கண்ணீரும் புன்னகையும்: சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

கண்ணீரும் புன்னகையும்: சர்ச்சைக்குள்ளான விளம்பரம்
Updated on
2 min read

சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

சென்ற திங்கள்கிழமை அன்று பாகிஸ்தானின் பிரபல உருது தினசரியான ‘ஜங்க்’ வாசகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பாலிவுட்டின் பிரபல நடிகை நர்கிஸ் ஃபக்ரி, ஜங்கின் முகப்புப் பக்கத்தில் ஜாஸ் எக்ஸ் ஸ்மார்ட் போனுக்குக் கொடுத்திருந்த விளம்பரம்தான் அது. ஒரு உருது செய்திப் பத்திரிகையில் இரண்டு பக்கங்களில் இந்த வண்ணமயமான விளம்பரத்தைப் பார்த்து பாகிஸ்தானின் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நர்கிஸ் ஃபக்ரி ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். “ கலாச்சார ரீதியாக சில காட்சிகள் வெவ்வேறு ஊடகங்களில், சந்தைகளில், வேறுபட்ட பார்வையாளர்களிடம் வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். பாகிஸ்தான் சந்தையில் குறிப்பிட்ட மொபைல் போனைப் பிரபலப்படுத்தவே நான் விளம்பரத் தூதராக ஒப்புக்கொண்டேன். எனது புகைப்படத்தை சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டியது அவர்களின் பொறுப்பும் கூட” என்று கூறியுள்ளார்.

கருப்பினப் பெண்ணுக்கு எம்மி விருது

தொலைக்காட்சி நடிகை வையோலா டேவிஸுக்கு 2015-ம் ஆண்டின் எம்மி விருது கிடைத்துள்ளது. இந்தச் சிறப்புமிக்க விருதைப் பெறும் முதல் ஆப்ரிக்க-அமெரிக்கப் பெண் இவர். “எனது கற்பனையில் எப்போதும் ஒரு கோட்டைக் காண்கிறேன். அந்தக் கோட்டுக்கு அப்பால் பசுமை வயல்கள், அழகிய பூச்செடிகளைப் பார்ப்பேன். அங்கே வெள்ளைப் பெண்கள் தங்கள் கைகளை நீட்டி என்னை வரவேற்றபடி அந்தக் கோட்டின் மேல் நிற்கின்றனர். ஆனால் அந்த இடத்துக்குப் போகும் வழி தெரியவில்லை. அந்தக் கோட்டைத் தாண்ட முடியுமா என்றும் தெரியவில்லை” என்று தனது ஏற்புரையில் அற்புதமாகப் பேசியுள்ளார் வையோலா டேவிஸ்.

ஹாலிவுட்டிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பிரதான நடிகையாக வளர்வதற்கு முன்னர் கருப்பினப் பெண்ணாகப் பல பாகுபாடுகளையும் ஏமாற்றங்களையும் அனுபவித்தவர் இவர். தெற்கு கரோலினாவில் பிறந்த டேவிஸ், தனது ஐந்து வயதுவரை தனது சகோதரி டையானைப் பார்க்கவேயில்லை. ஏனெனில் அவரது பெற்றோருக்கு இரு குழந்தைகளையும் சேர்த்து வளர்க்கும் அளவு வசதியில்லை. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடிப்பின் மீது தனக்கு இருக்கும் காதலை உணர்ந்தார் டேவிஸ். நியூயார்க்கில் உள்ள ஜூலியர்ட் கல்லூரியில் நடிப்புப் பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தே இந்த இடத்தைப் பிடித்துள்ளார் டேவிஸ்.

பாலியல் வன்முறை புகார்கள் அதிகரிப்பு

பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் பெருநிறுவனங்களும், மாநில அரசுகளும் அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் சுணக்கமே காட்டிவருகின்றன.

விசாகா கமிட்டியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும் புகார் கமிட்டி ஒன்றை நிறுவனத்திற்குள்ளேயே அமைத்து பாலியல் தொல்லைப் புகார்களை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைக் கமிட்டிகளை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கமிட்டிகளை அமைத்தபிறகு, அது தொடர்பான விவரங்கள் மற்றும் விசாரணையின் நிலைமைகளை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லாத சூழலே தற்போது நிலவுகிறது. காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டாலொழிய இதுபோன்ற வழக்குகள் வெளியில் வருவதேயில்லை.

ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அமைத்துள்ள விசாகா கமிட்டி குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆண்டறிக்கை வழங்க வேண்டுமென பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கோரியுள்ளார். இந்த யோசனையை நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சரான அருண் ஜேட்லி மறுத்துள்ளார். பெருநிறுவனங்களை நடத்துபவர்கள் இதுபோன்ற வெளிப்படையான அறிக்கைகளைக் கட்டாயமாக்குவதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அளவில் பெருநிறுவனங்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் நூறு நிறுவனங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு மடங்கு அளவில் பாலியல் புகார்கள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலைச் சொன்னவரும் அருண் ஜேட்லியேதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in