Published : 09 May 2021 09:33 AM
Last Updated : 09 May 2021 09:33 AM

பெண்கள் 360: சட்டப்பேரவைகளில் பெண் உறுப்பினர்கள்  

தொகுப்பு: கோபால்

சட்டப் பல்கலையின் முதல் துணை வேந்தர்

தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேதகர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான பேராசிரியர் பி.நாகபூஷணம் கோவிட்-19 தொற்றுநோய்க்குத் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 4 அன்று காலமானார்.
வழக்கறிஞர் கொளத்தூர் பஞ்சரத்தினத்தின் மகளான நாகபூஷணம், தமிழில் முதுகலைப் பட்டமும் அரசியலைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுநிலைப் (எம்.எல்) பட்டமும் பெற்றவர். 'சமூக நீதியும் விளிம்புநிலை மக்களும் - நீதித் துறையின் பங்கு’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வித் துறையில் பேராசிரியராகவும் சென்னைச் சட்டக் கல்லூரியில் (தற்போது டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி) விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அரசியல் சாசன நிபுணரும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வித் துறைப் பேராசிரியராக பணியாற்றியவருமான கிருஷ்ணா ஷெட்டியை மணந்திருந்தார்.

1997-ல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவையும் (Syndicate) சாசனங்களையும் (statutes) வடிவமைத்தவர் அவர்தான். 2000-ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டார்.

கரோனாவிலிருந்து மீட்க வரும் செவிலியர்கள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த 1,212 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்து மருத்துவம் மற்றும் ஊரகச் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆணை வெளியிட்டுள்ளது. சென்னையில் கரோனா தொற்று சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துவருவதை ஒட்டிப் பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவியலியர்கள் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2015 முதல் 2019வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். விதிகளின்படி இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதை எதிர்த்து செவிலியர்கள் பல்வேறு வகைகளில் போராடிவந்தனர். இதையடுத்து இவர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில் மேலும் 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு ரூ.40,000 வரை மாத ஊதியம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நிரந்தரப் பணியாளர்களுக்கும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் கொடுக்கப்படும் வேலைகளில் தன்மையிலோ அளவிலோ எந்த வேறுபாடும் இல்லை என்பதால் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு அரசு செவிமடுத்திருக்கிறது.

பிரியா ரமணி விடுதலைக்குத் தடையில்லை

2018-ம் ஆண்டு ‘மீடூ’ இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பத்திரிகையாளர் பிரியா ரமணி, மூத்த பத்திரிகையாளரும் அப்போதைய மத்திய இணை அமைச்சரு மான எம்.ஜே.அக்பர் பணியிடத்தில் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாகப் பொதுவெளியில் பதிவுசெய்தார்.

இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அக்பர், பிரியா ரமணி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 2020 பிப்ரவரி 17 அன்று தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம் பிரியா ரமணி மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது. அத்துடன் பெண்கள் தமக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் தாங்கள் விரும்பும் தளங்களில் வெளிப்படுத்துவதைக் குற்றமாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனால், இந்தத் தீர்ப்பு பெண்ணுரிமை இயக்கத்துக்கான வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்த அக்பரின் மேல் முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது “இது அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்கல்ல. இதைவிட முக்கியமான பல விஷயங்கள் காத்திருக்கின்றன.” என்று கூறி அக்பரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சட்டப்பேரவைகளில் பெண் உறுப்பினர்கள்

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சட்டப்பேரவைகளில் பங்கேற்கவிருக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் மாற்றம் கண்டுள்ளன. கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 11 பெண்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள். புதுச்சேரியில் 1996-ல் அதிமுகவைச் சேர்ந்த அரசி என்பவர் சட்டப்பேரவை உறுப்பினரானார். அதன் பிறகு 2021 தேர்தலில்தான் நான்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் ஒரு பெண்கூடத் தேர்தலில் வென்று உறுப்பினராக முடியவில்லை. மேற்குவங்கத்தில் 292 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 40 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 29 பேர் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 2016-ல் வங்கத்தில் 41 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. 2011 தேர்தலில் அம்மாநில வரலாற்றிலேயே அதிகபட்சமாக 14 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அது 2016 தேர்தலில் எட்டாகக் குறைந்து 2021-ல் ஆறாகக் குறைந்துள்ளது. 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் 12 பெண்கள் கால்பதிக்கவிருக்கிறார்கள். ஆனால் 2016-ல் அமைந்த சட்டப்பேரவைக்கு 21 பெண்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x