

‘‘உங்களது சந்தோஷம் கிடைப்பதற்காகப் பிற மனிதர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். உங்களுக்கு சந்தோஷம் வேண்டும் என்றால் அதை நீங்கள்தான் கட்டமைக்க வேண்டும்’’ - பிரபல அமெரிக்கக் கருப்பினப் போராளியும் எழுத்தாளருமான ஆலிஸ் வாக்கர் (Alice Walker).
அவ்வாறு தனக்கான சந்தோஷத்தை, தனது வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டவர்தான் சண்முகபிரியா. பெரிய கல்விப் பின்புலம் இல்லை. ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சராசரிப் பெண்ணின் வாழ்க்கைதான் பிரியாவுடையதும், சில வருடங்கள் முன்பு வரை. ஆனால், இன்று அவர் ஒரு பிஸியான ஓவியர். இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணித்துக்கொண்டிருக்கிறார். பல பெரிய கடைகளும் நிறுவனங்களும் அவரது ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். திருமணம், குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு நமக்கு பிடித்த துறையில் பயணிப்பது பலருக்கும் வாய்ப்பதில்லை. வாழ்க்கைச் சூழல்தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. அதிலும் பெண்களுக்கு, அவர்கள் என்ன உடை உடுத்த வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்று இன்னமும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சமூகச் சூழலில் தாங்கள் விரும்பிய பணியைச் செய்ய அவர்களுக்கு வாய்ப்பதில்லை.
பிரியாவுக்கும் அதே நிலைமைதான். பிரியாவும் அதற்காகப் பெரிதாகக் கவலைப்படவில்லை. திருமணத்துக்கு பின்னர் பிரியாவின் மென்மையான கலைஉணர்வை அவரது குடும்பம் புரிந்துகொள்ளவில்லை. சில வருடங்களில் குடும்ப வாழ்வில் சிக்கல். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது விருப்பம் இல்லாமலே விவாகரத்துவரை சென்று திருமண வாழ்வு முறிந்துவிட்டது.
அதுவரை வீடு, கடைவீதி, உறவினர் வீடு என்று சென்றதைத் தவிர தனியாக வெளி இடங்களுக்கு சென்று பழக்கமில்லை. ஆதரவான பெற்றோர் இருந்தாலும் உறவினர் பலரின் துக்க விசாரிப்புகள், எதிர்காலத்தைப் பற்றிய பயமுறுத்தல்கள், மறுதிருமணத்துக்கான ஆலோசனைகள். இவை எல்லாவற்றிலுமிருந்து தப்பிக்க தனக்குப் பிடித்த ஓவியக் கலையைத் தேர்ந்தெடுத்தார். சிறு வயதிலிருந்தே கோயில்களுக்குச் சென்றால்கூட தெய்வங்களைவிட அங்குள்ள பாராம்பரிய ஓவியங்களின் நுட்பத்தை அலசுவது பிரியாவின் இயல்பு. ஆர்வம் இருந்ததைத் தவிர முறையான பயிற்சி இல்லை. எனவே, மகாபலிபுரத்தில் ஓராண்டு தங்கி, பாரம்பரிய ஓவியத்தின் அடிப்படைகளைக் கற்றார். பிறகு ஓவியர் பாலாஜியிடம் மாணவியாகச் சேர்ந்து தஞ்சாவூர் ஓவியம் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றார். குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளித்தார்.
புதிய மனிதர்களோடு பழகுவதில் அதுவரை தனக்கு இருந்த பயத்தைப் போக்கிக்கொண்டு சண்முகபிரியா தனக்கான ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ஓவியத் துறையைத் தாண்டி வேறு வேறு துறைகளிலும் அவரது நட்பு வட்டம் விரிந்தது.
மகாபலிபுரம், சென்னை லலித்கலா அகாடமி உள்ளிட்ட இடங்களில் அவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. பாரம்பரிய ஓவியர்களிடையே பரிச்சயமான முகமாக அவர் மாறினார். தவிர நாகாலாந்து, கேரளம், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் அந்தந்த மாநிலங்களின் கலை பண்பாட்டுத் துறை ஒருங்கிணைக்கும் பாரம்பரிய ஓவியங்கள் குறித்த பட்டறைகளில் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஓவியக் கலைப் பிரிவில் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.
“துணை இல்லாமல் வாழ முடியுமா என்று நினைத்த நான், தனித்து வாழ்வதன் சுவையை உணர்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். என்னுடைய தேவைகளுக்காக யாரையும் சார்ந்து இருக்காமல் எனக்குப் பிடித்த வேலை, பொருளாதார சுதந்திரம், நட்பு என்று சுதந்திர மனுஷியாக நான் இயங்குவதற்கு எனக்கு எனது கலை உதவி செய்கிறது” என்று கூறும் சண்முகபிரியா, பெண்கள் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் அவர்கள் சுயமாக இருக்க வேண்டும், எதற்காகவும் தங்களுடைய சுயத்தை இழக்கவோ விட்டுக்கொடுக்கவோ கூடாது என்கிறார்.
சராசரிப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தேர்வான குடும்பக் களம் ஒரு முறை கைநழுவிப் போனாலும் ஓவியம் என்ற தனக்கான களத்தைக் கைக்கொண்டு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் சண்முகபிரியா.
- சண்முகபிரியா