

களிமண்ணாக இருந்த என்னைச் செதுக்கிய மைதிலியின் உளிகள் கம்யூனிசம், பெண்ணியம், மனித நேயம், பிரபஞ்ச வெளி, உள்ளகத் தேடல், சமரசம் அற்ற சமத்துவத் தோழமை ஆகியவை. எவ்விதப் பொதுவெளிப் பரிச்சயமும் அரசியல் பின்னணியும் அற்ற பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து, சாதி மறுப்புத் திருமணத் தேர்வை மட்டுமே முன்வைத்து லட்சுமண ரேகையைக் கடந்தவள் நான். கல்வி, வேலை, குழந்தை என்கிற வட்டத்துடன் என் வாழ்க்கை முடிந்திருக்கலாம். பல ‘புரட்சிகர’ உறவுகளில் பெண்ணின் உலகம் இன்றைக்கும் அப்படித்தான் முடிந்துபோகிறது. ஆனால், பெண் எனும் அரசியல் தன்னிலை சாத்தியம் என மைதிலி அடையாளம் காட்டினார்.
உலக, இந்திய அளவில் புத்தலைகளைக் கண்ட காலம் இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள். தொழிற்சங்கத்தில் முனைப்போடு இருந்த மைதிலி, பெண்கள் அமைப்புக்குள் வந்தபோது அது அவரைப் பெண் என்கிற அடையாளத்துக்குள் சுருக்கு வதாகவே ஒரு வகையில் இருந்திருக்கும். இன்றைக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்சமூக அலகுகளின் குறுக்குவெட்டு இணைப்பரசியல் (intersectionality) என்கிற கருதுகோளை வாழ்ந்துகாட்டியவர் மைதிலி. அறுபதுகளில் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெண்களில் பலர் அவரவர் சார்ந்த வர்க்க, சாதிய, ஆதிவாசிகள், சுற்றுச்சூழல், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலோடுதான் தம்மை இனங்கண்டுகொண்டனர். ஆனால், அவர்களின் இருப்போ, அந்த அரசியலை முடிந்தவரையில் மாற்ற முயன்றது.
மைதிலியின் வாழ்வில் நங்கூரமாகத் திகழும் தோழர் கருணாகரனின் அரசியல் தெளிவு, அமைதியான உடனிருப்பு ஆகியவை வீடு, குடும்பம் போன்றவற்றை மறுவரையறை செய்ய வைப்பவை. அவர்களது வீடு திறந்த கூடாக இருந்ததை கல்பனா தனது ‘காம்ரேட் அம்மா’ நூலில் அழகாக விவரித்திருக்கிறார். கல்பனாவின் ஆளுமை தாய்மையின் வரைவிலக்கணத்தை மீள்வாசிப்பு செய்ய வைக்கிறது.
உரையாடல் கொடை
தமிழகத்தில் அந்தக் காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு பின்னணிகளோடு சிறிய, பெரிய குழுக்களாகப் பெண்கள் திரண்டனர். தோழர்கள் சரசுவதி, கீதா ராமகிருஷ்ணன், காப்ரியல் டீட்ரிச், லூஸி எனப் பலரும் இயங்கினர். அதேபோல பல அமைப்புகளும் இருந்தன. பரந்துபட்ட பெண்கள் அமைப்பாக இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை மைதிலி நடைமுறைப்படுத்தினார். அதேநேரம், பெண் என்கிற பிரிவு ஒருவகைப்பட்டதல்ல என்பதை மைதிலி அழுத்தமாக வெளிப்படுத்தினார்.
வெவ்வேறாகப் பிரிந்து இருக்கும் பொதுவுடைமை அமைப்புகளிலும் குறைந்தபட்ச உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பல நேரங்களில் விவாதப் புள்ளியாக்கினார். கட்சி ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு இதனைச் சாத்தியப்படுத்துவதன் சிரமம், அறிந்தவர்களுக்குப் புரியும். 1991-ல் சோவியத் தகர்வு உறுதியான நேரம், இளம் தோழர்களாக இருந்த நாங்கள் மைதிலியைத் துளைத்து எடுத்தது, அவர் எங்கள் ஐயங்களைத் தலைமையிடம் எடுத்துக் கூறி விவாதங்களை முன்னெடுத்த விதம் பெண்ணிய உரையாடலுக்கு மிகப் பெரிய பாடம். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் உரையாடலைத் தக்கவைக்க வேண்டும் என்கிற படிப்பினை மைதிலி தந்த கொடை.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் எண்பதுகளில் உருவான மீடியா கண்காணிப்புக் குழு, சக்தி நாடகக் குழு, மகளிர் சிந்தனை வெளியிட்ட நூல் அறிமுகங்கள், மொழிபெயர்ப்புப் பணிகள் அனைத்துமே மைதிலி உள்ளிட்ட தலைமையால் வழிநடத்தப்பட்டன. நான் அறிந்தவரை மாதர் சங்கத்தில் டெல்லி கிளையில் காளிந்தி தேஷ்பாண்டே ஒருங்கிணைத்த புலாந்த் (சஃப்தர் ஹஷ்மி அவருடன் பணியாற்றினார்), சென்னைக் கிளையின் சக்தி நாடகக் குழு ஆகியவை மட்டுமே தனித்த கலைக் குழுவை அமைத்தன. ஆனால், பெண்கள் அமைப்புகள் அனைத்திலுமே பாடலும் ஆடலும் சிரிப்பும் அரட்டையும் எப்போதும் இருக்கும். எம்மனத்துக்கு இணக்கமான வாழ்வை மறுதலிக்கும் சமூகத்துக்கு, எமது எதிர்வினை அவை.
