

சின்னராமலிங்கபுரம் - பெயருக்கு ஏற்றவாறு ஒரு சின்னஞ்சிறிய கிராமம். கூடி நிற்கும் குழந்தைகளில் ஒன்றுக்குக் கன்னத்தில் முத்தமிடுகிறார் அவர். நொடிப் பொழுதில் குழந்தைகள் வரிசையாக நின்று முத்தம் கேட்கிறார்கள். அவரும் சளைக்காமல் ஒவ்வொரு குழந்தையையும் சேர்த்தணைத்து முத்தமிட, மத்தாப்புச் சிரிப்புடன் பிள்ளைகள் குதூகலிக்கிறார்கள். குழந்தைகளுக்குப் பொருளாதாரம் மட்டுமா பற்றாக்குறை, அன்பும் தானே பற்றாக்குறை என்கிறார் கண்களில் நீர் தளும்ப.
அவர் ஐ.நா. சபையில் பணிபுரிந்தவர் என்பதை அந்தப் பிஞ்சுகளைப் போலவே நாங்களும் அன்றைக்கு அறிந்திருக்கவில்லை. காரணம், அவரது எளிமை. அதுதான் தோழர் மைதிலி சிவராமனின் அடையாளம்.
குழந்தைகள் மீதான அக்கறை
அன்றைய விருதுநகர் மாவட்டத்தின் 17 கிராமங்களில் மைதிலியின் முயற்சியால் குழந்தைத் தொழிலாளர்களுக்கான இரவுப் பள்ளி நடத்தினோம். அறிவொளி இயக்கத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்துகொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் இப்பணியில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டோம். விடுதலைப் போராட்ட வீராங்கனை கே.பி.ஜானகியம்மாள் பெயரில் ஜனநாயக மாதர் சங்கம் இப்பள்ளிகளை நடத்தியது. இதன் மையவிசையாக மைதிலி இருந்தார்.
பாடத்திட்டத்தில் தேர்ச்சிபெற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழ் வழங்கத் திட்டமிட்டோம். இதை மைதிலியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். பட்டமளிப்பு விழா எனப் பெயரிடுங்கள் என்றார் உணர்ச்சிகரமாக. அப்போதும் எங்கள் கண்கள் கசிந்தன. பட்டமளிப்பு விழாக்களும் நடந்தன. அப்போது பெற்றோர்கள் நெகிழ்ந்து நின்ற காட்சியை எப்படி மறக்க முடியும்?
கல்வியே விடுதலை
பெண் கல்வி விடுதலை தருவது என்பதில் அவருக்கு இருந்த உறுதி, உசிலம்பட்டியை நோக்கி அவரை நகர்த்தியது. பெண் சிசுக் கொலையை தடுத்திடக் கல்வியே உதவும் என நம்பினார். அதற்காகவே இப்பகுதியில் உள்ள கருவேப்பிள்ளை என்கிற கிராமத்தைத் தத்தெடுத்து, பெண் குழந்தைகள் அனை வருக்கும் கல்வி கிடைத்திடச் செய்தார்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் ஆர்வம்கொண்டிருந்த மைதிலி, எவ்வளவு போர்க்குணம் கொண்டவர் என்பதையும், அவரால் நிறைவேற்றப்பட்ட புரட்சிகரப் பணிகளையும் அறிந்தால் எவரையும் ஆச்சரியம் தொற்றிக்கொள்ளும். அமெரிக்க சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று முதலில் நியூயார்க் அரசு சார்ந்த பணியிலும் பின்னர் 1966 முதல் ஐ.நா. மன்றத்திலும் பணிசெய்தார். தனது சொந்த நலன்களைவிடப் பொதுவாழ்வில் அவருக்கு இருந்த நாட்டம் அவரைத் தலைமறைவாக கியூபா வரை சென்றுவர வைத்தது.
அரசியல் நுழைவு
வியட்நாம் போருக்கு எதிரான மாணவர் போராட்டங்கள், கறுப்பின மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் போன்றவை அவரை அரசியல் அரங்குக்கு இழுத்துவந்து நிறுத்தின. உயர்ந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு நாடு திரும்பினார்.
பத்திரிகையாளர் என்.ராம் அவர்களுடன் இணைந்து, ‘ரேடிக்கல் ரெவ்யூ’ பத்திரிகைப் பணியை மேற்கொண்டார். 1968-ல் தலித் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட கீழ் வெண்மணிக்கு உடனடியாகச் சென்று பல நாட்கள் தங்கியிருந்து ஆவணப்படுத்தினார்.
அவரது ஆவணங்கள் இதற்காக அமைக்கப்பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷனுக்குப் பல தரவுகளைக் கொடுத்தன. முன்னரே இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த மைதிலி, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் வி.பி.சிந்தன் அவர்களைச் சந்தித்ததன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
உரிமைக்குரல்
கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கம் முதல் அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம்வரை அவரின் பங்களிப்பு இருந்தது. தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் தொடங்கி மத்திய மாநில அரசில் பணிசெய்யும் பெண் ஊழியர்கள் வரை மைதிலியின் தாக்கத்தைப் பார்க்க முடியும். பெண்களின் உரிமைக் குரலாக ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியவர்களில் மைதிலியும் ஒருவர். கண்ணீர்க் கதைகளாக விரியும் பெண்களின் பாடுகளுக்காகக் களப்பணியில் பெரும் பங்காற்றிய மைதிலி, பெண் இனத்தின் பிரச்சினைகள் குறித்து மார்க்சிய நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது கருத்துக்களும் அறிவுத்திறனும் மாதர் இயக்கத்துக்கு வலிமையான கருத்தியல் அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்தன.
தொழிலாளர்கள், பெண்கள் உரிமை என்பதை எல்லாம் கடந்து அவரது பணி எல்லையற்றதாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளில் தனிக் கவனம் செலுத்தினார். வனத்துறையினரால் வன்கொடுமைக்கு உள்ளான வாச்சாத்திக்கு பாப்பா உமாநாத்துடன் இணைந்து சென்று அவர் திரட்டிய தகவல்களும் எழுதிய மகஜர்களும் பிற்காலத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படப் பெரிதும் காரணமாகின. மைதிலி சிவராமனின் வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது. அவரது சொல்லும் செயலும் மக்களுக்கானதாக மட்டுமே இருந்தன.
கட்டுரையாளர்: பி.சுகந்தி, பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.