Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

தேர்தல் களம்: பெண்கள் ஏன வாக்களிக்க வேண்டும்?

தேர்தல் நெருங்கிவிட்டது. பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றன. இலவச வாஷிங்மெஷின்களைத் தருவோம் என்பதில் தொடங்கி, திருமண உதவித் தொகை அதிகரிப்பு, ஒரு வருடப் பிரசவ கால விடுமுறை, நகரப் பேருந்துகளில் பெண்களுக்குப் பயணச் சலுகை, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு, இலவச நாப்கின்கள் எனப் பெண்களை நோக்கி வைக்கப்படுகிற வாக்குறுதிகளின் பட்டியல் நீள்கிறது.

அரசியலைப் பற்றியும் சமூகப் பிரச்சினைகளையும் அக்கறையோடு விவாதிக்கும் என் உறவுப் பெண் ஒருவர், தவறாமல் வாக்களிக்கவும் செய்வார். “வெளி வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தைப் பராமரிக்கும் பணிகளை மட்டும் செய்யும் பெண்களுக்கு மாதாமாதம் ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 தருவோம் என்று முதலில் அறிவித்த கட்சிக்குத்தான் வாக்களிக்கப் போகிறேன்” என்றார் அவர்.

ஆக, வாக்குறுதிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன என்றும் சொல்ல லாம். தேர்தல் அறிக்கைகளில் தரப்படும் வாக்குறுதிகளைப் பொதுவாகப் பல அரசியல் கட்சிகள் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. தேர்தல் காலத்தோடு மறந்துவிடுவார்கள். அடுத்த தேர்தல்வரை காத்திருந்து நாம் மீண்டும் நினைவூட்ட வேண்டும். அரசியல் கட்சி களோடு பல ஆண்டுகாலம் போராடித் தனது கோரிக்கைகளை ஓரளவுக்கு நிறை வேற்றிக்கொண்ட ‘கட்டுமானத் தொழிலாளர்களின் சங்கம்’ சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையும் இதைத்தான் சொல்கிறது.

மாற்றத்துக்குத் துணைநிற்போம்

இல்லத்தரசிகளாக மட்டும் பெண்கள் இல்லை. வீட்டுப் பணிகளையும் செய்துகொண்டு வேலைக்கும் செல்கிற பெண்கள்தான் மிக அதிகம். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமைப்புசாரா தொழிலில் பெண்களே பெருமளவில் இருக்கின்றனர். அதிலும் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பெண்கள்தான் அவர்களில் கணிசமானோர். மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் வாழ்பவர் களிலும் பெண்களே பெரும்பான்மை. அதிலும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகம். “மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றினால் உண்மையாகவே நல்லதொரு மாற்றத்துக்கு வித்திடும்.

“கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்றும் இளவயது திருமணங்கள் பல மடங்காய் அதிகரிக்கின்றன என்றும் சர்வதேச அளவில் பேசப்படுகிற சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கி றோம். மறுபக்கத்தில் கரோனாவுக்கு எதிரான களப்பணியில், ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்க ளாகப் பெண்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணிகளுக்கான அங்கீகாரம் பற்றியெல்லாம் தேர்தல் களத்தில் போதுமான அளவுக்கு விவாதங்கள் இல்லை” என்கிறார் வரலாற்று ஆய்வாளரும் பெண்ணிய எழுத்தாளருமான வ.கீதா.

கல்வியைக் கருத்தில் கொள்வோம்

கரோனா ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடியால் திருமண வயதுக்கு முன்னதாகவே சிறுமிகளுக்கு சீக்கிரமே திருமணம் செய்துவிடுகிறார்கள் அல்லது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். பெண்கள் கல்வியில் சமீப காலம்வரை ஏற்பட்டிருக்கிற முன்னேற்றத்தை இந்த கரோனா நெருக்கடி பின்னுக்குத் தள்ளு கிறது. கரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடிக்கிடப்பதால் வேலை செய்யும் குழந்தைகளின் சதவீதம் 28.2 முதல் 79.6 வரை அதிகரித்துள்ளது என்கிறது ‘குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புப் பிரச்சாரம்’ எனும் அமைப்பு சமீபத்தில் தமிழகத்தில் நடத்திய ஆய்வறிக்கை.

