

‘தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான்
வளரும் உறவல்லவா’
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம். தீவிர சிகிச்சையில் இருக்கிற முத்துராமன், ஒருவேளை தான் இறந்துவிட்டால் மறுமணம் செய்துகொள்ளுமாறு மனைவி தேவிகாவிடம் உறுதி கேட்பார். கணவனுக்குப் பாடலிலேயே பதிலளிப்பார் தேவிகா. கண்ணதாசன் எழுதிய ‘சொன்னது நீதானா’ எனத் தொடங்கும் பாடலின் வரிகள் இவை.
ஒரு பெண், கணவனின் மறைவுக்குப் பின் வேறு ஒருவரோடு புதிய வாழ்வைத் தொடங்க நினைப்பது பாவமானது என்று கருதும் பிற்போக்கைப் பெண்ணின் மொழியாகக் காட்டியது இப்பாடல். கணவனைத் தெய்வமாகக் காணும் பெண், அத்தெய்வத்துக்குப் பிறகு காதலை வேறொருவரிடம் கொள்வது சாத்தியமா?
நம்பிக்கை தரும் இளையோர்
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சன்ஹிதா என்கிற இளம்பெண், தந்தை இறந்த பின், தாய் கீதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்பினார். தாய் குறித்த தகவலை வலைத்தளத்தில் பகிர்ந்து, அவருக்குப் பொருத்தமான மணமகனைத் தேடினார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரைத் தாய்க்கு மணம் செய்துவைத்திருக்கிறார்.
தாயுடன் எடுத்த செல்பி ஒன்றைப் பதிவிட்டு, மது அருந்தாத, சைவ உணவுப் பழக்கமுள்ள, தன் தாய்க்குப் பொருத்தமான மணமகன் வேண்டுமென்று ட்விட்டரில் பதிவிட்ட அசதா என்கிற பெண்ணையும் தந்தையின் துன்புறுத்தல் களால் விவாகரத்து பெற்ற 44 வயதான தாய்க்குத் தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாகப் பொருத்தமானவரைக் கண்டு மணம் செய்துவைத்த கேரளத்தைச் சேர்ந்த கோகுல் என்கிற இளைஞரையும் குறித்து அறிந்தபோது, மண உறவு பற்றிய மரபுசார் கற்பிதங்களை இளந்தலைமுறையினர் உடைத்தெழுகிறார்கள் என்னும் நம்பிக்கை துளிர்க்கிறது.
அம்மாவுக்கு மகன்களின் கைம்மாறு
கள்ளக்குறிச்சி, வளையாம்பட்டைச் சேர்ந்த சித்தார்த்தன் கருணாநிதி, மகிழ்நன் ஆகிய சகோதரர்கள் தங்கள் தாய் செல்விக்கு மறுமணம் செய்துவைத்திருக்கிறார்கள். மூத்த மகனான சித்தார்த்தன் கருணாநிதி தன் தாயைப் பற்றி வலைத்தளத்தில் எழுதிவந்த தொடரை ‘Right to Marry’ என்கிற தலைப்பில் மின்னூலாக வெளியிட்டிருக்கிறார். அந்நூலைப் பற்றியும் அவர் தாயுடன் இணைந்தளித்த நேர்காணல்களையும் வாசித்தபோது, ஒழுக்கம்சார் கேள்விகள், அவமதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், தனிமை எனத் தனித்து வாழும் பெண் எதிர்கொள்ளும் துயரம் உணரக் கிடைத்தது. அம்மாவுக்கு மணம் செய்யும் தூண்டுதல் பெற்றதற்குத் தந்தை பெரியாரை வாசித்ததும் ஒரு காரணம் என்று சித்தார்த்தன் பகிர்ந்துகொண்டிருந்தார்.
பிள்ளைகள் இருப்பதாலேயே மறுமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு உரிமை வழங்கிய நம் சமூகம், அதே பிள்ளைகளைக் காரணமாகக் கொண்டே பெண்களுக்கு மறுமணத்தை மறுத்துவந்தது. சுயவதைகளோடு பெண் தன் தனிமையைப் பிள்ளைகளின் எதிர்காலத்துக் காகத் தேர்ந்துகொண்டபோது தியாகத்தின் வண்ணங்கள் அவளுக்கு அழகூட்டின. பெண்ணுடலைப் புனிதங்களின் இருப்பிடமாக்கி, சமூக மதிப்பீடுகளை உடன் பொதிந்து வைத்த சமூகத்தில் அவர்களின் இயல்பூக்கங்களும் தேவைகளும் ஒழுக்கக்குறைவான செயல்களெனப் பார்க்கப்படுகின்றன.
மேலே பேசப்பட்ட மறுமணங்களைப் பற்றிய செய்திகள், தாங்கள் மட்டுமே அவரது வாழ்க்கையில்லை; தாய்க்கெனத் தனிப்பட்ட விருப்பும் தேவையும் உண்டு என்பதை உணர்கிற, கல்வியும் விசாலமான பார்வையும் சுயசிந்தனையும் கொண்ட இளையவர்களைக் காட்டுகிறது. அதேவேளையில், ஒரு பெண் தன் வாழ்வு குறித்துத் தானே தனித்து முடிவெடுப்பவளாக இருக்க முடியவில்லை அல்லது வேறொரு புறச் சார்பின்றி முடிவெடுக்கும் திடத்தை இன்னும் அவள் பெற்றுவிடவில்லை. பிள்ளைகளோ, சுற்றமோ, நட்போ யாரோ ஒருவர் அவளுக்காக, அவளது துயரங்களுக்காக, தனிமைக்காகப் பேச வேண்டியிருக்கிறது என்னும் சார்புநிலை இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
எல்லாக் காலத்துக்குமான பேசுபொருள்
தன் துணையாகிய ஆண் குரங்கு இறந்துவிட்டால், கைம்மையுடன் வாழ விரும்பாத பெண் குரங்கு, மரம் தாவுதலைக்கூடக் கற்றறியாத தன் இளங்குட்டியைச் சுற்றத்தாரிடம் கையடையாகக் கொடுத்துவிட்டு, உயர்ந்த மலையிலிருந்து குதித்துத் தன் உயிரைத் துறந்து விடும் மலைநாட்டைக் கொண்டவன் தலைவன். கடுந்தோட்கரவீரனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் உண்டு. மானுடரல்லாப் பிற உயிர்கள்மீதும் நாம் விரும்பும் சமூக நியதிகளை ஏற்றிப் பாடும் வழக்கம் கொண்டி ருக்கும் படைப்பு மரபு, அச்சமூகத்தின் மேன்மைகளையும் அதற்கு நிகரான இழிவுகளையும் காட்டி நிற்கிறது.
