவசியமில்லாமல் நிறுத்தும் வாடிக்கை அங்கு இல்லை. அத்தியாவசியப் பொருளைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உண்டான சலுகை அதற்கும் உண்டு. ஆனாலும், அந்த டேங்கர் லாரியை அந்த ஆய்வாளர் நிறுத்தியிருக்கிறார். அதற்கான காரணம் டெலிஷாதான்.
ஒரு சின்ன பெண் வாகனத்தை ஓட்டிச் செல்வதை அவரால் நம்ப முடியவில்லை. மேலும், அந்தப் பெண்ணுக்கு டேங்கர் லாரி ஓட்டும் உரிமை இருக்க வாய்ப்பே இல்லை எனத் தன் அனுபவத்தால் அவர் நம்பி அந்த லாரியை விரட்டிச் சென்று நிறுத்தியுள்ளார். டெலிஷா பதற்றமில்லாமல் இறங்கித் தன் ஓட்டுநர் உரிமத்தையும் வாகனம் இயக்குவதற்காக நிறுவனம் அளித்த அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். ஆய்வாளர் உண்மையில் வாய்பிளந்து போனார். அதன் பிறகு மூன்று வருடங்களாக இந்த வாகனத்தை இயக்கி வரும் டெலிஷா கேரளம் தாண்டி சமூக ஊடகங்களில் வைரல் ஆனார்.
திருச்சூரை அடுத்துள்ள கண்டஷன்கடவு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் டெலிஷா. முதுகலை படித்துவரும் இவர் பகுதி நேரமாக டேங்கர் லாரியை இயக்கி வருகிறார். முழு நேரக் கல்லூரி வகுப்பு இருந்தபோது வார இறுதிகளில் மட்டும் லாரி இயக்கிவந்த இவர் கரோனா ஊரடங்குக்குப் பிறகு தினமும் இயக்கத் தொடங்கியிருக்கிறார். இரவுதான் இணைய வழி வகுப்பு என்பதால் பகலில் டேங்கர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி இருக்கிறார். இப்போது பெட்ரோல் பயன்பாடு குறைந்துவருவதால் வாரத்துக்கு மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே பெட்ரோல் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
டெலிஷாவின் தந்தையும் இதே பணியில் 40 வருட அனுபவம் உள்ளவர். அவரிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டிருக்கிறார் டெலிஷா. “அப்பா காலதாமதமாகத்தான் வருவார். என் அக்காமார் இருவரும் அப்போது உறங்கிவிடுவார்கள். நான் மட்டும் அவருக்காகக் காத்திருப்பேன். லாரியுடன் வீடு திரும்பும் அவர், எனக்கு வாகனம் ஓட்டக் கற்றுத் தருவார்” எனத் தான் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டது பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.
ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இவர் அதிகாலை 2.30 மணிக்கு வீட்டிலிருந்து பணியைத் தொடங்கிவிடுகிறார். 2 மணி நேரத்தில் இரும்பன பெட்ரோல் நிரப்பும் மையத்துக்குச் சென்றுவிடுகிறார். அங்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு 9.30 மணிக்குப் புறப்படத் தொடங்குவார். அங்கிருந்து இடைநில்லாமல் நான்கு மணிக்கெல்லாம் திரூரில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு வந்துவிடுவார்.
டேங்கர் லாரி மற்ற லாரிகளைப் போல் அல்ல. மணலோ கற்களோ கொண்டுசெல்லும் லாரிகள் என்றால் அலுங்காமல் குலுங்காமல் வந்துவிடலாம். ஆனால், டேங்கர் லாரியில் இருக்கும் திரவம் குலுங்குவதால் லாரியை கவனமாக ஓட்டுவது அவசியம். இவர் முதலில் திரவம் நிரப்பப்படாத டேங்கரை ஓட்டிப் பயிற்சி எடுத்துள்ளார். பிறகு திரவம் நிரப்பப்பட்ட டேங்கரை வேகத்தடை இல்லாச் சாலைகளில் ஓட்டிப் பயின்றுள்ளார். இதற்கெல்லாம் இவர் தந்தை உடன் நின்றுள்ளார்.
“டேங்கர் லாரி ஓட்டுபவர் பெண் என்பதால் பலரும் ஒருகணம் வியந்து பார்த்துச் செல்வார்கள். பெட்ரோல் நிரப்பத் தாமதமானால் மையத்தில் விருந்தினர் அறையில் அவரை ஓய்வெடுக்கச் சொல்வார்கள். ஆனால், இப்போது சமூக ஊடகங்கள் மூலம்தான் மிக பிரபலம் ஆகியிருக்கிறேன். என் தோழிகள் பலரும் நான் டேங்கர் லாரி ஓட்டுவதைப் பற்றிச் சொன்னபோது நம்பவில்லை. இப்போது அழைத்து, ”நீ சொன்னது உண்மைதான்’ என வியக்கின்றனர்” எனச் சொல்கிறார் டெலிஷா.
முதுகலை தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் டெலிஷாவுக்கு கேரளப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்ற வேண்டும் என்பது விருப்பம். அது விரைவில் நனவாகட்டும்.