அம்மா என்றால் புரட்சி

அம்மா என்றால் புரட்சி
Updated on
1 min read

அம்மா ஒரு வித்தியாசமான மனுஷி என்பதை அவர் வெளியுலகில் செய்த வேலை மட்டும் எனக்கு உணர்த்தவில்லை. எந்த குடும்ப விசேஷத்திலும் அம்மா பட்டு உடுத்தியதில்லை. ஒரு சின்ன தங்க நகைகூட அணிந்ததில்லை. சடங்கு முறைப்படி அவருடைய திருமணம் நடக்காததால், தாலி செயினும் கிடையாது. அம்மாவைப் பார்த்துதான் பொன், பட்டு, நகை மீதெல்லாம் பெண்களுக்கு இயற்கையாக ஈர்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுவது எவ்வளவு செயற்கையானது என்று நான் கற்றுக்கொண்டேன்.

ஒருநாள் காலை திடீரென்று ஏதோ சத்தம். எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த குடிசைப் பகுதியிலிருந்து பெண்கள் காலி குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் கூடியிருந்தனர். பள்ளிக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த அம்மா, அடுத்த நொடியே வெளியே ஓடிப்போய் அவர்களைப் பார்த்து, ‘அங்கேயே உட்காருங்க! பஸ் போக விடாதீங்க! கலையாதீங்க!’ என்று தண்ணீருக்கான அந்தக் கூட்டத்தை மறியல் போராட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கி விட்டார். என் முடியைச் சீவிப் பின்னிக்கொண்டிருந்த அம்மா சீப்பை வீசிவிட்டு, மாதர் சங்கத் தலைவியாகச் சட்டென்று உருமாறியது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. ஏனென்றால் அதுவே அம்மாவின் இயல்பு.

அம்மா கட்சிப் பணியில் இருப்பார், அப்பா வீட்டைப் பார்த்துக் கொள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வார் என்று இருவரும் தங்களுக்குள் முதலிலேயே பேசிக்கொண்டுவிட்டார்கள்.

என் பெற்றோரைப் பார்த்து நான் கற்றுக்கொண்ட முக்கியப் பாடம் ஒரு பெண் பொதுவாழ்வில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருக்க முடியும் என்றும், அவளை வியந்து பாராட்டும் ஒரு ஆண் எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவளுக்கு உறுதுணையாக நின்று, அவளைப் போற்றி வாழ முடியும் என்பதாகும்.

குடும்பம், குழந்தை, இயக்கம், பொது வெளி என்பதற்கெல்லாம் பொதுவாக மனிதர்கள் உருவாக்கும் சுவர்களைத் தகர்த்தெறிந்து வாழ்ந்த என் ‘காம்ரேட் அம்மா’ தனது அடிமனதில் புரட்சியாகவே இருந்திருக்கிறார். அவர் நினைவுகளை என் நெஞ்சில் சுமக்கும்வரை எந்தச் சோர்வையும் தொய்வையும் என்னால் எதிர்கொள்ள முடியும். இதைவிடப் பெரிய பரிசை ஒரு தாய் தன் மகளுக்குக் கொடுத்துவிட முடியுமா?

- மைதிலி சிவராமனின் மகள் கல்பனா கருணாகரன், தன் அம்மா குறித்து எழுதிய ‘காம்ரேட் அம்மா’ புத்தகத்தில் இருந்து.

(வெளியீடு: பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-24332924)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in