

கரோனா தொற்று இரண்டாம் அலை மக்களை ஆட்டிப்படைத்துவரும் நிலையில், அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 4,000 நிவாரணத் தொகையும், அதில் முதல் தவணையாக இந்த மாதமே ரூ. 2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ரூ. 2,000-க்கான டோக்கன் தற்போது வழங்கப்பட்டுவருகிறது.
நாங்கள் அரிசி அட்டை வைத்திருக்கிறோம் என்றாலும் பெரிதாகக் கஷ்டப்படாத நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. கடந்த ஆண்டு இறுதியில் சர்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு அரசு அனுமதித்திருந்தது. அதன்படி பலரும் அரிசி ரேஷன் அட்டைகளைப் பெற்றுவிட்டார்கள். அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த மாதமே ரூ. 2,000 கிடைக்கும். அதற்கான டோக்கன் எங்கள் பகுதியில் வழங்கப்பட்டபோது, நான் வாங்கவில்லை. எல்லாம் காரணமாகத்தான்.
கரோனா தொற்றால் எத்தனையோ ஏழை மக்கள் இந்தத் தொகையை நம்பியே வாழ்க்கை நடத்திவருகிறார்கள். கூலி வேலைக்குப் போகிறவர்கள், வீட்டு உதவிப் பணியாளர்கள், சாதாரண வேலைக்குப் போகிறவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிக்கலானது. ரேஷனில் அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைக்கும் என்றாலும், மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? அதனால், அப்படிப்பட்ட வர்களுக்கே இந்தப் பணம் செல்ல வேண்டும். என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினருக்குச் சமாளிக்க முடியாத அளவுக்கெல்லாம் பிரச்சினையில்லை.
அரசு கொடுக்கும் பணம் நம்முடையது, அதைப் பெறுவதில் தப்பில்லையே என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான பார்வை. அரசு கொடுக்கும் பணம், பொதுப்பணம். வேலையில்லாததால் யாரும் வாடிவிடக் கூடாது என்பதற்காக வழங்கப்படும் பணம். ஏற்கெனவே, கரோனா தொற்றால் குடும்பங்கள் மட்டுமில்லாமல் அரசும் பொருளாதார நெருக்கடியிலேயே உள்ளது. இந்த நிலையில், பெரிய பொருளாதாரச் சிக்கல் இல்லாதவர்கள், தங்கள் நிவாரணத் தொகையை விட்டுக்கொடுப்பது அரசின் சுமையைக் குறைக்கும்.
அது மட்டுமல்லாமல், தற்போது அரசு அழைப்பு விடுத்துள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (https://ereceipt.tn.gov.in/cmprf/Cmprf) ரூ. 4,000 செலுத்தியுள்ளேன். நான் அறியாத ஒரு குடும்பத்துக்கு அது உதவக்கூடும்.
இந்த நெருக்கடியான காலத்தில் நேரடியாக நம்மால் உதவ முடியாவிட்டாலும், இதுபோன்று இயன்ற உதவிகளைச் செய்யலாம்.
இந்த விஷயத்தை என் தோழி சுபாவிடம் பகிர்ந்துகொண்டபோது, ‘அய்யய்யோ நான் ரூ. 2,000 டோக்கனை வாங்கிவிட்டேனே’ என்றாள். டோக்கன் வாங்கினால் என்ன? நமக்கு நேரடியாகத் தெரிந்தே கஷ்டப்படும் குடும்பங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்துவிடலாம். இந்த இக்கட்டான காலத்தில் இந்த உதவிகளைக்கூட செய்யாமல், வேறென்ன பெரிதாக வாழ்ந்து சாதித்துவிடப் போகிறோம்?
- க. முத்தரசி, திருச்சி