

உலகப் புகழ்பெற்றாலும் இன்னொரு வாய்ப்பில்லை
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் இரண்டாம் முறையாக முதல்வராகியிருக்கிறார். ஆனால், அவர் தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். விஜயனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் - சமூக நலத்துறை அமைச்சராக சிறப்பாகச் செயல்பட்டவரும் நிபா வைரஸ், கரோனா பெருந்தொற்றைக் கையாண்டதற்காக உலக அளவில் புகழ்பெற்றவருமான ஷைலஜா டீச்சர் எனப்படும் கே.கே.ஷைலஜா 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனால், ஷைலஜாவே மீண்டும் சுகாதார அமைச்சராக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஷைலஜாவுக்குப் பதிலாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீணா ஜார்ஜ், சுகாதாரம் - சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி யேற்றுள்ளார். இதையடுத்து, கேரளம் மட்டுமல்லாமல் தமிழகம் உள்ளிட்ட பிற இந்திய மாநிலங்களிலும் தேசிய அளவிலும்கூட பினராயி விஜயன் மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த முறை புதுமுகங்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையிலிருந்து பினராயி விஜயனுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டது என்கிற கேள்வி பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது.
இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி விவகாரம், தன் அமைச்சரவை சகாக்களைத் தேர்ந்தெடுப்பது முதல்வர், ஆளும் கட்சியின் தனிப்பட்ட உரிமை என்றெல்லாம் ஷைலஜாவின் விடுபடலைப் பெரிதுபடுத்த விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். சட்டப்பேரவைக் கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷைலஜா, தனக்கு அடுத்து சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுபவர் தன்னைவிடச் சிறப்பாக அந்தப் பணியை முன்னெடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லாத மற்ற இடதுசாரி கட்சிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சிறப்பாகப் பணியாற்றிய ஷைலஜாவுக்கு இன்னொரு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதை விமர்சித்துள்ளனர்.
புதிதாகப் பதவியேற்றுக்கொள்ளும் அமைச்சர்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் வீணா ஜார்ஜ், ஆர். பிந்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சின்சு ராணி ஆகிய மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இடது ஜனநாயக முன்னணியின் கடந்த ஆட்சியில் இரண்டு பெண் அமைச்சர்களே இருந்தனர்.
ஷாருக் கானின் சட்டை சமத்துவம்
புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கான் 2017-ல் 'ஃபெமினா' இதழுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்து மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் தன் மகனை சட்டை (மேலாடை) இல்லாமல் இருக்க அனுமதிப்பதில்லை என்று அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம்தான் முக்கியமானது. “உன் அம்மாவையோ சகோதரியையோ மேலாடையில்லாமல் பார்ப்பது உனக்கு எப்படி சங்கடம் அளிக்குமோ, அதேபோல்தான் நீ மேலாடை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கும் இருக்கும். ஒரு பெண் செய்யக் கூடாது என்று விதிக்கப்பட்டிருக்கும் எதையும் ஒரு ஆணும் செய்யக் கூடாது” என்று தன் மகனுக்கு அறிவுறுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார் ஷாருக்.
ஆணும் பெண்ணும் சமம் என்று யாராவது சொன்னால், “நான் சட்டைய அவுத்துட்டு ரோட்ல சுத்துவேன், உன்னால முடியுமா?” என்று திரைப்பட கதாநாயகர்கள் தொடங்கி சாமானியர்கள்வரை பெருமையுடன் சொல்பவர்கள் நிறைந்திருக்கும் சமூகம் நம்முடையது. அதனால்தான் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஷாருக் போன்ற நட்சத்திரங்களின் இதுபோன்ற செயல்களும் கருத்துகளும் பெரிதும் கொண்டாடப்பட வேண்டியவை ஆகின்றன.
அன்பல்ல அடிமைத்தனம்
இல்லங்களில் அன்னையருக்கு உரிய மரியாதையும் சம உரிமையும் அளிக்கப்படுகின்றனவோ இல்லையோ சமூக வலைத்தளங்களில் தாய்மையைப் போற்றும் பதிவுகளுக்குக் குறைவே இருக்காது. இந்தக் கரோனா ஊரடங்குக் காலத்தில் எண்ணற்ற பெண்கள் தொற்று கண்டறியப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் அன்றாட வீட்டுப் பணிகளிலிருந்து விடுபட முடிவதில்லை. தீவிர நோய் பாதிப்பு கொண்ட பெண்கள்கூட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆக்ஸிஜன் செறிவூட்டும் முகக்கவசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையிலும் சமையலறையில் நின்று சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் ஒளிப்படம் ‘நிபந்தனையற்ற அன்பு = அன்னை; அவள் எப்போதும் வேலை செய்யாமல் இருப்பதில்லை’ என்னும் ஆங்கிலக் குறிப்புடன் பலரால் உணர்ச்சிபொங்கப் பகிரப்பட்டது. இதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த திரைப்பட இயக்குநர் நவீன் “இது அன்பல்ல, சமூகக் கட்டமைப்பின் பெயரில் நிகழ்த்தப்படும் அடிமைத்தனம். இதுக்கு நீங்க வெட்கப்படணும் சென்றாயன்” என்று ட்வீட் செய்திருந்தார்.
‘வெட்கப்படணும் சென்றாயன்” என்பது நவீனின் ‘மூடர்கூடம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற மிகப் பிரபலமான வசனம். இது போன்ற ஒளிப்படமும் குறிப்பும், அன்னையரின் நிபந்தனையற்ற அன்பு, தியாகம், அவை குறித்த பெருமிதம் ஆகியவற்றின் பெயர்களால் பெண்களை எந்த நிலையிலும் மோசமாகச் சுரண்டுவதன் வெளிப்பாடு என்று பலரால் விமர்சிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பெண்மை, தாய்மையைப் புனிதப்படுத்துதல், அவற்றின் பெயரால் பெண்ணடிமைத்தனம் தக்கவைக்கப்படுவது குறித்த உரையாடல்கள் அதிகரித்திருப்பதும் பிரபலங்களும் அவற்றில் பங்கேற்பதும் வரவேற்புக்குரிய மாற்றங்கள்.