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி யைப் போல் கணவனின் பாதத்தில் உயிரை விடுதல், கணவனின் சிதையில் விழுந்து உயிர் துறத்தல், கைம்மையேற்று மகிழ்வைத் துறந்து குழந்தைகளுக்காக வாழ்தல் என்னும் நிலைகளில்தான் கணவனுக்குப் பிறகான பெண் வாழ்வை நம் வரலாறு பதிவுசெய்திருக்கிறது.
‘கணவர்களை இழந்தார்களேயன்றி,.. அவர்கள் கல்லாய் விடவில்லை’ என்று பாரதியும் ‘வையக மீதினில் தாலி இழந்தவள் மையல் அடைவது கூடுமோ?, துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன் தொட்டதை வைதிகம் ஏற்குமோ?’ என்று பாரதிதாசனும் எழுதுவதைக் காண்கையில் பெண்களின் மறுமணம் அந்தக் காலத்திலேயே பேசப்பட வேண்டிய பொருளாயிருந்தது என்பதை அறியலாம்.
மறுமணத்துக்கான போராட்டம்
1856-ல் ‘இந்து விதவைகள் மறுமணச் சட்டம்’ இயற்றப்பட்டது. எனினும் டாக்டர் அம்பேத்கர் முன்னெடுத்த இந்துச் சட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1956-ம் ஆண்டு முதல், விவாகரத்து பெண்களது சட்டபூர்வமான உரிமையானது. அதன் பிறகே பெண்ணுக்குச் சொத்தும், மறுமணத்தில் பிறந்த குழந்தைகளுக்குச் சட்டபூர்வமான குழந்தைகள் என்கிற அங்கீகாரமும் கிடைத்தன.
‘குமரன்’ பத்திரிகை ஆசிரியரும் சுயமரியாதை இயக்கப் பின்னணி கொண்டவருமான சொ.முருகப்பன், 1934-ல் ‘மாதர் மறுமண இயக்கம்’ என்னும் அமைப்பைக் காரைக்குடியில் தொடங்கினார். அந்த இயக்கத்தின் தொடர் பிரச்சாரப் பணியாக ‘மாதர் மறுமணம்’ என்கிற இதழும் வெளியானது. பிரம்ம சமாஜம் போன்ற தனி அமைப்புகள் கைம்பெண்களுக்காகப் பல முயற்சிகளை எடுத்துவந்த சூழலில், வீரேசலிங்கம் பந்துலு, சகோதரி சுப்பலஷ்மி போன்றவர்கள் கைம்பெண் மறுமணத்துக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் அரும்பாடுபட்டனர்.
மேதாவிகளின் மேதமை
விந்தனின் ‘மறுமணம்’ சிறுகதையும் சூடாமணி யின் ‘இறுக மூடிய கதவுகள்’ கதையும் பேசும் பொருள் ஒன்றுதான். விந்தனின் கதைநாயகன் கணவனை இழந்த சீதாவிடம் கடிதத்தில் தன் விருப்பத்தைச் சொல்ல, அவளோ அவருக்கென வைத்த திலகத்தையும் பூவையும் மீண்டும் சூடுவது இந்த ஜென்மத்தில் நடவாது என்று மறுக்கிறாள். அவனோ, ‘பெண்களை சபலசித்தம் உள்ளவர்கள் என்று சொன்ன மேதாவிகளின் மேதமையை எண்ணி நான் சிரித்தேன். வைர நெஞ்சுடன் அவள் வாழும் முறைமையை எண்ணி வியந்தேன்’ என்று புளகாங்கிதம் அடைகிறான்.
சூடாமணியின் நாயகியோ, ‘இந்த அங்கிளை உனக்கு அப்பாவாகப் பண்ணட்டுமா’ என்று தன் மகனிடம் மறுமண விருப்பத்துக்குச் சம்மதம் கேட்க, மகனோ ‘என் அப்பாதான் செத்துப் போனாரே, நீ என் அம்மா. அம்மாவெல்லாம் தப்புசெய்யக் கூடாது’ என்று சொன்ன பதிலில் தன் மனக் கதவுகளை இறுக மூடிக்கொள்கிறாள்.
மறுமணம் கூடாது என்று மறுக்கும் பெண்ணின் மனநிலையில் பெருமைகொள்ளும் ஆணையும், தாய் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருதும் இளம் மனத்துக்காகத் தன் விருப்பத்தை மறந்துவிடும் பெண் மனத்தையும் சமூக வார்ப்பாக்கும் இந்த எழுத்துக்குள் இருக்கும் ஆண், பெண்ணைக் கண்டடைந்துவிடுகிறது நம் மனது.
(பெண் வரலாறு அறிவோம்)
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com