வாழ்க்கையை எழுதுதல்
தன் ஆய்வுப் பணிகளை முன்னிட்டு 2002 விருதுநகர் மாநாட்டில் மைதிலி, தன் பொறுப்புகளில் இருந்து விலகினார். அவரது ஆய்வு, பாட்டி சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் துகள்களை நீல நிறத் தகரப் பெட்டிக்குள் இருந்து மீட்டெடுத்தது. பெண்ணிய வரலாற்று எழுத்தியலுக்கு புதியதொரு கோணத்தைத் தந்தது. பழுப்படைந்த காகிதக் குவியலுக்கு மத்தியில் தலையைப் பிய்த்துக்கொண்டு, தன் குழந்தைப் பருவத்தில் ஒதுங்கியே இருந்த பாட்டியின் மனத்துக்குள் கிடந்த உலகை அறிய முற்பட்டார். காலனிய ஆட்சிக்கு எதிராக சுப்புலட்சுமி நூல் நூற்றது, அரசு அலுவலரான கணவர் அறியாமல் கேரள இஸ்லாமியர்களின் மாப்ளா போராட்டத்துக்கு நிதி அளித்தது, மருத்துவமனையில் கிரேஸ் சாமுவேல் என்கிற பாதிரியாரின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு, அவருக்கு எழுதிய கடிதங்கள், தேடித்தேடி அவர் படித்த பௌத்த நூல்கள், உளவியல் நூல்கள், தன் மகள் பங்கஜத்தைப் படிக்கவைக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை சுப்புலட்சுமியை பெண்ணியக் கருத்தாடல்களுக்குள் கொண்டுவந்தன. ஆயுட்காலம் முழுதும் எழுத்துப் பணியில் ஈடுபட்ட மைதிலியின் இந்த நூல் மற்ற எழுத்துகளின் தொனி, லயம், பொருண்மை, வாதங்கள் ஆகியவற்றில் இருந்து மாறு பட்டது. தமிழில் இந்நூல் கவனத்துடன் விவாதிக்கப்படவில்லை. பழகிப்போன நம் பெண்ணிய வெளிக்குள் அடங்காத, கடினமான, முற்றுமுடிவான பதில் கிடைக்காத கேள்விகளை முன்வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நீதிக்கான பயணம்
அந்த நூலுக்குப் பின்னுரை வழங்கிய வரலாற்று அறிஞர் உமா சக்கரவர்த்தி, மைதிலி இந்த நூல் எழுதியதையே ஓர் ஆவணப்படமாக ஆக்கினார். அது ‘அ கொயட் லிட்டில் எண்ட்ரி’ என்கிற ஆவணப்படம். தொடர்ந்து மைதிலி பற்றிய ‘ஃப்ராக்மெண்ட்ஸ் ஆஃப் தி பாஸ்ட்’ ஆவணப்படத்தையும் அவர் இயக்கினார். 2007-ல் பெண்ணியப் படைப்பாளியும் அறிஞருமான வ. கீதா, தமிழகப் பெண்ணிய வரலாறு குறித்து நாடகமாக ஆக்க முயன்றார். அதில் உருவான ‘காலக் கனவு’ நாடகம் சுப்புலட்சுமி பற்றிய மைதிலியின் வாசிப்பில் இருந்து தொடங்கியது. கீதாவின் ‘சுடலையம்மா’, ‘வாக்குமூலம்’ நாடகங்கள் நெருக்கடி காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற காவல் துறை அடக்குமுறை பற்றி ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ இதழில் மைதிலி எழுதிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டவை.
புரட்சிகர இளைஞன் ஒருவனைக் காணாச் சவமாக்கிய கொடூரத்தைக் கட்சி எல்லைகளை மீறி, தேசிய அளவில் மைதிலி பதிவுசெய்தார். நாகம்மா பற்றிய மைதிலியின் வர்ணனை அடிப்படையில் பெரிய குங்குமப் பொட்டு வைத்த, மஞ்சள் நிற நூல் சேலை உடுத்தி, கக்கத்தில் மஞ்சள் பையை ஒடுக்கியபடி மைதிலி வீட்டுக்கு முன் உள்ள மரத்தடியில் அமர்ந்திருக்கும் கதாபாத்திரம் மேடையில் தோன்றியபோது, நாடகத்தைப் பார்க்க வந்திருந்த மைதிலியின் கண்கள் விரிந்தன. நடிகர் கீழே வந்ததும் வியர்வை சிந்திய அவள் கன்னத்தை மைதிலி தடவி, சிறுமுறுவல் செய்தது என் நினைவில் படமாக விரிகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, 25 ஆண்டுகளுக்குப் பின் நாகம்மாவுக்கு நட்ட ஈடு வழங்கினார். அதுதான் மைதிலி. கிளை பரப்பும், அடிவேர் பாய்ந்த மரம். அதன் வேரில் நீர் என்றைக்குமே காய்ந்ததில்லை. அவர் தொட்ட எவரும் தேங்கியதும் இல்லை.
கட்டுரையாளர்: அ.மங்கை, பெண்ணியச் செயற்பாட்டாளர், நாடகவியலாளர்.
தொடர்புக்கு: aramangai@gmail.com