கரோனா பெருந்தொற்றால் பெரு மளவுக்குப் பாதிப்பு அடைந்திருப்பவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்தாம். பொது முடக்கம் நீக்கப் பட்டாலும்கூட ஒரு சில வகுப்புக்களைத் தவிர, ஏனைய வகுப்புகள் இணைய வழியி லேயே நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் பள்ளி சென்று ஓராண்டாகிவிட்டது. இப்போது நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வீசத்தொடங்கியிருக்கிற சூழலில் திறக்கப்பட்ட பள்ளிகளும் மூடப்பட்டன. அடுத்த கல்வி ஆண்டிலாவது பள்ளிகள் வழக்கம்போலச் செயல்படுமா என்பதற்கான எந்த உத்தரவாதமும் தற்போதைக்கு இல்லை. அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் பெரிய அளவுக்கு கேள்விக்குறியாகி உள்ளது.

குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது வீட்டில் இருக்கும் பெண்களின் பொறுப்பு என்கிற புரிதல்தான் இன்னமும் நடைமுறையில் உள்ளது. வேலை இழப்பு, ஊதியம் பாதியாகக் குறைப்பு உள்ளிட்டவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வீட்டுவேலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பணிச்சுமையோடு குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பும் கூடுதல் சுமையாகப் பெண்களுக்கு வந்துள்ளது. இத்தகைய பிரச்சனைகளை வரும் காலங்களில் எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பது பற்றிய விவாதங்கள் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்கிறார் வ.கீதா.

பெண்களின் வாக்களிக்கும் திறன்

பெரும்பாலான ஆண்கள் சாதி, மதம், தேசியம் உள்ளிட்ட அடையாளங் களைப் பார்த்து வாக்களிக்கும் அதே நேரத்தில் பெண்கள் தங்கள் வாழ்க்கைத்தரத்தின் மீது நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரக் காரணிகளைப் பொறுத்தே வாக்களிக்கிறார்கள் என்கின்றன தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் முறை பற்றி எடுக்கப்பட்ட ஆய்வறிக்கைகள்.

128 ஆண்டுகளுக்கு முன்பாக, நியூசிலாந்து நாட்டுப் பெண்கள்தாம் உலகிலேயே முதன் முதலில் 1893ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். சவுதி அரேபியப் பெண்கள் மிகச் சமீபத்தில் 2015ஆம் ஆண்டில்தான் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். பல நாடு களில் வெள்ளைக்காரப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்த பல பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் கருப்பினப் பெண்களுக்கும் பூர்வகுடிப் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.

இந்தியாவில் 1947இல் சுதந்திரத்துக்குப் பின் 1950இல் குடியர சானபோது அனைத்துப் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இந்திய அரசியல் சாசனத்தில் சாசனக்கூறு 326இல் உறுதிசெய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே, 1921ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் என்கிற பெயரில் இருந்த தமிழ்நாடு, சொத்துள்ள பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளித்திருந்தது என்பதையும் நாம் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தியாவில் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 10 ஆண்களுக்கு 3 பெண்கள் வாக்களித்தனர். தற்போது 10 ஆண்களுக்கு 7 பெண்கள் என்ற விகிதத்தில் வாக்களிக்கிறார்கள். அதிலும் தமிழ்நாடு, நாகாலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏறக்குறைய ஆண்களின் வாக்களிப்புச் சதவீதத்துக்குச் சமமாகப் பெண்களும் வாக்களிக்கின்றனர்.

தமிழக அரசியலில் வலிமையான அரசியல் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு நடைபெறுகிற சட்டப்பேரவைத் தேர்தல் இது. பல்வேறு கட்சிகளிலும் சில பெண் தலைவர்கள் இருக்கவே செய்கின்றனர். தற்போதைய தேர்தல் களத்திலும் பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பஞ்சாயத்துத் தேர்தல்களில் 50 சதவீத இடங்களைச் சில மாநிலங்கள் பெண்களுக்கு ஒதுக்கி யிருந்தாலும் சட்டப்பேரவையில் போதுமான அளவுக்குப் பெண்கள் நிறுத்தப்படவில்லை.

பல உரிமைகளைப் போலவே வாக்காளர் உரிமையும் பெண்களுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அனைத்துவிதமான வன்முறையி லிருந்து பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சம வாய்ப்பு என சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் தங்களது பங்கேற்பை உறுதிப்படுத்தும்வகையில் நாம் வாக்களிக்க வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் பெண்ணியச் செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: veni0211@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x